வளம் பெருக்கும் வராகர் தலங்கள்

திருமாலின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் குறித்த கோயில்கள் தென்னகத்திலும் வட தேசத்திலும் இருக்கின்றன. அதில் சில திவ்ய தேசங்கள் குறித்துக் காண்போம்.

திருமலை

திருமலை முதலில் வராகரின் திருக்கோயிலாகவே இருந்தது. அங்கே இருக்கக்கூடிய புஷ்கரணிக்கு சுவாமி புஷ்கரணி என்று  பெயர். அதன் கரைமேல் ஆதிவராக சுவாமி கோயில் உள்ளது. இப்பொழுதும் முதல் பூஜை வராகருக்குத்தான்.

ஸ்ரீ வேங்கடவராகாய  சுவாமி புஷ்கரணி தடே  
ச்ரவணர்ஷே துலா மாஸே ப்ராதுர்பூதாத் மனே நம:   

திருவேங்கட மலையில் சுவாமி புஷ்கரணியில் ஐப்பசி மாதம் திருவோண நன்னாளில் தோன்றிய வராகப் பெருமாளுக்கு வணக்கம் என்பது இந்த சுலோகம்.பாத்ம புராணத்தில் திருமலை வராகத் தலமாக இருந்தது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.

பொற்குடத்திலிருந்து தொடர்ந்து பசும்பாலை ஒரு புற்றின்  துவாரத்தில் அரசன் அபிஷேகம் செய்யத்  தொடங்கியபொழுது அதன் உட்பகுதியில் இருந்து வராகப்பெருமாள்  தோன்றினார் என்று இருக்கிறது.

ஆயினும் இங்கே ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு தான் பிரத்தியேகமான பூஜைகள் நடைபெறுகின்றன. காரணம், ஒரே திருத்தலத்தில், இரண்டு பெருமாளுக்கு முக்கியப் பூஜைகள் நடப்பது உசிதம் இல்லை என்பதால், (ஸ்ரீ வராகப் பெருமாள் முன்னதாக இத்தலத்தில் எழுந்தருளி இருந்தாலும்,) ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பலிபீட பூஜை, ஹோமம், பிரம்மோத்சவம்  முதலியவை நடத்தும் படியாக ராமானுஜர் நியமித்தார்.

ஆயினும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பூஜை நடப் பதற்கு முன்பே, வராக பெருமாளுக்கு பூஜை செய்யப்படவேண்டும். யாத்திரை செய்பவர்கள் வராக தீர்த்தத்தில் நீராடி வராக விமானத்தை வணங்கவேண்டும் என்று பகவத் ராமானுஜர் வரையறை செய்தார்.

பவிஷ்யோத்ர புராணத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனக்கு இடம் வேண்ட அவருக்கு  வராகப்பெருமாள் இடம் வழங்கியதாக குறிப்பு இருக்கிறது. ஸ்ரீநிவாசப் பெருமாள் வராகப் பெருமாளிடம் கேட்கிறார். “இம்மலையில் உம்மைக் காணும் பாக்கியம் பெற்றேன். இங்கேயே நான் வசிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. கலியுகம் முடியும் வரையில் எனக்கு வசிக்க இடம் அளிக்க வேண்டுகிறேன்” என்று விண்ணப்பித்தார்.

அதற்கு அவர், ‘‘என்னிடம் இருந்து விலை கொடுத்து வசிக்கும் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் “என்று கூற, அது கேட்டு ஸ்ரீநிவாசன், “இங்கு எல்லோரும் எனக்கு முன்பு உம்மையே வணங்குவர். பால் திருமஞ்சனமும் நைவேத்தியமும் உமக்கே நடைபெறும். இப்படி உமக்கு முக்கியத்துவமாக நடத்தி வைப்பதையே உயர்ந்த விலைபொருளாகச் சமர்ப்பிக்கிறேன்” என, வராகப்பெருமாளும் சீனிவாசனுக்கு நூறு அடியாக உள்ள ஸ்தலத்தைக் கொடுத்தார் என்று புராணத்தில் இருக்கிறது.

