ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். கிருஷ்ண பகவானே, தாங்கள் ஏற்கனவே ஆமலக்கி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கூறினீர்கள். பங்குனி மாதத்தேய்பிறையில் (மார்ச்/ஏப்ரல்) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி இப்பொழுது எனக்கு விளக்கி கூறுங்கள். இந்த ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறையையும் அதனால் அடையும் பலனையும் விளக்கமாக கூறுங்கள்.
பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே. இந்த ஏகாதசியின் பெயர் பாபமோச்சனி ஏகாதசி.இதன் பெருமைகளைக் கூறுகிறேன் கேள்.
பழங்காலத்தில் ஒரு முறை இந்த ஏகாதசியின் பெருமைகள் லோமஸ முனிவரால் மான்தாதா மன்னரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஏகாதசி பங்குனி (மார்ச்/ஏப்ரல்) மாதத் தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அகற்றி, வாழ்க்கையின் நரக நிலை அழித்து, அஷ்ட சித்திகளையும் கொடுக்கிறது.
லோமஸ முனிவர் கூறினார். பண்டை காலத்தில் தேவர்களின் பொருளாளரான குபேரன், சைத்ரரதா என்ற ஒரு அழகான வனத்தை கொண்டிருந்தார். மலர்களால் நிறைந்திருந்த அவ்வனம், ரம்மியமான சூழலைக் கொண்டிருந்தது. அவ்வனத்தில் கந்தவர்களும், கின்னர்வரும் பல வகையான ஆடல்களை அனுபவித்து வந்தனர். தேவர்களும் இந்திரனின் தலைமையில் அங்கு வந்து பல வகையான பரிமாற்றங்களை அனுபவித்து வந்தனர்.
அந்த வனத்தில் மேதாவி என்ற பெருமுனிவர் இருந்தார். சிவபெருமானின் தீவிர பக்தரான அவர், தவங்களில் ஈடுபட்டிருந்தார். தேவ மங்கையரான அப்சராக்கள் பல வழிகளில் அவருடைய தவத்தை முறியடிக்க முயன்றனர். அவர்களில் ஒரு புகழ் பெற்ற அட்சரையான மஞ்சு கோஸா, முனிவரின் மனதை கவர்ந்திழுக்க முயன்றாள்.
முனிவரிடம் கொண்ட அச்சத்தால் மஞ்சு கோஸா, முனிவரின் ஆசிரமத்திற்கு சற்று தொலைவில் ஒரு குடில் அமைத்து, அங்கு வீணை வாசித்துக்கொண்டு இனிமையான குரலில் பாடத் தெடாங்கினாள்.
மஞ்சு கோஸா தன் மேனியில் சந்தன பசையை தடவி, ஒரு நறுமண மலர் மாலையை அணிந்து இனிமையாக பாடிக் கொண்டு இருந்தாள். அவளைக் கண்டவுடன் சிவபெருமானின் விரோதியான மன்மதனும் சிவபக்தனான முனிவரைக் கைப்பற்ற முயன்றார்.
ஒரு முறை சிவபெருமான் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். அதனை நினைவில் கொண்டு பழி வாங்கும் நோக்கத்துடன் முனிவரின் உடலினுள் புகுந்தார்.
அந்நேரம் புனித பூனூலை அணிந்து ச்யாவன ரிஷியின் ஆசிரமத்தில் வசித்து வந்த மேதாவி முனிவர் இரண்டாவது மன்மதனைப் போல் காட்சியளித்தார்.
காம இச்சையால் தூண்டப்பட்ட மேதாவி முனிவர் , தன் வழிபாட்டிற்குரிய சிவபெருமானை மறந்தார். பக்திக் தொண்டை கைவிட்டு, அப்பெண்ணின் சங்கடத்தில் விருப்பங்கொண்டு பகலையும் இரவையும் வேறுபடுத்திக் காணும் தன்மையையும் இழந்தார். இவ்வாறாக மேதாவி முனிவர் சிற்றின்பத்தை அனுபவிப்பதில் பற்பல ஆண்டுகளைக் கழித்தார்.
அதன்பிறகு, முனிவர் தன் நிலையில் இருந்து நழுவியதைக் கண்ட மஞ்சு கோஸா சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் செல்ல முடிவு செய்தாள். அவள் மேதாவி முனிவரிடம் கூறினாள். ஓ! முனிவரே. நான் வீடு திரும்ப எனக்கு அனுமதி கொடுங்கள்.
முனிவர் கூறினார். ஓ, அழகிய பெண்ணே, சாயங்காலம் தானே நீ என்னிடம் வந்தாய். இன்று இரவு தங்கியிருந்து காலையில் செல்லலாமே என்றார். முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட மஞ்சு கோஸா திகைப்புற்று மீண்டும் சில ஆண்டுகள், அவருடன் தங்கினாள். இவ்வாறாக மஞ்சு கோஸா அந்த முனிவருடன் ஐம்பத்தி ஏழு ஆண்டுகள். ஒன்பது மாதங்கள், மூன்று நாட்கள் தங்கியிருந்தும் அது அம்முனிவருக்கு வெறும் பாதி இரவு போலத் தோன்றியது.
