Srimad Bhagavatham
Skandham 01 - ஸ்கந்தம் 01

பகவானின் மகிமையையும், நாம மகிமையையும், பறை சாற்றும் வண்ணம் பல அற்புதமான சரித்திரங்கள் ஸ்ரீ மத்பாகவதத்தில் உள்ளன.

ரத்தினமாலை போன்று பன்னிரண்டு ஸ்கந்தங்களால் கோர்க்கப்பட்ட பாகவத மாலையில் உயர்ந்த நீல ரத்னமான ஸ்ரீ க்ருஷ்ணனின் கதையே ப்ரதானம். பத்தாவது ஸ்கந்தத்தில்தான் ஸ்ரீ க்ருஷ்ண சரித்ரம் சொல்லப்படுகிறது.

அதை பக்தியோடு உருகிக் கேட்பதற்கு நமது மனத்தைப் பக்குவப்படுத்தும் விதமாக முதல் ஒன்பது ஸ்கந்தங்களில் பல பக்தர்களின் சரித்ரங்களை ரஸமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ சுகாசார்யார்.
முதல் ஸ்கந்தத்தில் பாகவதம் தோன்றிய கதையும், நாரதருக்கு பக்தி வந்த கதையும் சொல்லப்படுகிறது. க்ருஷ்ணன் அவதாரத்தை முடித்துக்கொண்டது, பாண்டவர்களின் வைகுண்டாரோஹணம் ஆகியவையும் சொல்லப்படுகின்றன.
எண்ணற்ற ஸ்துதிகளையும், நாம மகிமைகளையும் எடுத்தியம்பும் ஸ்ரீ மத் பாகவதத்தில் ஐந்து ஸ்துதிகளும் ஐந்து கீதங்களும் மிக முக்கியமானவை.

1.குந்தி ஸ்துதி
2.பீஷ்ம ஸ்துதி
3.த்ருவ ஸ்துதி
4.ப்ரஹ்லாத ஸ்துதி
5. கஜேந்திர ஸ்துதி

1. வேணு கீதம்
2. ப்ரணய கீதம்
3. கோபிகா கீதம்
4. யுகள கீதம்
5. ப்ரமர/மதுப கீதம்

இவற்றுள் முதல் இரண்டு ஸ்துதிகளான குந்தி ஸ்துதியும், பீஷ்மஸ்துதியும் முதல் ஸ்கந்தத்தில் ப்ரகாசிக்கின்றன.

இரண்டாவது ஸ்கந்தத்தில் புராண லக்ஷணத்தை அனுசரித்து ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் வர்ணிக்கப்படுகிறது.

மூன்றாவது ஸ்கந்தத்தில்
ப்ரஜாபதிகளின் சரித்ரமும், வராஹ அவதார சர்த்ரமும்.
கபிலோபாக்யானம் மிகவும் ரஸமானது.

நான்காவது ஸ்கந்தத்தில் நர நாராயணர்களின் சரித்ரம், தக்ஷ யக்ஞம், த்ருவ சரித்ரம், வேனனின் கதை, ப்ருது மஹாராஜாவின் சரித்ரம், புரஞ்சனோபாக்யானம், ப்ரசேதசர்களின் கதை
துருவஸ்துதி ஆகியவை உள்ளன.

ஐந்தாவது ஸ்கந்ததில் நாபி, ஆக்னீத்ரன், ரிஷப தேவர் ஆகியோரின் சரித்ரங்கள் சொல்லப்படுகின்றன. ஜடபரதர் என்ற மஹாத்மாவின் சரித்ரம் மிக முக்கியமானது.

ஸ்வர்க, நரகாதி வர்ணனைகள் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன.
ஆறாவது ஸ்கந்தத்தில் சொல்லப்படும் அஜாமிள சர்த்ரம் பாகவத மாலையின் பதக்கமாய் மிளிர்கிறது. தேவாஸுர யுத்தம் வர்ணிக்கப்படுகிறது. இதில் வ்ருத்திராஸுரன் என்ற மஹாபக்தனின் கதையும், அவனது பூர்வ கதையும் அழகாக சொல்லப்படுகிறது. பும்ஸவன வ்ரதத்தின் விதிகள் அழகாய் சொல்லப்படுகிறது.

ஏழாவது ஸ்கந்தத்தில் நமது அரசனான ப்ரஹலாதனின் கதை மிளிர்கிறது. ஒரு ஸ்கந்தம் முழுவதும் நமது அரசனுக்கேயாம். குழந்தையான ப்ரஹலாதன் செய்யும் ஸ்துதி மிக முக்கியமானது.
எட்டாவது ஸ்கந்தத்தில் கஜேந்திரன் ஸ்துதி செய்து சரணாகதி செய்கிறான். அவனது பூர்வக் கதையும்,
மன்வந்தரக் கதைகளும், ஸமுத்ர மதனம் விரிவாகவும் சொல்லப்படுகின்றன.
எட்டாவது ஸ்கந்தத்தின் எட்டாவது அத்யாயத்தில்
எட்டாவது ஸ்லோகத்தில் மஹாலக்ஷ்மி தாயாரின் அவதாரம் சொல்லப்படுகிறது.

பின்னர் வாமன வடுவின் அழகும், பலியை ஆட்கொண்ட சரித்ரமும்,
மத்ஸ்யாவதாரக்கதையும் விவரிக்கப்படுகிறது.

ஒன்பதாம் ஸ்கந்தத்தில் சூர்ய வம்ச வர்ணனத்தில் துவங்கி, நாபாகனின் கதையும், அம்பரீஷன் என்ற மஹா பக்தனின் கதை அழகாய் சொல்லப்படுகிறது. இக்ஷ்வாகு, மாந்தாதா, சௌபரி, திரிசங்கு ஹரிச்சந்திரன், ஸகரன், பகீரதன் ஆகியவர்களைப் பற்றிய விரிவான கதைகளுடன் ராமாவதாரம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. ராமனின் வம்சம், நிமியின் வம்சம், சந்திர வம்சம், புரூரவஸ், பரசுராமாவதாரம், விஸ்வாமித்திரரின் வம்சம், யயாதி வம்சம், குரு வம்சம், துஷ்யந்தன் சரித்ரம், பரத வம்சம், ரந்திதேவனின் கதை, யது வம்சம் ஆகியவை பற்றிய வர்ணனைகளும் உண்டு.
90 அத்யாயங்களையும் இரண்டு பாகங்களையும் கொண்ட பத்தாவது ஸ்கந்தம் ஆச்ரயம் என்று பெரியோர்களால் போற்றப்படுகிறது. மிக மிக விரிவாக ஸ்ரீ க்ருஷ்ணனின் சரித்ரம் சொல்லப்படுகிறது.
ஐந்து கீதங்களும் தசம ஸ்கந்தத்தில் பாடப்படுபவையே.

பதினோராவது ஸ்கந்தம் யதுகுல ஸம்ஹாரம், உத்தவ கீதை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் கலியுக ராஜ வம்ச வர்ணனம், கலிதர்ம நிரூபணம், கல்கி பற்றிய குறிய குறிப்பு, ப்ரளயம் பற்றிய குறிப்பு, பரீக்ஷித்தின் முக்தி, அதர்வண வேத விபாகம், மார்க்கண்டேய சரித்ரம் ஆகியவையோடு நாமவைபவத்தை வலியுறுத்தி ஸ்ரீ மத் பாகவதத்தை நிறைவு செய்கிறார் ஸ்ரீ வியாஸ பகவான்.