Adaikalapathu Lyrics in Tamil - அடைக்கலப்பத்து - சுவாமி தேசிகன்

அழகு தமிழிலும் ஆழ்ந்த பக்தி தோய்ந்த சமஸ்க்ரிதத்திலும் இணையாக அற்புத பக்தி ஸ்தோத்திரங்களை இயற்றியவர்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்கள் வெகு வெகு சிலரே. அவர்களில் பிரதானமாக ஜொலிப்பவர்களில் ஒருவர் தான் சுவாமி தேசிகன்.

பத்து பாசுரங்களை கொண்ட ஒரு சிறிய தொகுப்பு தான் சரணாகதி எனும் அவருடைய 'அடைக்கல பத்து''

''அப்பா வரதராஜா , அடியேனுக்கு நினது சரணாரவிந்தத்தில் அளிப்பாயா முக்தி'' என அவர் காஞ்சி வரதராஜனை வேண்டும் ஸ்தோத்திரங்கள் அவை. சமஸ்க்ரிதத்தில் அதே போல் 'ந்யாஸ தசகம் '' சரணாகதி யை அற்புதமாக விவரிக்கும் ஸ்லோகங்கள்.

ஆச்சார்யர்கள் தாம் உபதேசித்ததை, நல்லொழுக்கத்தை, பக்தியோடு வாழ்ந்து காட்டியவர்கள். தர்ம ஞாய சிந்தனையோடு எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். நடமாடும் தெய்வங்கள்.

பக்தியால் மோக்ஷம் பெற வழி காட்டியவர்கள். ஞானமும் பக்தியும் இரு கண்கள் என விளங்கியவர்கள். விளக்குபவர்கள். அவனருளால் அவன் தாள் பற்ற சொல்லிக்கொடுப்பவர்கள்.

யோகமார்க்கம் முக்தி அளிக்கும் என்பதை பதஞ்சலியின் யோக சூத்ரங்கள் அஷ்டாங்க யோகத்தை பற்றி விவரிப்பதையும் அறியலாம்.

योग: चित्त-वृत्ति निरोध: yogah citta-vṛtti-nirodhaḥ — பதஞ்சலி யோக சூத்ரம் 1.2

எண்ணம் அலை அலையாய் ஓயாமல் மனதை அலைக்கழிப்பதை முதலில் நிறுத்து. அது தான் யோகம் என்று உணர்த்தும் ஸ்லோகம். த்யானத்தில் மனது நிலைத்து விட்டால் அதன் ஓட்டம் நின்றுவிடும். வேறு எதுவுமே மனதில் இடம் பெறாது. யோகத்தை எட்டு அங்கங்களாக பிரித்திருக்கிறார்கள் யோகிகள். இந்த அஷ்ட அங்கங்களை அடையாளம் கட்டி பெயரும் வைத்திருக்கிறார்கள். பதஞ்சலி அவற்றை யமம், (நெருங்காமல் இருப்பது) நியமம் :(கடைப்பிடிப்பது) ஆசனம்: (உடல் தோற்றங்கள்) பிராணாயாமம்: ஸ்வாச கட்டுப்பாடு) ப்ரத்யாஹாரம் : (புலன்களை அடக்குவது) தாரணம்: (மனத்தை ஒருநிலைப்படுத்துவது), த்யானம் : (மனதை இறை சிந்தனையில் ஈடுபடுத்துவது ) கடைசியாக சமாதி: (தன்னை இழந்த ஆத்ம சங்கமம்). இதெல்லாம் நம்மால் முடியுமா என்றால் முடியாது என்று சொல்லமாட்டேன். முயன்றால் ஒருவேளை முடியலாம். பலருக்கு முடிந்திருக்கும்போது நமக்கு முடியாமல் போய்விடுமா?

சரணாகதி அடைய வழி என்ன? சில உபாயங்களை உபநிஷத்துகள் மஹான்கள் உபதேசங்கள் சொல்கிறதே !