ராமானுஜர் வராகப்பெருமாளுக்கு ஒரு உற்சவ மூர்த்தியையும் பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ஒருநாள் அத்யயன உற்சவம், வராக ஜெயந்தி உற்சவம் நடத்தினார். திருமலையில் வராகர் தோன்றிய ஐப்பசி திருவோண தினத்தன்றும் சிறப்பாக உற்சவம் நடத்தி வைத்தருளினார். இன்றும் அப்படியே நடந்து வருகின்றது. இன்றும் வராகரை வணங்கி விட்டே மலையப்பனை வணங்க வேண்டும் .அப்பொழுது தான் வழிபாடு பூரணத்துவம் பெறும்.

ஸ்ரீமுஷ்ணம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். விருத்தாச்சலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மனிதர்களால் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றிய மூர்த்திகளில் ஒன்று.இத்தகைய தானே தோன்றிய மூர்த்திகளை “ஸ்வயம் வியக்தம்” என்று வழங்குவார்கள்.

அப்படி எட்டு தலங்களை குறிப்பிடுகிறது வைஷ்ணவம். அதில் ஒன்று ஸ்ரீமுஷ்ணம். மற்றவை திருவரங்கம், திருவேங்கடம், அகோபிலம், பத்ரிகாஸ்ரமம், சாளக்கிராமம், புருஷோத்தமன், தோத்தாத்திரி விண்ணை முட்டும் கம்பீரமான கோபுரம் ஏழு நிலையுடன் பார்க்கப் பரவசம் தரும்.

நீண்ட சந்நதி தெரு. கோபுரத்துக்கு முன்னால் உயர்ந்த பீடத்துடன் கூடிய கருடக் கொடி மரம். மேலே அம்பாரியில் அமர்ந்த நிலையில் கருடாழ்வார். உள்ளே அழகிய சிறிய நான்கு கால் மண்டபம். இடதுபுறத்தில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு தனிச் சந்நதி. உள்ளே முதலில் நூற்றுக்கால் மண்டபம். அகன்ற பெரிய மண்டபம். கோபுரத்தின் முதல் நிலையை கோஷ்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருவடியைப் பார்க்கலாம்.

திருவடிகளைச் சேவித்த பின்னர்தான் வராகப் பெருமாளை வணங்கிச் செல்வது வழக்கம். நூற்றுக்கால் மண்டபத்தின் வலப்புறம் நம்மாழ்வார் சந்நதி. நேராக கொடிமரம், பலிபீடம், வேலைப்பாடமைந்த கருடாழ்வார் சந்நிதி ஆகியவையும் இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் அமைந்துள்ளன. இதைக் கடந்து சென்றால் மிக அற்புதமான புருஷசூக்த மண்டபத்தை நாம் காணலாம். அது முழுக்க முழுக்க கலைப் பொக்கிஷமாக சிற்பக்கூடம் ஆக அமைந்திருக்கும் எழிலான மண்டபம்.

அங்கே உயிர் ஓவியங்களாக கண்ணில் நிலைபெற்று நின்றிருக்கும் பல சிற்பங்களை  நாம் காணலாம்.அதையும் தாண்டி உள்ளே சென்றால் விசாலமான மகா மண்டபம்.அதற்குள் மிக அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய திருஉண்ணாழியும் அர்த்த மண்டபமும் காணலாம். இதற்கு உள்ளேதான் வராகப் பெருமாள் இடுப்பில் கை  வைத்துக்கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றி யதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். ஸ்ரீதேவி பூதேவியுடன் அத்தனை அழகுடன் காட்சி தருகிறார். ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டுகளில் இவர் “ஆதி வராக நாயனார்” என்றே குறிப்பிடுகிறார்.

அருகே.சந்தான கோபாலனையும் காணலாம். பற்பல உற்சவத் திருமேனிகளும் இங்கு உள்ளன.மூலவரையும் உற்சவரையும் வணங்கி விட்டு திருவலமாக வந்தால் குழந்தை அம்மன் சந்நதி என்றும் வழங்கப்பெறும் தாய்மார் எழுவரின் திருவுருவங்களைக் காணலாம்.