மஞ்சுகோஸா வீடு திரும்ப வேண்டும் அனுமதி கேட்டாள். முனிவர் கூறினார். ஓ, அழகியே! தயவு செய்து என் வார்த்தைகளை கேள். இப்போது தான் பொழுது விடிந்துள்ளது. நான் காலைக் கடன்களை முடிக்கும் வரையாவது காத்திரு. அப்சரா புன்னகைத்தாள். பிறகு ஆச்சர்யத்துடன் முனிவரிடம் கூறினாள். ஓ, பெருமுனிவரே, தாங்கள் காலைக் கடன்களை முடிப்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் ?இன்னும் தாங்கள் அவற்றை முடிக்கவில்லையா? தாங்கள் என்னுடன் பல வருடங்கள் கழித்துள்ளீர். ஆகையால் தயவுசெய்து காலத்தின் மதிப்பை உணருங்கள்.
அப்சரசின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர் தன் உணர்விற்கு திரும்பி, காலத்தை சரியாக கணக்கிட்டு கூறினார். ஐயகோ, ஓ, அழகிய பெண்ணே நான் என்னுடைய மதிப்புமிக்க காலத்தில் ஐம்பத்தி ஏழு வருடங்களை வீணாக்கி விட்டேனே. நீ என்னுடைய தவத்தை யெல்லாம் கெடுத்துவிட்டாயே. முனிவரின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது.
மேதாவி முனிவர் மஞ்சு கோஸாவை சபித்தார். நீ ஒரு மாயாவி போல என்னுடன் நடந்து கொண்டுள்ளாய். ஆகையால் நீ ஒரு மாயாவி ஆவாயாக, ஓ, பாவப்பட்ட கற்பிழந்த பெண்ணே உன்னால் அவமானப் பட்டேன். இவ்வாறு சபிக்கப்பட்ட மஞ்சுகோஸா தாழ்மையுடன் முனிவரிடம் கூறினாள். ஓ, அந்தணர்களின் சிறந்தோனே, தயவுசெய்து உங்கள் சாபத்தை திரும்பப் பெறுங்கள். நான் பல வருடங்கள் உம்முடன் கழித்துள்ளேன். ஆகையால் நான் உம்முடைய மன்னிப்பிறகு தகுதி பெற்றவள். தயவுசெய்து என்மீது கருணை காட்டுங்கள்.
முனிவர் பதிலளித்தார். ஓ, சாதுவான பெண்ணே, நான் என்ன செய்வேன்? நீ என்னுடைய தவத்தின் செழுமையையெல்லாம் அழித்துவிட்டாய். இருப்பினும், சாபத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறையை உனக்குக் கூறுகிறேன்.
பங்குனி (மார்ச்/ஏப்ரல்) மாதத் தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் பாபமோச்சனி ஏகாதசி அது ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழிக்கவல்லது. நீ இந்த ஏகாதசியை சிரத்தையுடனும் நம்பிக்கையுடனும் அனுஷ்டித்தால் உன்னுடைய மாயாவி நிலை அழிக்கப்படும். இவ்வாறு கூறிய முனிவர் தன் தந்தையான ச்யாவன முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்.
நிலையிழந்த தன் மகளைக் கண்ட ச்யாவன முனிவர் மிகவும் துயருற்று கூறினார். ஐயகோ, ஓ, என் புத்திரனே என்ன காரியத்தை செய்துவிட்டாய். உன்னை நீயே அழித்து கொண்டாயே. ஒரு சாதாரண பெண்ணிடம் இச்சை கொண்டு உன்னுடைய தவத்தின் அனைத்து கஜானாவையும் அழித்துக் கொண்டிருக்க வேண்டாமே.
மேதாவி முனிவர் கூறினார். ஓ, மரியாதைக்குரிய தந்தையே, எனது துரதிர்ஷ்டத்தினால் ஒரு அப்சரையின் சகவாசத்தால் நான் பெரும் பாவம் இழைத்து விட்டேன். தயவு செய்து என்னுடைய பாவ விளைவுகளுக்கு பரிகாரத்தைக் கூறுங்கள். தவறுணர்ந்த தன் மகனின் பரிதாபமான வார்த்தைகளை கேட்ட ச்யாவன முனிவர் கூறினார்.
ஓ, எனது புத்திரனே, பாபமோச்சனி ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் வேரோடு அழிக்கப்படும், ஆகையால் நீ இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்.
தந்தையின் அன்பான வார்த்தைகளைக் கேட்ட மேதாவி முனிவர் , இந்த ஏகாதசியை மிகுந்த ஆர்வத்துடன் அனுஷ்டித்தார். அதன் பலனாக தன் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்பட்டு மிகுந்த புண்ணியவான் ஆனார். அதே வேளையில் மஞ்சு கோஸாவும் இந்த புனிதமான ஏகாதசியை அனுஷ்டித்து, மாயாவி நிலையில் இருந்து விடுபட்டாள். தன்னுடைய திவ்ய உருவத்தைத் திரும்ப பெற்று சுவர்க்கத்திற்கு திரும்பினாள்.
மான்தாத மன்னருக்கு இக்கதையை கூறிய மேலாமஸா முனிவர் கூறினார். என்தருமை மன்னா, இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதாலேயே ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ (அ) கேட்டாலோ ஒருவர், ஆயிரம் பசுக்களை தானமளித்ததன் பலனை அடைவார்.
இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒரு அந்தணரை கொல்லுதல், கருச்சிதைவு, மது அருந்துதல், குருவின் மனைவியுடன் தொடர்பு கொள்ளுதல் உள்பட அனைத்து பாவங்களும் அழிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில், இந்த புனிதமான ஏகாதசி மங்களகரமானதாலும், அனைத்து பாவங்களை அழிப்பதாலும் அனைவரும் இந்த ஏகாதசியை சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும்.