நாராயண உபநிஷத் ஓம் எனும் பிரணவ மந்த்ரத்தை விடாமல் உச்சரி என்கிறது. '' AUM iti Atamanam yunjita (Narayana Upanishad 147.8)

கத்ய த்ரயம் எனும் தனது உபதேசத்தில் ஸ்ரீ ராமானுஜ ஆசார்யர் த்வய மந்திரம் சரியான வழி என்கிறார். 
Sriman Narayana charanau Saranam prapadye Srimathe Narayanaya Namah

''என்னப்பனே , ஸ்ரீமந் நாராயணா, உன் திருவடிகளே சரணம் என கெட்டியாக பிடித்துக்கொண்டு என்னை அர்ப்பணித்தேன். நான் இனி நானில்லை. தயையே உருவான தாய் ஸ்ரீ லட்சுமி தேவி சமேத ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளை சரணடைவதே எனது ஒரே லக்ஷியம்'' என்கிறார். வெங்கடேச பிரபத்தி இதை அற்புதமாக சொல்கிறது.

சரணாகதி லக்ஷணமாக ஐந்து அங்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அனுகூல்ய சங்கல்பம், பிரதிகூல்ய வர்ஜனம், மஹா விஸ்வாசம்,கோப்த்ரிவ வாரணம், கார்ப்பண்யம் எனும் இவற்றை மற்றொரு சந்தர்ப்பத்தில் விவரமாக சொல்கிறேன். இவற்றோடு இணைந்தது தான் ''அங்கி'' எனப்படும் ஆத்மநிக்ஷேபம், சரணாகதி. வாயினால் வெறுமனே சரணாகதி அடைந்தேன் என்றால் போதாது. மேற்கண்ட குணங்களும் சேர்ந்திருக்கவேண்டும். அப்போது தான் நிறைவேறும். விபீஷண சரணாகதி படித்தவர்கள் அறிந்தவர்கள் இதை உணரலாம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த பின்னணியில் சுவாமி தேசிகனின் அடைக்கல பத்து படித்து அறிந்துகொள்ளும்போது ஆனந்தமாக அதை ரசித்து புரிந்து கொள்ள உதவும்.

விசிஷ்டாத்வைத தத்துவத்தில் முக்கியமான ஒரு அம்சம் சரணாகதி அடைவது. அதை பின்பற்றுவோர் அத்தியாவசியமாக செய்து கொள்வது பர நியாசம், பர சமர்ப்பணம், பிரபத்தி எனும் சரணாகதி. இவையோடு நமது கர்ம பலனெனும் கனிகளை ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறோம்.

காஞ்சிபுரத்தில் வராஜராஜன் ஹஸ்த கிரியில், (அத்தி கிரி எனும் குன்றின் மீது ) வீற்றிருந்து மோக்ஷ மளிப்பவராக அருள்பாலிக்கிறார் என்பார்கள். 
ஸ்ரீ சுவாமி தேசிகனின் அற்புதமான ''அடைக்கல பத்து'' இனி தொடர்வோம்:

''பத்தி முதலாம் மவதில், பதி எனக்கு கூடாமல்,
எத்திசையும் உழன்றோடி, இளைத்து விழும் காகம் போல்,
முத்திதரு நகர் ஏழில் முக்கியமாம் கச்சி தனில்,
அத்திகிரி அருளாளற்கு, அடைக்கலம் நான் புகுந்தேனே ||1||

நான் என்ன செய்வேன். என்னால் மனதை ஒருமித்து உன்னை நினைக்க முடியவில்லையே. பக்தி அவ்வளவு எளிது அல்ல. எங்கு சென்று அமைதியாக அமர்ந்தாலும், இடம் தான் அமைதியாக இருக்கிறதே தவிர மனம் அமைதியுறவில்லையே. எண்ணற்ற எண்ணங்கள் என் மனதை திசை திருப்புகிறதே. நான் ஒரு காகம் தான். எங்கெங்கோ வெவ்வேறு என்ன, எட்டு திசைகளிலுமே மாற்றி மாற்றி பறந்து களைப்புற்று,நீயே கதி என்று உன் திருவடிகளில் விழுந்த தாகம் கொண்ட காகம். முத்தி தரும் சப்த க்ஷேத்திரங்களில் தலை சிறந்ததாக அத்திகிரி எனும் காஞ்சிபுர வாசனான ஸ்ரீ வரதராஜா , உன் திருவடிகளே சரணம் என்று முதல் பாசுரத்திலேயே அற்புதமாக பாடுகிறார் சுவாமி தேசிகன்.

