வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை, நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் கோலாகலமாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை, நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் கோலாகலமாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பவுர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பெறுகிறது. மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலிப் பண்டிகையின் முக்கிய நோக்கம். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை அமைகிறது.
ஹோலிப் பண்டிகை வரலாறு!
இரண்யகசிபு என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தைக் கேட்டறிந்தவன். அதன் காரணமாகப் பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவனாக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்குப் பிடிக்கவில்லை. மகன் என்றும் பாராமல், பிரகலாதனைப் பல கொடுமைகள் செய்துவந்தான். இதன் ஒரு கட்டமாகப் பிரகலாதனைத் தீயிலிட்டுக் கொளுத்த உத்தரவிடுகிறான்.
இதற்காகத் தன் சகோதரி ஹோலிகாவை அழைக்கிறான். குழந்தைகளைக் கொன்று தின்னும் அவள், மிகுந்த சக்தி படைத்தவள். நெருப்புக் கூட அவளை எரிக்க முடியாது. எனவே பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு இரண்யகசிபு, ஹோலிகாவுக்குக் கட்டளையிட்டான்.
சகோதரனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்குத் தீ மூட்டப்பட்டது. அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில் எரிந்து ஹோலிகா சாம்பலானாள். பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்பெறுவதாக ஒரு கதை உண்டு.
அதாவது, நல்லனவற்றுக்கு என்றும் அழிவு கிடையாது; தீயனவற்றுக்கு என்றும் வாழ்வு கிடையாது என்பதை விளக்குவதே ஹோலி பண்டிகை. தீமை அழிந்து நன்மைகள் கிடைப்பதால், உள்ளம் துள்ளுகிறதல்லவா? அதையே, ஹோலி பண்டிகையின் போது செய்யப்படும் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன. நம்மிடம் உள்ள தீமைகளை நீக்கி, நன்மைகளை அருளுமாறு இறைவனிடம் வேண்டுவோம்!
வட மாநிலங்களில் இந்தப் பண்டிகையை வண்ண மயமாகக் கொண்டாடுகிறார்கள். ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும்,. திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.