உயர்வாக உள்ள அனைவரும், தனக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டுமென நினைக்கும் ஒரு பண்பு "கீழ்படிதல்".

ஆனால் எந்த நிலையிலிருந்தாலும் நமக்குப் பிடிக்காத விஷயம் இந்தக் கீழ்படிதல்.

கீழ்படிவதால் தனது நிலையிலிருந்து தாம் இறங்கிவிடுவதாகவும், அது தமக்குக் கவுரவக் குறைச்சலாகவும், அது தனது இருப்பினை இழிவுபடுத்துவதாகவும் கருதுவதினால் இது ஒரு விரும்பத்தகாத செயலாகவே பெரும்பாலும் கருதப்படுகிறது.

காலியான ஒரு கோப்பை அல்லது பாத்திரம், குழாயின் "கீழ்" சென்றால்தான் அல்லது ஒரு நீருள்ள பாத்திரத்தின் நீர் மட்டத்தைவிடக் "கீழ்" சென்றால்தான் அது தன்னை நிரப்பிக் கொள்ள இயலும்.

கீழ்படிதல் என்பது இருக்கும்போதுதான் "கற்றல்" என்பது எளிதாக  நிகழ்கிறது. மேற்கண்ட உதாரணத்தையே பார்த்தால், எந்த ஒரு சக்தியைப் பயன்படுத்தி பாத்திரத்திற்குள் தண்ணீரைச் செலுத்துவதைவிட எளிதான வழி நீர் நிரம்ப வேண்டிய பாத்திரத்தைத் தண்ணீருக்குக் கீழ் அமுக்குவதே எளிதானதாக இருக்கிறது.

கீழ்படிதல் என்பதின் அடுத்த பலன், ஒரு நல்ல  ஒத்திசைவினை கொடுப்பதாக இப்பண்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக மலை ஏற்றத்தின்போது கரடுமுரடான பாதையில் ஒருவர்பின் ஒருவராகச் செல்லும்போது முதலில் செல்பவரைப் பிறர் கீழ்படிந்து தொடர்ந்து செல்வதால், செல்கின்ற பாதை பின் தொடர்பவருக்கு எளிதாகி விடுகிறது. மாறாக வரிசையாக பின்பற்றுவோரில் ஒருவர் வரிசையினை விட்டு விலகினால் அந்தக் குழுவின் ஒத்திசைவு மாறிவிடுகிறது.

கீழ்படிதலால் ஓர் அழகும், முழுமையும் கிடைக்கிறது. சிறந்த தச்சனின் கையில் கிடைத்த ஒரு மரம் அழகான சிலையாக வடிவெடுத்துக் கொள்வதற்காக தன்னைத் தச்சனிடம் ஒப்படைத்துக் கொள்கிறது. அப்போது அது செதுக்கப்பட்டும், ஆணிகளாலும் உளிகளாலும் குத்தப்படுகிறது. இவற்றை ஏற்றுக் கொண்டு கீழ்படிவதால் ஓர் அழகிய, பலனுள்ள, முழுமையான சிற்பம் அல்லது மரச்சாமானாக ஆகிறது.

ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் அனைத்து நிலையிலும் கீழ்படிதல் என்பது இருக்கும்போது தான் பிரச்சனைகள், தடைகள் ஏதுமின்றி அமைதியாக உற்பத்திகள் நடந்து கொண்டிருக்கும். கீழ்படிதல் என்பது ஓர் ஒழுங்கையும் உற்பத்தியையும் வழங்குகிறது.

ஆதிசங்கரருக்குச் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்குள் ஒருவருக்கு மட்டுமே குரு முக்கியத்துவம் அளிப்பதாக தங்களுக்குள் அடிக்கடி பேசிக்கொண்டும் இருந்தனர். இதையறிந்த சங்கரர், ஒரு நாள் தனது முக்கிய சீடர் நதிக்கு மறுகரையில் இருந்தவரை உடனே வருமாறு அழைத்தார். அந்தச் சீடரும் குரு அழைத்தவுடன் எதையும் பொருட்படுத்தாது குருவை நோக்கி வந்தார். அவர் தண்ணீரின் மேல் வேகமாக வரும்போது தண்ணீருக்குள் மூழ்கிவிடாமல் அவரது பாதத்தைத் தாமரைப் பூக்கள் தோன்றித் தாங்கிக் கொண்டன. இதைக்கண்ட பிற சீடர்கள் அவரது பெருமையை உணர்ந்தனர். அவர் பத்மபாதர் எனப் போற்றப்பட்டார்.

கீழ்படிந்து செல்வதால் அனைத்து இடங்களிலும் பெருமையும் நன்மையும் வந்து சேரும்.

கீழ்படிதலுக்கு மனோதைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும்.

கீழ்படிவதின் மூலம் நம்மை முழுமையாக்கிக் கொள்வோம்.