கொஞ்சம் ஊன்றி உள்ளர்த்தம் தேடுபவர்களுக்கு ஒரு குறிப்பு கிடைக்கும். இந்திரன் மகன் காகாசுரன் சீதையை துன்புறுத்தியதால் ஸ்ரீ ராமன் அவனை நோக்கி எறிந்த ஒரு சிறு புல் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறி அவன் உயிர் குடிக்க, துரத்துகிறது. எங்கெங்கோ சுற்றி அலைந்த காகாசுரன் கடைசியில் ஸ்ரீ ராமன் பாதத்தையே கதி என அடைந்து மன்னிப்பு கேட்கிறான் என்பதை தான் சுவாமி தேசிகன் தன்னை சரணடைந்த காகம் என்று சொல்கிறார் என்று விளங்கும்.

சுவாமி தேசிகனை மேலும் வணங்கி கேட்போம்:

ஞான மார்கம், பக்தி மார்க்கம் என்ற வழிகள் மோக்ஷத்தை அளித்தாலும், கலியுகத்தில் சரணாகதி ஒன்றே எளியது என்பதால் சுவாமி தேசிக ஆசார்யன் நமக்கு அடைக்கல பத்து என்ற பத்து பாசுரங்களை அளித்திருக்கிறார். முதல் பாசுரத்தை தொடர்ந்து மற்றவற்றை அறிவோம்.

ஞானத்தை பக்தியையும் போதித்த ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிப்பதாக வரும் சரணாகதி ஒன்றே அடைக்கல பத்தின் சாரமாக அமைந்துள்ளது.

Sarva-dharman parityajya mam ekam saranam vraja
Aham tvam sarva-papebhyo moksayisyami ma sucah ||18.66||

''அர்ஜுனா, சதா என் நினைவில் இருந்து என் பக்தனாக ஆகிவிடு. என்னை வழிபடு, தொழு, என்னை அடைய இது ஒன்றே போதுமே. இது நிச்சயமாக உன்னை என்னிடம் சேர்க்கும் என்னுடைய நண்பன் நீ என்பதால் உனக்கு இதை நினைவூட்டுகிறேன் '' என்று கண்ணன் சொல்வதை அற்புதமான தமிழில் சுவாமி தேசிகன் அடைக்கல பத்து பாசுரங்களில் விளக்குகிறார்.

நமது ஆச்சார்யர்கள் எதையோ சொல்லிவிட்டு போனவர்கள் அல்ல. சொல்லை செயலாக்கி வாழ்ந்து காட்டிய எடுத்துக் காட்டுகள். உதாரண புருஷர்கள்.

 பாசுரம் 2

சடை முடியன், சதுர் முகன் என்று, இவர் முதலாம் தரம் எல்லாம்,
அடைய வினை பயன் ஆகி, அழிந்து விடும் படி கண்டு,
கடி மலராள் பிரியாத, கச்சி நகர் அத்திகிரி,
இடமுடைய அருளாளர், இணை அடிகள் அடைந்தேனே ||2||

அடைக்கல பத்து எனும் இந்த பத்து பாசுரங்களின் நாயகன் ஸ்ரீமந் நாராயண னான காஞ்சிவாழ் வரதராஜன். காஞ்சியை ஹஸ்தி கிரி எனும் பொருள்படும் அத்திகிரி என்று அடையாளம் காட்டுகிறார் சுவாமி தேசிகன். இந்த சிவன் ப்ரம்மா எனும் மூவரில் இருவரும் கூட நடுவரான விஷ்ணுவை வழிபட்டு பாபம் நீங்கியவர்கள் தான் என்று அறியும்போது நான் திருமகள் மார்பினில் உய்ய அருளும் அத்திகிரி வாழ் காஞ்சி வரதராஜா ,உன் திருவடிகளில் சரணம் என்று அடைக்கலமாகிறேன். உன் அருளோடு எனக்கு திருமகளின் காருண்ய கடாக்ஷமும் சேருமே, மோக்ஷம் எனக்கு அருள்வீர்களே. நான் பாக்கியசாலி அல்லவா?.

