எவ்வளவோ பேர் அழகர்களாயிருக்கலாம்.
ஆனால் அவர்கள் நிரந்தரமான அழகர்களா?.
எப்போதும் ரம்யமானவர்களா, என்றால் பதில் சொல்வது கடினம்.
ஸ்ரீ ராமரின் கல்யாண குணங்களை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஸ்ரீராமபிரானின் பேரழகினுடைய சிறப்பு, அவன் என்றைக்கும் ரம்யமான பேரழகன்.
அவனுடைய அழகு எப்போதும் குறைவதோ, காண்பவர்க்கு சலிப்போ தருவதில்லை.
அதனால் ஸ்ரீராமனுக்கு 'ஏக ப்ரிய தர்சனன்' - என்றைக்கும் எல்லோருக்கும் ப்ரியமானவன், என்பதுண்டு.
ஸ்ரீராமபிரானின் அழகில் மயங்காதவர்களோ பாராட்டாதவர்களோ இதிஹாசங்களில் துர்லபம்.
தசரதச் சக்ரவர்த்தி ஸ்ரீ ராமரை காலையில் இருந்து மாலை இரவு வரை ராமரை அணு அணுவாக அழகை ரசித்தவர்.
வேலை நேரம் தவிர ஸ்ரீ ராமனை ஒரு நிமிடம் கூட பிரிய மனமில்லாதவர்.
அவர் மட்டும் அல்ல அவரைவிட
கைகேயியும்தான்.
தவமிருந்து பெற்ற தெய்வத்தை காட்டிற்கு கூட்டிக் கொண்டு போகும் விஸ்வாமித்திரரை மனதால் கடிந்து கொண்டார் தசரதர்.
பின் லோக ஷேமத்திற்காக வசிஷ்டாதி முனிவர்கள் கூற விஸ்வாமித்திரருடன் அறைமனதாக அனுப்புகிறார்.
விஸ்வாமித்ர முனிவர் ஸ்ரீராம லக்ஷ்மணர்களைப் பெற்றுக் கொண்டு காட்டு வழிகளில் நடக்கிறார்.
ஸ்ரீராம லக்ஷ்மணர்கள், ராஜ குமாரர்கள் மாலை நேரம் வந்ததும் நடந்த களைப்பில் சோர்ந்து உறங்கி விட்டனர்.
அடுத்த நாள் பொழுது விடிந்தும் குழந்தைகள் எழுந்திருக்க வில்லை.
முனிவர் ஸ்ரீராமபிரானை மெதுவாக 'கௌசல்யா சுப்ரஜா ராமா' என்று துயில் எழுப்புகிறார்.
இந்த வரிக்கு இரண்டு பொருள்கள். கௌசல்யா தேவியின் சத் புத்திரனான ஸ்ரீராமனே என்று ஒரு பொருள்.
ஸ்ரீராமன் என்ற ஸத் புத்திரனைப் பெற்ற கோசலையே என்று இன்னொரு பொருள்.
முனிவரின் நோக்கம் ஸ்ரீராமபிரானை துயில் எழச் செய்வது.
அதை மறந்து இங்கு கௌசலையைப் பற்றி பேசுவதில் என்ன அவசியம் என்று வியாக்யானர்கள் யோசித்தனர்.
வைஷ்ணவ பூர்வாசிரியர்கள் என்னும் குரு மார்களின் வியாக்யானங்களுக்கு ஈடு எதுவும் கிடையாது.
இது பற்றிய ஸ்ரீ சூக்தி ஓன்று சொல்லும்:
'முனிவன், உண்ணப் புக்கு வாயை மறப்பார் போலே, தான் அதிகரித்த காரியத்தை மறந்து, பெற்ற வயிற்றுக்கு பட்டம் கட்டுகிறவனாய் , ஒரு திருவாட்டி பிள்ளை பெற்ற படி என்னே, என்று கௌசல்யரைக் கொண்டாடுகிறான். வடிவழகு படுத்தும் பாடு' - எத்தனை அழகான வார்த்தைகள்.
இதன் பொருள் ஸ்ரீராமனை துயில் எழுப்பிட வந்த விஸ்வாமித்திரர், அதை ஒதுக்கி வைத்து, ஸ்ரீ ராமனின் அழகினால் மெய்ம்மறந்து ஸ்ரீராமன் சம்பந்தப் பட்ட விஷயங்களை வியக்க ஆரம்பிக்கிறார். கோசலையின் திரு வயிறு இத்தனை அழகிய புத்திரனைப் பெற்றது பற்றி விசாரணையில் ஆழ்கிறார்.
மிதிலாபுரியில் ஸ்ரீராமன் நடந்து வருகிறான். ஆண்களும் பெண்களும் அவன் திவ்ய சொரூபத்தைக் கண்டு மதி கலங்கி நிற்பதைக் கண்ட கம்பன் சொல்கிறான்:
தோள் கண்டார், தோளே கண்டார், தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஓத்தார்.
- மிதிலாபுரி வாழ்ந்திடும் ஒருவர் ஸ்ரீராமனின் வலது தோளைக் கண்டாராம். அதன் அழகினில் மயங்கிப் போனவருக்கு பார்வை வேறெங்கும் நகரவில்லை. இடது தோளின் அழகினை ரசித்த வேறொருவருக்கு வேறெதையும் பார்க்கும் எண்ணம் ஏற்பட இல்லையாம்.
கமலம் போன்ற ஸ்ரீராமனின் தாள்களைளைக் கண்டவர்களுக்கும், அவனுடைய அகன்ற கைகளைக் கண்டவர்களுக்கும் இதே நிலை.
ஸ்ரீராமனின் ஒரு அங்கத்தின் அழகை ரசித்தவர்களுக்கு, வேறெந்த அங்கத்தையும் காணும் வாய்ப்பே உண்டாக வில்லை.
வாள் போன்ற கண்களைக் கொண்ட பெண்கள் எவருக்கும் ஸ்ரீராமனின் வடிவை முழுவதும் காண வாய்ப்பு ஏற்படவில்லை.
எப்படி ஒவ்வொரு சமயத்தினரும் தங்களுக்குப் பிடித்த இறைவனைப் பற்றி முழுவதும் அறிய முடியாத வண்ணம் திகைத்து இருப்பார்களோ , மிதிலாபுரி மக்களும் ஸ்ரீ ராமனின் அழகை முழுதும் அறிய முடியாத வண்ணம் திகைப்பில் ஆழ்ந்திருந்தார்கள்.
மூல ராமோ விஜயதே
குரு ராஜோ விஜயதே
ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.