பெருமாளை "பராபரன்' என்பார்கள். "பர' என்றால் "மேன்மைக்கெல்லாம் எல்லை'. "அபர' என்றால் "எளிமைக்கெல்லாம் எல்லை'.அவரது குணங்களை மேன்மை, எளிமை என்று இரண்டு கோஷ்டிகளாகப் பிரிக்கலாம்.
ஆனால் இதில் "பரத்வம்' எனப்படும் மேன்மை குணம் தான் அவரிடம் அநேகமாக பிரகாசிக்கும்.
எளிமையை அவரது ஸ்வாதந்திரமும் (சுதந்திரம்) கோபமும் அநேகமாக மூடியிருக்கும். இதை "நெருப்பு கிளர்ந்தாற் போல்' என்பர்.
தணல் "தக தக' என எரியும். ஆனால் மேலே சாம்பல் மூடியிருக்கும்.சாம்பலைத் தட்டினால் தான் தணலின் தகதகப்பு தெரியும். அதுபோல பெருமாளிடம் நிறைய குணங்கள் உண்டு.
பக்தனை ரட்சிக்க அபரிமிதமான குணங்கள் உண்டு.ஆனால் அது சாம்பல் மூடிய தணல் போல காணப்படும்.தாய்மார்களிடம் கேட்டால் தெரியும். சின்னகோலைவைத்து சாம்பலைத் தட்டினால் தணலின் தகதகப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது இது மாதிரி தணல் விஷயங்கள் நம் ஸ்திரீகளுக்கு தெரியுமா தெரியாதா என்று கேட்டு விட வேண்டாம்.
பெரியவர்கள் தங்கள் நாளில் பார்த்ததை வைத்து தான் இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். பிராட்டி அந்த சாம்பலைத் தட்டுகிறாள்.உடனே பெருமானின் கல்யாண குணங்கள் பொத்துக் கொண்டு வெளியே கிளம்புகின்றன.
இதுவரையும் நீங்கள் பெருமானைச் சேவித்தீர்கள். பிராட்டியை சேவித்தபிறகு பெருமானிடம் போனால் இன்னும் அதிகமாக அவரது குணம் பிரகாசிக்கும். "மாமாயன் மாதவன் வைகுந்தன்' என்று பாடுகிறாள் ஆண்டாள். இதில் மாமாயனும் வைகுந்தனும் பெருமாள். நடுவில் இருக்கும் மாதவத்துவமே பிராட்டி.
அதனால் தான் இதை நடுவில் போட்டு எழுதினாள் ஆண்டாள்.பிராட்டியின் சம்பந்தம் இருந்தால் தான் அவனே மாமாயனாகவும் வைகுந்தனாகவும் முடியும்.