ஸ்ரீராம நவமி மர்யாதா புருஷோத்தம் எனப்படும் ஸ்ரீராமரின் அவதார தினத்தை ஒட்டிக் கொண்டாடப் படும் ஒரு பண்டிகை. ஸ்ரீராமர் அவதரித்த இந்த தினத்தில் விரதம் இருப்பவர்களும் உண்டு. அல்லது பங்குனி மாதம் அமாவாசையில் இருந்து ஆரம்பித்து ராம நவமி முடிய ஒன்பது நாட்கள் விரதம் இருப்போர்களும் உண்டு. வட இந்தியாவில் இந்த ஒன்பது நாட்களும் ராமாயணம் படிப்பார்கள். இங்கேயும் சிலர் சுந்தர காண்டம் படிப்பதுண்டு. சுந்தரகாண்டத்தில் ஒன்பது நாட்கள் பாராயணம் செய்கிறாப்போல் ஸர்க்கங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார்கள். அவற்றை அமாவாசையன்று ஆரம்பித்துப் படிக்கலாம். எது ஆரம்பித்தாலும் முதலில் விநாயகர் பூஜை ஆரம்பித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும். பின்னர் முதல் நாளைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ஸர்க்கங்களைப் பாராயணம் செய்யவேண்டும்.

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிவேதனமும் புத்தகத்திலேயே குறிக்கப் பட்டிருக்கும். சுந்தரகாண்டத்தை நாமே பாராயணம் செய்வதே உகந்தது. இயலாதவர்கள் வேறு எவரையாவது அழைத்துப் பாராயணம் சொல்லச் சொல்லிக் கேட்கலாம். ஒவ்வொரு நாளுக்கும் உரிய நிவேதனங்களைச் செய்து வைத்துக்கொண்டு பாராயணம் முடிந்ததும் வெற்றிலை, பாக்கு, பழம், பூ இவற்றோடு நிவேதனம் செய்ய வேண்டும். இதைத் தவிரவும் மஹா நைவேத்தியம் என்னும் சாதம் நிவேதனம் செய்யவேண்டும். கடைசி நாள் பாராயணம் முடியும் அன்று ஸ்ரீராம நவமியாக இருக்கும். அன்று சுந்தரகாண்டப் பாராயணம் முடிந்தாலும், கட்டாயமாக பட்டாபிஷேஹ ஸர்க்கத்தையும் பாராயணம் செய்யவேண்டும்.

அன்று சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, சுண்டல், வடைப்பருப்பு என்னும் பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து வெள்ளரிக்காய், மாங்காய் சேர்த்தது, பானகம், நீர்மோர் போன்றவை கட்டாயம் இருக்கவேண்டும். காட்டில் ஸ்ரீராமர் இருந்தபோது அங்கே கிடைத்த பயறு, உளுந்து போன்ற பொருட்களையும், நீரையும் குடித்தேத் தவ வாழ்க்கை வாழ்ந்ததால் பச்சைப் பயறும் நீர் மோரும் கட்டாயமாக வைக்கவேண்டும் என்பது சிலரின் கருத்து. இது குறித்து நிச்சயமாய்த் தெரியாது. மேலும் வெயில்காலம் என்பதாலும் பானகம், நீர்மோர் போன்றவை கொடுத்திருக்கலாம். அன்றைய தினம் பாராயணத்தை நாமே முடித்திருந்தாலும், அல்லது வேறு யார் மூலமாவது பண்ணி இருந்தாலும் தக்ஷணை கொடுத்து விசிறி, குடை போன்றவை தானம் கொடுக்கவேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப விசிறி, குடை போன்றவை. இப்போதெல்லாம் மின் விசிறி இல்லாத வீடே இல்லை என்பதால் இவை எல்லாம் கொடுப்பதில்லை. குறைந்த பக்ஷமாக அன்று நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு அல்லது அக்கம்பக்கம் இருப்போருக்குப் பானகம், நீர்மோர் கொடுத்தால் நல்லது.