Varadharaja Perumal Temple | காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் | திவ்ய தேசம் - 43

மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
உற்சவர் : பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
அம்மன்/தாயார் : பெருந்தேவி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : 
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்

அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின் தித்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் மூத்திமறையாவான் மாகடல் நஞ்சுண்டான்தனக்கும் இறையாவான் எங்கள் பிரான்.
- பூதத்தாழ்வார்

திருவிழா
பிரம்மோற்ஸவம்- வைகாசி - 10 நாட்கள் திருவிழா - பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்று நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வைகுண்ட ஏகாதசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
தல சிறப்பு
பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 நாட்கள் விசேஷ பூஜைகள் செய்வர். 1938, 1979ம் வருடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட இவரை, மீண்டும் 2019ம் ஆண்டில் தரிசனம் செய்தோம்.

சக்கரத்தாழ்வார்
திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 43 வது திவ்ய தேசம்.

பொது தகவல்
நாரத முனிவர்,பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம். இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.
பிரார்த்தனை
இங்குள்ள பெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன. குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்

தங்கபல்லி
இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்தி கடன்களாக இருக்கின்றன.

தலபெருமை
பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார்.பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார். எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு அத்திகிரி என பெயர் வந்ததாம். அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்லவேண்டும்.இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.
பல்லி வரலாறு
ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும் படி சபித்துவிட்டார். பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார். பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.

அத்தி வரதர்
நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது.அதில் தான் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
வினாடிக்குள் தரிசனம்
வரதருக்கு எடுக்கப்படும் வைகாசி பிரம்மோற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதை, "வையம் கண்ட வைகாசி திருநாள்' என்பர். இவ்விழாவின் 3ம் நாளில் சுவாமி, கருடசேவை சாதிப்பார். இந்த கருட சேவையைக் குறிப்பிட்டு சங்கீத மூர்த்தி தியாகராஜர் கீர்த்தனையும் பாடியுள்ளார். சோளிங்கரில் வசித்த தொட்டாச்சாரியார் என்ற பக்தர், இந்த கருடசேவையை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரால் இங்கு வரமுடியவில்லை. மனம் வருந்திய அவர் சோளிங்கரில் உள்ள தீர்த்தக்கரையில் நின்றபடி, சுவாமியை மனமுருகி வழிபட்டார். அப்போது ஒரு வினாடி மட்டும் சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் கருடசேவையின்போது, இப்போதும் சுவாமியை ஒரு வினாடி குடையால் மறைத்து எடுத்து விடுவர்.

தாயாருக்குரிய உற்சவங்கள்
பிருகு மகரிஷி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய மகாலட்சுமி, பெருந்தேவி தாயார் என்று பெயர் பெற்றாள். சரஸ்வதி பூஜை, வைகாசி திருவிழாவில் ஒருநாள், பங்குனி உத்திரம் என ஆண்டில் மூன்று முறை மட்டும் வரதராஜர் இவளுடன் சேர்த்திக்காட்சி தருகிறார். வைகாசி முதல் வெள்ளியன்று இவளுக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும்.

மலையாளன்
இந்திரனுக்கு அருளிய யோகநரசிம்மர், இத்தலத்தில் குடவறை மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவருக்கான தாயார், ஹரித்ராதேவி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளை மலையாள நாச்சியார் என்றும் அழைப்பர். சிறிய மலையின் மீது காட்சி தருவதால் வரதராஜருக்கு, "மலையாளன்' என்றும் பெயருண்டு.

தங்கத்தாயார்
வேதாந்த தேசிகர் இங்கு சுவாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை அவரிடம் பொருள் வேண்டினான். அவர் அந்த ஏழைக்காக பொருள் கேட்டு, பெருந்தேவி தாயாரை வேண்டி பாடல் பாடினார். அவருக்கு இரங்கிய தாயார், தங்கமழையை பெய்வித்தாள். இதனால் இவளை பக்தர்கள், "தங்கத்தாயார்' என்று அழைக்கிறார்கள்.

கிணற்றுக்குள் வலம் வரும் சுவாமி
சித்ரா பவுர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். பின்பு, சுவாமி அருகிலுள்ள நடவாவி கிணற்றிற்கு எழுந்தருளுவார். மண்டபம் போன்ற உள்கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான கிணறு இது. இந்நாளில் மட்டும் கிணற்று நீரை வெளியேற்றிவிடுவர். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.

