ஒரு சாது எப்பொழுதும் விஷ்ணு நாமமே கதி என நினைத்து ஒரு மரத்தடியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
‘ஐயா! நான் உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.
‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை. ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்', என்றது பறவை.
‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.
‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.
தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்', என்றது பறவை.
சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவைகளிடம் கொடுத்தார்.
‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்', என்றார் சாது.
பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.
‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்', என்றது பறவை.
‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?' என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.
‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.
பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் “குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”, என்ற உண்மை புரிந்தது', என்று சொல்லி விட்டு பறந்தது பறவை.
அப்போது சாது பேசினார். பறவையே முதலில் நீ தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தாய். துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் ‘துணை'. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை.
நாமும் இலக்கை அடைய ‘குச்சி/விஷ்ணு நாமம்' என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.
ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு ‘குச்சியை'ப் போல மனிதர்களுக்கு 'விஷ்ணு நாமம் கருவியாகிறது.
‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. ‘விஷ்ணு நாமம்' என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் பரந்தாமன் நாமமே நம்மை நல்வழியில் நடத்துகிறது.