இங்குள்ள அம்புஜவல்லி தாயாரின் தோழிகள் என இவ்வெழுவரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்களும், திருமணத்தடை இருப்பவர்களும் இந்த சப்த கன்னிகைகளை வணங்குகின்றனர். இதனையடுத்து தெற்கு நோக்கிய அழகான விஷ்வக் சேன மூர்த்தி சந்நதி. வட கிழக்கு மூலையில் அமைந்துள்ள யாகசாலை.

தொடர்ந்து வேதாந்த தேசிகர், திருமங்கை ஆழ்வார், மணவாளமாமுனிகள், திருக்கச்சி நம்பி ஆகியோரின் சன்னதிகள். தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி இடம்பெற்றுள்ளது. இவற்றைச் சேவித்துக் கொண்டுவந்தால், தாயார் சந்நதியை அடையலாம்.

இரு கரங்களிலும் மலர் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்துள்ள அம்புஜ வல்லித்   தாயாருக்கு,  ஊஞ்சல் மண்டபமும், அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் கொண்ட தனிக்கோயில் அமைப்பிலேயே சந்நதி உள்ளது.திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் தாயார் சன்னதி போலவே ஆண்டாளுக்கும் தனிச் சன்னதி உண்டு.

இதனை ஒட்டி ராமானுஜருக்குச் சந்நதி உள்ளது. அதனை அடுத்து உடையார் மண்டபம் என்று வழங்கப்பெறும் விழா மண்டபம். அதில் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தது மிக அழகான முறையில் காட்சிதரும் வேணுகோபாலன் சன்னதியும்,அதனை ஒட்டி வடபுற கோபுரவாசல் சொர்க்க வாசலாகவும்  அமைந்துள்ளது.

இவை அனைத்தையும் ,வணங்கி விட்டு வெளியே வந்தால், திருமதில் கோபுரத்துக்குத் தென்கிழக்கில் “நித்ய புஷ்கரணி” என்று வழங்கப்படும் திருக்குளமும், அதன் கரையில் லட்சுமி நாராயணர் சன்னதியும், அஸ்வத்த நாராயணன் என்று வழங்கப்பெறும் அரசமரமும், அதன் கரையிலே 3 அனுமன் சன்னதிகளும்  இடம்பெற்றுள்ளன.

இந்த புஷ்கரணியில்தான் சித்திரை மாதம் தெப்போற்சவம் நடைபெறும். இது தவிர சந்நதிக்கு நேர் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நதித் தெருவில் திருவடிக் கோயில் என்று அனுமனுக்கு தனி சந்நதி உள்ளது. இத்திருக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

அத்வைத, விசிஷ்டாத்வைத, மாத்வ  சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களின்  மடங்களும் இங்கே உள்ளன.அனந்தபுரம் மாவட்டம் முப்புரி என்ற ஊரைச் சேர்ந்தவர் உப்பு வெங்கட்ராயர். அவர் தமிழகத்தில் வங்கக் கடற்கரை ஓரம் கிள்ளை என்கிற ஊரிலேயே வந்து தாசில்தாராகப் பணிபுரிந்தார் அவர் ஸ்ரீ முஷ்ணம் வராகபெருமானிடம் மிகுந்த பக்தி மிகுந்தவர்.

வராகப்பெருமாள் மாசிமகத்தில் கிள்ளைக்கு கடலாடுவதற்காக வருகின்றபொழுது பக்தர்கள் தங்கும்வசதிகளும், அன்னதானம் செய்வதற்கான ஏற்பாடுகளும்  செய்திருந்தார். கிள்ளைக்கு வருகின்ற பெருமாள் உற்சவம் காணவும் அபிஷேக ஆராதனைகள் ஏற்கவும் திருநாள் தோப்பு எனுமிடத்தில் 175 ஆண்டுகளுக்கு முன்னரே மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார்.