திருவையாறு அருகே சிரக்கண்டிபுரம் எனும் கண்டியூரில் பரமேஸ்வரன் பிரம்மனின் சிரம் கொய்த க்ஷேத்ரம், அருகே ஹரசாப விமோசன பெருமாள் எனும் கமலநாதர் ஆலயம். சிவனுக்கு ப்ரம்மனின் சிரத்தை கொய்ததால் ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க அவர் வழிபட்ட விஷ்ணுவின் ஆலயம் இருக்கிறது. இரண்டையும் சமீபத்தில் தரிசித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

பாசுரம் 3

தந்திரங்கள் வேரின்றித், தமது வழி அழியாது,
மந்திரங்கள் தம்மாலும், மற்றும் உள்ள உரையாலும்,
அந்தரம் கண்டடி பணிவார், அனைவர்க்கும் அருள் புரியும்,
சிந்துர வெற்பிரையவனார், சீலம் அல்லதறியேனே ||3||

வாயினால் சுலபமாக இது தான் உபநிஷதங்கள், வேதங்கள் மற்றும் நீதி நூல்கள் சொல்லும் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் பற்றி விளக்கி, இதை பின்பற்றினால் மோக்ஷம் நிச்சயம் என்று யாருக்கு வேண்டுமானாலும் உபதேசிக்கலாம். அதை அடைவதற்கு தீவிரமாக எவ்வளவு சிரமபடவேண்டும் என்பது அதை விடாப்பிடியாக முயற்சி செய்வோருக்கு தான் தெரியும். சரணாகதி அடைவோனுக்கு அந்த வழி எளியது என புரியும். இந்த ரெண்டு வழிகளுக்கும் இடையே உள்ள வித்யாசம் என்ன, எது எளிது, நம்மால் முடியக்கூடியது என்று புரிந்து கொள்வோர்கள், உடனே ப்ரபத்தியை தான் நாடுவார்கள். வரதராஜன் காருண்ய மூர்த்தி, ஈடிணையற்ற தயாளன், எல்லோரையும் சமமாக கருதும் பேரருளாளன். அவன் பக்தன் எந்த வழியை பின்பற்றினாலும் அவனுக்கு பேதமின்றி அருளுபவன் அல்லவா?

பாசுரம் 4 

காகம் இராக்கதன், மன்னர் காதலி கத்திரபந்து,
நாகம் அரண் அயன் முதலா, நாகநகரார் தமக்கும்,
போகம் உயர் வீடு பெறப், பொன் அருள் செய்தமை கண்டு,
நாகமலை நாயகனார் நல்லடி போதடைந்தேனே ||4||

சுவாமி தேசிகன் இந்த பாசுரத்தில் ஒருவன் பெயரை சொல்வதால் நாம் அவன் கதையை அறிகிறோம். க்ஷத்ர பந்து க்ஷத்ரியர்களில் கடை நிலையான ஒரு மஹா பாபி என்ற பெயர் பெற்றவன். ராஜா விஷ்வரதன் மகன். அவன் இயற்பெயர் தெரியாது. க்ஷத்ரியர்களில் மோசமானவன் என்று பெயர் நிலைத்தது. அவனை அரசனாகி ஏற்றுக்கொள்ளாத மக்கள் காட்டுக்கு விரட்டிவிட்டார்கள். அங்கும் சும்மா இல்லாமல் ரிஷிகளை துன்புறுத்தினான். அந்த காட்டுக்குள் ஒரு வயதான முனிவர் வந்தார். ஒரு குளத்தில் இறங்கி ஸ்நானம் செய்ய முயன்றபோது விழுந்து விட்டார். க்ஷத்ரபந்து அங்கே இருந்தான். அவன் குளத்தில் இறங்கி அந்த கிழ முனிவரை வெளியே கொண்டுவந்து அவர் காயங்களுக்கு மருந்து போட்டு, உணவளித்து தங்கவும் இடம் கொடுத்தான். இது அவன் குணத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.    ''நீ இவ்வளவு நல்லவனாக இருக்கிறாயே, நீ யார், எதற்கு இந்த காட்டில் வாழ்கிறாய் என்று கேட்ட ரிஷிக்கு க்ஷத்ரபந்து தனது வாழ்க்கையை பற்றி கூறுகிறான். ரிஷி அவனுக்கு நல்ல புத்தி சொல்கிறார். அதை கேட்டதும் அவன் மகிழ்கிறான்.

