பகவான் நம்மைப் போல் யாரிடமாவது பேசுவாரா? எப்படி , யாரோடு பேசுவார்? ஆம். எல்லோருடனும் பேசுகிறார். எப்போதும் பேசுகிறார். ஆனால் யார் அவர் பேச்சைக் கேட்கிறார்கள்? 

கடவுள் தான் மன சாக்ஷி. அவர் பேசுவது நாம் எந்த மொழி பேசுகிறோமோ அந்த மொழி. அவர் வேறு யாருடனும் நம்மைப் பற்றி பேசுவதில்லை.

ஒவ்வொருவருடனும் தனியே அவர்களது பிரச்னைகளுக்கு வழி காட்டுகிறவர். உபதேசிப்பவர். அறிவுரை தருபவர். எல்லாம் இலவசம், சுயநலமற்ற செயல்.
மனசாட்சியின் இன்னொரு பெயர் ஆத்மா அதன் வெளிப்பாடு தான் உணர்வு, அது தான் பாஷை சத்யம் தர்மம், நேர்மை இது தான் அவர் கோட்பாடு. எண்ணங்கள் வேறு உணர்வு வேறு. எண்ணம் மாறிக்கொண்டே வரும். உணர்வு சத்யத்திலும் நேர்மை நியாயத்தை அடிப்படையாக கொண்டது. தவறு செய்யாது. அதை மதிக்காமல் நாம் தவறு செய்கிறோம்.

நமது உள்ளுணர்வை வெளியே சுவற்றில் தொங்கும் நாம் வணங்கும் கடவுளின் உருவத்தில் பெறலாம். கோவிலில் விக்ரஹம் முன்னால் நின்று அவரை உணர்ந்து நன்றிக் கண்ணீர் வடிக்கலாம். பகவான் பேசுவாரா என்று கேட்டோமே . அவர் வார்த்தைகளிலும் பேசுவார். வரப்போவதை சொல்லுவார், நடக்கப்போவதை அறிவிப்பார். செய்யவேண்டியதை புரியும்படியாக சொல்வார்.  

என் கனவில் வந்தார், அசரீரி கேட்டது என்கிறோமே, அதெல்லாம் தான் அவரது வார்த்தைகள் . யாரோ ஒரு குரு, ஆசார்யன் மூலம், நீதி நூல்கள் மூலம், வேத புராண நீதிகளிலின் மூலம் உணர்த்துவார். அதெல்லாம் நமக்கு புரிந்த வார்த்தைகளில் தானே நமக்கு அறிமுகமாகிறது. என்னை ஜப்பானிய மொழியில் ஒரு நீதி நூலைப் படி என்றால் எப்படி புரிந்து கொள்வேன்? அர்த்தம் தப்பாக புரிந்துகொண்டு தான் நாம் அவஸ்தைகள் எல்லாம் படுகிறோம்.

அனுபவம் சில உண்மைகளை நமக்கு உணர்த்தி வழிகாட்டுகிறது. அதற்கு தான் மஹான்கள் புண்ய புருஷர்கள் சரித்திரம் எல்லாம் படித்து அவர்கள் அனுபவத்தால் நாமும் உண்மை அறிகிறோம். வழிநடத்த எல்லாமே நம் வாழ்வில் தான் நிகழ வேண்டும் என்கிற கட்டாயம் தேவையற்றது. நெருப்பு தொட்டால் சுடும் என்று சூடு பட்டு தெரிந்து கொள்ளவேண்டாமே .

நாம் பகவான் உள்ளுணர்வாக அறிவுறுத்துவதை கவனிக்காமல், லக்ஷியம் பண்ணாமல் நமக்குத் தோன்றியபடி, விரும்பியபடி சுய லாப நோக்கோடு, அஹங்காரத்தோடு செய்யும் காரியங்கள், சொல்லும் வார்த்தைகள் எண்ணங்கள் தான் நம் அனுபவங்கள். அதன் விளைவு சாதகமாக இருந்தால் திருப்தி, எதிர்பாராத விதமாக அமைந்தால் துக்கம் துயரம், அப்போது கடவுளை நொந்து என்ன பயன்?
இப்போது பட்டினத்தார் சொன்ன தன் வினை தன்னைச் சுடும் என்பதின் அர்த்தம் கொஞ்சம் புரியும்.

ஆத்மாவாக உள் நின்று ஒளிர்பவனின் மெல்லிய குரலை நாம் கேட்பதில்லை என்று சொன்னேனே. அது பகவானுக்கும் தெரியும். ஆகவே சில அற்புத மனிதர்களை அவ்வப்போது தோன்றச் செயது எல்லோருக்கும் பொதுவான சில அருமையான நீதிகளை, நல்வழியை, நேர்மையை, நியாயங்களை, நிதர்சனங்களை, வார்த்தையாக புரியும்படியாக ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள், புராணங்கள், பிரசங்கங்கள், அறிவுரைகள், உபன்யாசங்கள்,, நூல்கள், என்று பல வழியில் கீதை, ராமாயணம், பாகவதம் மாதிரி எல்லாவற்றையும் யோசித்து அளித்திருக்கிறான். தானே அவதரித்து அனுபவ பூர்வமாக காட்டி இருக்கிறான். அதையும் லக்ஷியம் செய்யாவிட்டால் யாரை நொந்து என்ன பயன்?

கலியுகத்தில், வீடியோ, டிவி, புத்தகங்கள், வாட்ஸாப்ப், முக நூல் பத்திரிகைகள், என்று பல விதங்களில் இதெல்லாம் அடிக்கடி நம் கவனத்துக்கு சிலர் அளிக்கிறார்களே , அதில் ஜாக்கிரதையாக சரியானதை தேர்ந்தெடுத்து ஞானம் பெறலாம். எதிலும் கலப்படம் உள்ள காலம் அல்லவா இது? இப்படி எல்லா இடங்களிலும் எப்போதும் உள்ளதை தான் பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்த பரி பூரணானந்தம் என்று மஹான்கள் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் பகவான் ஒரு வழிகாட்டி, நாம் செய்யும் காரியங்களை கவனித்துக்கொண்டிருப்பவன். குறுக்கிடுபவன் அல்ல. நாம் தினை விதைத்தால் தினை அறுப்போம், வினை விதைத்தால் வினை தான் நம்மை வந்து அடையும். இதற்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்?