இந்தப் பகுதியை சையத் ஷா குலாம் முகைதீன் ஷூத்தாரி என்கிற முகலாய ஜமீன்தார் உப்பு வெங்கட்ராயருடன் நட்பு கொண்டிருந்தார். அந்த நட்பின் காரணமாக 16 காலனி நஞ்சைநிலம் சுத்த தானமாகவும் ஆறுகாணி சாசுவத தானமாகவும் நிலம் அளித்தார். இந்த சையத் ஷா என்பவர் 250 ஆண்டுகளுக்கு முன்னரே கிள்ளை தர்காவில் அடக்கமாயுள்ள ஹஜரத் சையத் ரகமத்துல்லா ஷூத்தாரி என்பவரின் பேரன் ஆவார்.

உப்பு வெங்கட்ராமையர் கிள்ளை ஜமீன்தார் தந்த கொடையில், பரம்பரையாக  ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீவராக சந்நதியில் அகண்டம், கிள்ளை மாசிமக மண்டகப்படி, கிள்ளை ஆஞ்சநேயர் கோயில் பூஜைகள் ஆகியவற்றை நடத்திவருகின்ற ஏற்பாட்டை செய்தார்.

மாசிமக உற்சவத்தின்போது கிள்ளையில் இஸ்லாமியர்கள் வசிக்கும் தைக்கால் இடத்திற்குச் செல்லுதல், அவர்கள் வழிபாட்டினையும் மரியாதைகளையும் ஏற்றல், ஹாஜியார் பதில் மரியாதை செய்தல் ஆகிய நடைமுறைகள் உடையார்பாளையம் ஜமீன்தார் காலம் முதல் இன்று வரை நடைமுறையில் உள்ளன.

அதைப்போலவே ஐரோப்பியர்கள் குறிப்பாக தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக 1826 ஆம் ஆண்டு பணிபுரிந்த ஹைட் என்பவர் சில அணிகலன்களையும் தேர்த் திருவிழாவிற்கு தேர்வடம் ஆக இரும்புச் சங்கிலியும் இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

இக்கோயிலில் பல வாகனங்கள் இருப்பினும் ஓவியங்கள் தீட்டப் பெற்ற பல்லக்கு ஒன்று இங்கு உள்ளது. அதில் தல புராணக் காட்சிகள், லட்சுமி வராகர், ஸ்ரீ யஞ்ஜ  வராகர், உற்சவமூர்த்திகள், இசை, நடனம் ஆகியவை ஓவியமாகத் தீட்டப்பெற்ற இந்த பல்லக்குஅற்புதமான  கலைக் கருவூல மாகவும் திகழ்கிறது.

திருவிடந்தை

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில்  உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், மூலவரின் சந்நதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சந்நதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு  ஒரு தனிச்சந்நதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஒரு தனிச்சந்நதி உள்ளது.

தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஒரு பெண்ணாக, வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும், அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். திருவிடவெந்தை  கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார்.

இடது மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் உபதேசிக்கும் கோலம். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டுவிடுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்துச் செல்வது இத்தலத்தின் வழக்கம்..

தஞ்சை

மாமணிக்கோயில் வராக பெருமானிடம் பகைகொண்டு போர் தொடுத்து அழிந்த  இரண்யாட்சன் மகள் ஜல்லிகை என்பவள், திருமாலிடம் பேரன்பு பூண்டு கடுந்தவம் புரிந்து திருவருள் பெற்றாள். அவளுக்கு ஸ்வேதா, சுக்லா என்ற இரண்டு பெண் பிள்ளைகளும், தண்டகாசூரன் என்ற ஆண் பிள்ளையும் பிறந்தனர்.