''முனிவரே, என் மனதிலிருந்தை கொட்டி விட்டேன். நான் கெட்டவனாகவே வளர்ந்து விட்டேன். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறேன். தனிமை என்னை திருத்தி விட்டது என்றாலும் முழுமையாக என்னை நல்லவனாக யாராலும் மாற்றமுடியாது''

''அப்படி இல்லை மகனே, நீ விடாமல் கோவிந்தா என்று சொல்லிக்கொண்டே இரு. அப்புறம் பார் '' என்கிறார் ரிஷி. க்ஷத்ரபந்து அப்படியே செய்கிறான்.

சுவாமி தேசிகன் இந்த அடைக்களப்பத்து ஸ்லோகத்தில், பகவான் மஹா விஷ்ணு, காகமாக வந்த காகாசுரனுக்கு ஐஸ்வரியம், மோக்ஷம் கொடுத்தார். விபீஷணன் போன்ற ராக்ஷஸனுக்கும் மோக்ஷம் கொடுத்தார், பாண்டவ ராஜாக்கள் மனைவி திரௌபதிக்கு மோக்ஷம் கொடுத்தார், க்ஷத்ர பந்து என்ற பாபிக்கும் மோக்ஷம் கொடுத்தார், நாகமான காளிங்கனுக்கும் மோக்ஷம் கொடுத்தார், அரன் அயன் என்ற சிவபெருமானுக்கும் பிரம்மாவுக்கும் அருள் புரிந்தார், பாபங்களை, சாபங்களை விலக்கினார், எல்லோரும் இவற்றை பெற சொன்ன ஒரே வார்த்தை ''கோவிந்தா' . அத்திகிரி எனும் காஞ்சியில் உறைந்து என்னை ஆட்கொண்ட ஸ்ரீ வரதராஜா , உன்னை சரணடைந்தேன் எனக்கும் மோக்ஷம் தா'' என்று வேண்டுகிறார். நமக்கும் ஹரியை சரணடைந்து மோக்ஷம் பெற வழி காட்டுகிறார். நாம் செல்லவேண்டிய சரியான திசையை காட்டும் தேசிகன் அல்லவா?
 
பாசுரம் 5

உகக்கும் அவை உகந்து, உகவா அனைத்தும் ஒழிந்து, உறவு குணம்
மிக துணிவு பெற உணர்ந்து, வியன் காவலன் என வரித்து,
சகத்தில் ஒரு புகல் இல்லாத், தவம் அறியேன் மதிட்கச்சி,
நகர்க் கருணை நாதனை, நல் அடைக்கலமாய் அடைந்தேனே ||5||

அத்திகிரி வரதராஜா , நான் கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டேன். எதை எப்படி புரிந்துகொண்டு பகவானே உனக்கு சேவை செய்யவேண்டும் என்று உணர்ந்து விட்டேன்.  உன்னை அடையும் வழியில் செல்ல தடையாய் இருப்பவை யாவை என்று புரிந்து கொண்டேன். அவற்றை விலக்கி விட்டேன், அவற்றிலிருந்து விலகிவிட்டேன், ஜீவன் யார் பரமாத்மா என்று கொஞ்சம் சிந்தித்து, தியானித்து அறிந்து கொண்டேன். என் பகவானே நீ இருக்கிறாய் எப்போதும் என்னை ரக்ஷிக்க, என்ற தைர்யம் பெற்றுவிட்டேன். உன்னை சரணடைவதை விட பிறிதொன்றும் இல்லை, பெரிதொன்றும் கிடையாது என ஞானம் பெற்றுவிட்டேன். எனவே காருண்ய மூர்த்தி கஞ்சி அத்திகிரீசா, வரதராஜா, உன்னை சரணடைகிறேன்.

