மூலவர் : உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள்
உற்சவர் : பேரகத்தான்
அம்மன்/தாயார் : அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி
தீர்த்தம் : நாக தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திரு ஊரகம்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : 
திருமங்கையாழ்வார்

கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும்
காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்
மல்லடர்ந்து மல்லரை யன்றட்டா யென்றும்
மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று
துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே.
- திருமங்கையாழ்வார்

திருவிழா
வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 50 வது திவ்ய தேசம்.

இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
 
பொது தகவல்
இத்தல இறைவன் மேற்கு நோக்கி உலகளந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஸாகர ஸ்ரீகர விமானம் எனப்படும். இத்தல இறைவனை ஆதிசேஷன், மகாபலிச் சக்கரவர்த்தி ஆகியோர் தரிசித்துள்ளனர். 

பிரார்த்தனை
ஆணவம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்
பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்து வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருஊரகம்எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே கொடிமரத்திற்கு எதிரே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருநீரகம், திருக்காரகம்,திருகார்வனம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.

ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் மிகவும் பிரம்மாண்டமானவர். 108 திருப்பதிகளில் இந்த அளவு பிரமாண்ட தரிசனத்தை எங்கும் காணமுடியாது. இதே போல் இங்கு ஆதி சேஷனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நடக்கிறது. இவருக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

தல வரலாறு
மகாபலி சக்ரவர்த்தி என்பவன் அசுர குலத்தை சேர்ந்தவன். இருந்தாலும் நல்லவன். தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்கு மிகுந்த கர்வம் ஏற்பட்டது. நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால், பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார். இதைக்கண்ட மகாபலி,""தாங்களோ குள்ளமானவர். உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான். அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார், வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான்.

பெருமான் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை படித்த மகாபலி தலை குனிந்து, இதோ என் தலை. இந்த இடத்தை தவிர வேறு ஏதுமில்லை, என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பினார்.. பாதாளம் சென்ற மகாபலிக்கு, பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான்.

எனவே பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார். இவனோ பாதாள உலகத்தில் இருந்தான். எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை. எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார்.

இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.

சிறப்பம்சம்
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.
அமைவிடம் : 
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : காஞ்சிபுரம்

திறக்கும் நேரம் : 
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : 
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்,திரு ஊரகம், காஞ்சிபுரம் - 631 502.காஞ்சிபுரம் மாவட்டம்.

போன் : +91- 94435 97107, 98943 88279