வித்தியாசமான நம்மாழ்வார்
பெருமாள் கோயில்களில், பொதுவாக சின்முத்திரை காட்டியபடி இருக்கும் நம்மாழ்வாரை, இத்தலத்தில் மார்பில் கை வைத்த நிலையில் தரிசிக்கலாம். இவர் வரதராஜரை, "தேவர்களுக்கெல்லாம் தலைவன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் சுவாமிக்கு, "தேவராஜன்' என்ற பெயரும் பெயருண்டு.

வேடர் பெருமாள்
ராமானுஜர் மீது பொறாமை கொண்ட அவரது குரு யாதவப்பிரகாசர், அவரை கங்கையில் தள்ளிவிட வஞ்சகமாக அழைத்துச் சென்றார். இதை, தனது சித்தி மகன் கோவிந்தர்(எம்பார்) மூலமாக அறிந்த ராமானுஜர், பாதியிலேயே திரும்பிவிட்டார். வழி தெரியாத அவர் காட்டுவழியில் கலங்கி நின்றபோது, வரதராஜரும், தாயாரும் வேடர் வடிவில் சென்று குடிக்க தண்ணீர் கேட்டனர். ராமானுஜர் அருகிலுள்ள சாலக்கிணற்றில் நீர் எடுத்து அவர்களுக்கு கொடுத்தார். அதைப் பருகியவர்கள் மறைந்து விட்டனர். சுவாமியே வேடனாக வந்ததை ராமானுஜர் அறிந்தார். இதன் அடிப்படையில் சுவாமி நீர் பருகிய கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காலை 6மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

மார்கழியில் சொர்க்கவாசல் விழா முடிந்த 12ம் நாளில் சுவாமி, தாயார், ராமானுஜர் மூவரும் இந்த கிணற்றிற்கு எழுந்தருளுவர். இவ்வேளையில் சுவாமியின் பரிவட்டமும், மாலையும் ராமானுஜருக்கு அணிவிக்கப்படும். சுவாமிகளுக்கு வேடர் அலங்காரம் செய்யப்படும். பின், ராமானுஜர் சுவாமிக்கு தீர்த்தம் கொடுக்கும் வைபவம் நடக்கும். இதன்பின்பு சுவாமியும் தாயாரும், கிழக்கு கோபுரம் அருகிலுள்ள ராமானுஜர் வாழ்ந்த வீட்டிற்கு (திருமாளிகை) எழுந்தருளுவர்.

வெள்ளையர் கொடுத்த ஆபரணம்
ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையர், வரதராஜர் மீது கொண்ட பக்தியால் மகர கண்டி (கழுத்தில் அணியும் மாலை) கொடுத்தார். இதேபோல், வெள்ளைக்கார கலெக்டர் பிளேஸ் துரை, சுவாமிக்கு பல ஆபரணங்களைக் கொடுத்துள்ளார். விழாக்காலங்களில் சுவாமி இந்த ஆபரணங்களை அணிந்து உலா செல்வார்.

அபூர்வ சக்கரத்தாழ்வார்
அனந்தசரஸ் தீர்த்தக்கரையில் சக்கரத் தாழ்வார் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் இட்லி
வல்லபாச்சாரியார் என்ற பக்தர் இங்கு சுவாமிக்கு, மூங்கில் குழாய் கொண்டு தயாரித்த இட்லியை படைத்து வழிபட்டார். இதுவே, "காஞ்சிபுரம் இட்லி' எனப் பெயர் பெற்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இட்லியை காலை 6 மணி பூஜையின்போது நைவேத்யம் செய்கின்றனர்.

மாந்துளிர் உற்சவம்
பங்குனியில் பல்லவ உற்சவம் 7 நாள் நடக்கும். இந்நாளில் சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழச்செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையைப் பூசி, ஈரத்துணியை அணிவிப்பர். பின்பு, சுவாமியை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். சுவாமிக்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாதிருக்க, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்.

சிறப்புக்கள் சில...
*உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

*கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

*வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

*ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

*காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

தல வரலாறு
பிரம்மா தன்மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார். வரதராஜ பெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.

சிறப்பம்சம்
மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

சக்கரத்தாழ்வார்
திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சன்னதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

அமைவிடம் : 
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.சென்னையிலிருந்து - 75 கி.மீ.செங்கல்பட்டிலிருந்து - 35 கி.மீஅரக்கோணத்திலிருந்து -30 கி.மீ.

அருகிலுள்ள ரயில் நிலையம் : 
காஞ்சிபுரம், அரக்கோணம்,சென்னை.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : காஞ்சிபுரம்

திறக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்,காஞ்சிபுரம்-631501காஞ்சிபுரம் மாவட்டம்.

போன் :
+91- 44- 2726 9773, 94439 90773 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!