பாசுரம்  6 

சுவாமி தேசிகனின் அடைக்கல  பத்து எனும் சரணாகதி பற்றிய பாசுரங்கள் அவரது  இரு மொழி பாண்டித்யத்தை வெளிப்படுத்தும் உதாரணம் என்று கொள்ளலாம்.  வடமொழியிலும், தேன் மொழி யான,  தென்மொழி தமிழ் இரண்டிலுமே  அற்புதமாக தனது  எண்ணங்களை, கருத்துகளை கூறக்கூடிய  திறமை சுவாமி தேசிகனுக்கு இருந்தது.   இதில் ஆறுவிதமான சரணாகதி முறைகள் சொல்லப்பட்டிருக்கிறதை கவனிக்க வேண்டும்.

அனுகூல்ய சங்கல்பத்தை தான்  உய்க்கும் அவை உகந்து என்கிறார். பிரதிகூல்ய வர்ஜனம்   -  இதை  ''உகவா அனைத்தும் ஒழிந்து''  என்கிறார்  மஹா விஸ்வாசம் -  ''உறவு குண மிக, துணிவு பெற உணர்ந்து''  இதை தான் குறிக்கிறது  கோப்த்ரேவ வரனம் --  இதை  வியன் காவலன் என வரித்து என்கிறார். கார்ப்பண்யம் -  ஜகத்தில் ஒரு புகல் இல்லா  தவம் அறியேன்.   கிருபை இல்லையே  என ஏங்குகிறார். ஆத்மநிக்ஷேபம்  – கச்சி நகர் கருணை நாதனை நான் அடைக்கலமாய்  அடைந்தேனே ''  என்கிறார். 

பகவானுக்குள்ள  ஆறு  (ஷத்) குணங்கள்  ஞானம், சக்தி, வீர்யம், பலம், ஐஸ்வர்யம், தேஜஸ் என்பன. இவற்றையே   அவர் வெளிப்படுத்தும்  குணங்களாக நாம் அறிகிறோம்.  அவை தான்  காருண்யம் (கருணை), வாத்சல்யம் (அன்பு, நேசம் ),  சௌசீல்யம் (உயர்ந்த சீலம் ) சௌலப்யம்  (சுலபமாக எளிதில் அடைய முடிவது). காருண்யம் எனும் கருணை இல்லாவிட்டால் மற்றவை பெரிதாக பயன் தராதே.  அதனால் தான் பகவான் கருணை மிக்கவனாக  தயாபரனாக அருள்கிறான்.  எதிரிகளுக்கும் கருணை காட்டி  அருளியவன். ஞாபகம் இருக்கிறதா,  இப்படித்தானே அவன்   ராவணன், காகாசுரன், சிசுபாலன்  ஆகியோரிடம்  தயாளனாக இருந்து நிறைய சந்தர்ப்பங்கள் கொடுத்து பிறகு கடைசியில் தண்டிக்க  நேரிட்டது. 

Pasuram 6

அளவுடையார் அடைந்தார்க்கும், அதன் உரையே கொண்டவர்க்கும்,
வளவுரை தந்தவன் அருளே, மன்னிய மாதவத்தோர்க்கும்,
களவொழிவார் எமர் என்ன, இசைந்தவர்க்கும் காவலராம்,
துளவ முடி அருள் வரதர், துவக்கில் எனை வைத்தேனே ||6||

மிக முக்கியமாக கவனியுங்கள்.  இந்த பாசுரத்தில்  சுவாமி தேசிகன்  நான்கு சரணாகதி அடையும் (ப்ரபத்தி)  உபாயங்களை கூறுகிறார். 

சிறந்த ஞானம் கொண்டவர்கள்  தானாகவே ப்ரபத்தி செயது பயனடைவார்கள்  இதையே  ஸ்வ நிஷ்டை என்பார்கள். ஆழ்வார்கள், போற்றுதற்குரிய  ஆசார்யர்கள் இதற்கு உதாரணம்.  

சிலர்  ஆசார்யன், என்னும் குரு மார்க்கமாக ப்ரபத்தி பெறுவார்கள். வேத சாஸ்திர  நூல்கள் சொல்லும் வகையில், சரணாகதி மஹிமையை அறிந்து அதை பின்பற்றுபவர்கள். இத்தகைய சரணாகதி  உக்தி நிஷ்டை எனப்படும்.   இவர்களை முமுக்ஷு என்பார்கள். 