பெண்கள் பெருமாளிடம் பக்தியோடு இருக்க, தண்டகன் தன்னுடைய தாய்வழிப் பாட்டனாரைக் கொன்ற வராகப் பெருமாளிடம் கோபம் கொண்டான். பழி வாங்க நினைத்தான். அவன் தாயார் சொல்லியும் கேட்கவில்லை. கடும் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவன். ஆணவம் அதிகரிக்க  தாத்தாவைப் போலவே முனிவர்களுக்குக் கொடுமைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

முனிவர்கள் இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாது திருமாலிடம் சென்று வேண்டினர். அவரும் தண்டகன் போர் செய்ய விரும்பிய வராகத் திருமேனியோடு காட்சி தந்தார். அவனோடு போர்புரிந்தார். கடைசியில் தண்டகா சூரனைக் கொன்றார்.அவன் அன்னை பெருமாளிடம் பத்தி கொண்டிருந்ததால், தண்டகாசூரனுக்கும்  பரமபதம் நல்கினார்.இத்தனை  சிறப்பு பெற்ற தலமே இப்பொழுது வெண்ணாற்றங்கரை என்று வழங்கப்படும் தஞ்சை மாமணிக் கோயில் ஆகும். எனவே இத்தலம் வராகத்  தலமாக வழங்கப் பெறுகிறது.

கல்லிடைக்குறிச்சி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் கல்லிடைக்குறிச்சி உள்ளது.சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் இத்தல வராகர் பாடப்பெற்றிருக்கிறார். குபேரன்ஆதிவராகரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

மூலவர் ஆதிவராகராகவும் உற்சவர் லட்சுமிபதி எனும் திருநாமத்துடன்  தாயார் பூமாதேவியுடன் காட்சி தருகிறார். கருவறையில் பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் பெருமாள் தரிசனமளிக்கிறார். குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் சிலாசாலிகுரிசி எனப்பட்டது - இதுவே பின்னர் மருவி ‘கல்லிடைக்குறிச்சி’யாயிற்று.

திருமண வரம் வேண்டுவோர்க்கு தட்டாமல் அவ்வரத்தை அருள்வதால் இத்தலம் கல்யாணபுரி என்று அழைக்கப்படுகிறது. இத்தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரவும் கடன்கள் தீர்ந்து செல்வவளம் பெருகவும் ஆதிவராகர் அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

புஷ்கர்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற அழகிய நகரத்தில் அமைந்துள்ள வராஹர் கோயில் பிரசித்தி பெற்றது. இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இந்த நகரம் புனிதமானது. இத்தலத்து வராஹரை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இங்குள்ள தல புராணமும் பூமி பிரளயத்தில் மூழ்கியபோது,​​விஷ்ணு ஒரு காட்டுப்பன்றியாக அவதாரம் எடுத்து பூமியை அதன் கொம்புகளில் காப்பாற்றினார் என்றே விளக்கப்படுகிறது.

உலகைக் காத்தவராக வராஹ பகவான் வணங்கப்படுகிறார். மரண சுழற்சியில் இருந்து பக்தர்களைத் தப்பிக்க வைத்து, செல்வமும், பூமியும் வழங்குகிறார். விஷ்ணுவின் வராஹ வடிவத்தின்  குறிப்பிடத்தக்க பெரிய கோயிலாக வட நாட்டில் இக்கோயில் கருதப்படுகிறது. விஷ்ணு புராணம் மற்றும் தசாவதார கதையின் விவரங்களை தெரிந்துகொள்ள இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

பிற திருத்தலங்கள்

ஸ்ரீ வில்லிபுத்தூரில் புஷ்கரணி கரையில் ஸ்ரீ வராக பெருமாள் சன்னதியும் இருந்ததாகத் தெரிகின்றது. திருக்கடல்மல்லை வராக க்ஷேத்திரம் என்ற பெயர் பெற்றதாகத் தெரிகிறது. திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் சன்னதிக்கு பின்புறத்தில் ஞான பிரான் சன்னதியில் லக்ஷ்மி வராகர் எழுந்தருளியிருக்கிறார்.

புகழ் வாய்ந்த காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள திருக்கள்வனூர் என்று மங்களாசாசனம் செய்யப்பெற்ற வராக சந்நதி உள்ளது.காஞ்சி வரதராஜர் கோயிலிலும், மதுரை கள்ளழகர் கோயிலிலும் இவருடைய சந்நதிகள் இருக்கின்றன.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!