சிலருக்காக  குருவே  ப்ரபத்தி செய்வார்.  அதுவே  ஆசார்ய நிஷ்டை. மோக்ஷத்தை நாடும் முமுக்ஷுக்களுக்கு ஆசார்யன் பெற்று தரும் ப்ரபத்தி.

மற்றும் சிலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா?  மகா  பக்தர்கள் எவ்வாறு  பரமனை சரணாகதி செயது, பிரபத்தி புண்யம் பெற்றார்கள் என்று அறிந்து  அவர்களை போற்றி பணிபவர்கள்.  ஆத்மா எனும் தான், பகவானின் அடிமை, அவனது உடைமை, என்று உணர்ந்தவர்கள். இப்படிப்பட்ட பக்தர்களை பரமனும் பெரிதும் நேசிக்கிறான். இப்படிப்பட்ட மஹா பக்தர்களின் சத்சங்கத்தில் இருப்பவர்கள் அதனால் அடையும் பலனைத்தான்   பாகவத நிஷ்டை என்று கூறுகிறார்  சுவாமி தேசிகன். உதாரணமாக  கூறத்தாழவனோடு சத்சங்கத்தில் இருந்தவர்கள், விபீஷணனோடு கூடி இருந்தவர்கள் தாமும் முக்தி பெற்றது போல. 

ஆகவே தான் இந்த பாசுர முடிவில் துளசி மாலை அணிந்த அந்த காஞ்சி அத்திகிரி வரதன் தன்னை  இந்த நாலு வழியிலும் சரணடைந்தோர்க் கெல்லாம் முக்தி தருபவன். நானும் அதனால் அவனை சரணடைந்தேன் என்கிறார்.

''உமதடிகள் அடைகின்றேன் என்று, ஒரு கால் உரைத்தவரை,
அமையும் இனி என்பவர் போல், அஞ்சல் என கரம் வைத்து,
தமது அனைத்தும் அவர் தமக்கு, வழங்கியும் தாம் மிக விளங்கும்,
அமைவுடைய அருளாளர், அடி இணைய அடைந்தேனே ||7||

''பகவானே, காஞ்சி வரதராஜா , நான் உன்னை வந்தடைந்து விட்டேன். நீயே கதி. உன் தாமரைத் திருவடிகளே சரணம் என  தனது கால்களில் விழுபவர்களுக்கு  அவன் என்ன செயகிறான்?    ''குழந்தாய், அஞ்சாதே, யாமிருக்க  பயமேன் ''என  தனது திருக்கரத்தை  சிரசில் வைத்து ஆறுதல் அளிக்கிறான். கேட்கும் முன்பாகவே  பக்தனை ரக்ஷித்து நன்மை பயக்குகிறான். செல்வம் கொழிக்கிறது.  தேஜஸ் ஒளி வீசுகிறது. அத்திகிரிசா, இது தெரிந்து தானே  நான் உன் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறேன்.  எனக்காப்பது உன் வேலை இனி .

பாசுரம் 8

திண்மை குறையாமைக்கும், நிறைகைக்கும் தீவினையால்,
உண்மை மறவாமைக்கும், உள மதியில் உகக்கைக்கும்,
தன்மை கழியாமைக்கும், தரிக்கைக்கும், தணிகைக்கும்,
வண்மையுடை அருளாளர், வாசகங்கள் மறவேனே ||8||

எனக்கு உன் மீதுள்ள பற்று, நம்பிக்கை சற்றும் குறையாமல் இருக்க உன்னருள் வேண்டுகிறேன் அத்திகிரிசா. எனக்கு ஞானம் தா. எனது முன் வினை பாபங்கள் உன்னை நான் விடாமல் நினைத்து உன் அருள் பாடுவதை மறக்காமல், தடுக்காமல், செய்யவேண்டும். பரிபூர்ணமாக உன்னை சரணடைகிறேன். எனக்கருளவேண்டும் என்னப்பனே. சதா உன் நினைவில், சம்சார பந்தங்களின் தொடர்பு இன்றி நான் வாழ நீ அருளவேண்டும் கஞ்சி வரதராஜா.

பாசுரம் 9
 
சுரிதி நினைவிவை அறியும், துணிவுடையார் தூ மொழிகள்,
பரிதி மதி ஆசிரியர், பாசுரம் சேர்ந்தருக்கணங்கள்,
கருதி ஒரு தெளிவாளால், கலக்கம் அறுத்தத்திகிரி,
பரிதி மதி நயனமுடைப், பரமன் அடி பணிந்தேனே ||9||

''வரதா,  அத்தி கிரீசா,  நான்  கற்றுணர்ந்த பெரியோர்களிடம் இருந்து  வேத சாஸ்த்ர ஸ்ம்ரிதிகளை அறிந்து கொண்டேன்.  மஹான்கள் இயற்றிய   திவ்ய  பாசுரங்களை அறிந்தேன். ஆச்சார்யர்கள், குருமார்களிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து எல்லாம்,  சூரியனிலிருந்து ஒளியை பெறுவது போல்  ஞானம்  பெற்றேன்.  என் சந்தேகங்கள் அறுந்தன . சிந்தனை பரிசுத்த மாகியது.  சர்வ லோகேஸ்வரா,  சூரிய  சந்திர  நேத்ரனே,  பரம் பொருளே,  உன்னை சரணடைந்தேன்

 பாசுரம் 10

''திருமகளும், திருவடிவும், திருவருளும், தெள் அறிவும்,
அறுமை இலாமையும் உறவும், அளப்பரிய அடி அரசும்,
கருமம் அழிப்பளிப்மைப்பும், கலக்கம் இலா வகை நின்ற,
அருள் வரதர் நிலை இலக்கில், அம்பென நான் அமிழ்ந்தேனே ||10|''

சர்வ அழகும் சௌந்தர்யமும்  சௌலப்யமும் போதாது என்று  சங்கநிதி பதுமநிதி போன்ற அளவற்ற செல்வங்களுக்கு  அதிபதியாக விளங்கும்   திரு மகள்  ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஹரிபக்தர்களுக்கு  எளிதில் அருள்பவள்.  ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார  கார்யங்களோடு   இணைந்தவள்.  அப்படிப்பட்ட  ஸ்ரீ லக்ஷ்மியை மார்பில் தரித்த  ஸ்ரீ  வரதராஜன் என் மீது கருணை கொண்டு  அருள்பவன். அவனை அடைந்து  அவனோடு ஒன்றிட  வில்லிலிருந்து  புறப்பட்ட அம்பு போல் என் மனம்  விரைகிறது. அவனைச் சரணடைய அவன் தாள்களில்  விழுந்து வணங்குகிறேன்.''

பாசுரம் 11

''ஆறு பயன் வேறில்லா, அடியவர்கள் அனைவர்க்கும்,
ஆறும் அதன் பயனும் இவை, ஒரு காலும் பலகாலும்,
ஆறு பயன் எனவே கண்டு, அருள் ஆளர் அடியினை மேல்,
கூறிய நற்குண உரைகள், இவை பத்தும் கோதிலவே ||11||

எல்லா ஸ்தோத்ரங்களுக்கும் கடைசியில் ஒரு பல  ஸ்ருதி உண்டு.  இந்த ஸ்தோத்திரம், மந்திரம், பாசுரம்  நீ மனமுவந்து நீ ஜெபித்தால்  உனக்கு கைமேல் பலன் கிடைக்கும் என்று சொல்வதோடு  அப்படி என்னென்ன பலன் கிடைக்கும் என்றும் சொல்வது தான் பல ஸ்ருதி.

இந்த அடைக்கல பத்து ஒன்றே  போதுமே. வேறென்னவேண்டும்  பரமனை அடைய.   இதோ நான் இந்த பத்து ஸ்லோகங்களை சொல்லி வரதன் முன் நின்றேன். அவன் திருவடிகளை  அடைந்தேனே . சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்  பெருமாள் விஷ்ணுவே தான்  ''உபாயம்'' அதாவது  அவனை அடைய வழி,  கடைசியில் அந்த வழியில் நாம் அடைவதும் அவனையே (உபேயம்)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!