ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் திருக்கோழி திவ்யதேசம் , உறையூர், திருச்சி.
ஸ்தலவரலாறு :-
த்வாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடைத்தது.
கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில்.
கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் ப்ரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது.
சிறப்பு :-
திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலம்.
திருக்கோழி பெயர்க்காரணம் :-
சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று.
அமைவிடம் :-
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தொலைவில் உள்ளது. முதன்மைத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து3km நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ளது.
எம்பெருமானின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம்.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருக்கோழியூர், நிசுளாபுரி, உறந்தை என்று குறிப்பிடப்படும் திவ்ய தேசமே தற்காலத்தில் உறையூர் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி நிரந்தரமாக உறையும் ஊர் அதனால் உறையூர் என்றும் சோழ மன்னனின் யானையை ஒரு கோழி சண்டையிட்டு வென்றதால் கோழியூர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்யம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மஹாலக்ஷமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார்.
ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, ‘கமலவல்லி’ (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான்.
பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.
அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார்.
அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள்.
நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார்.
அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.
மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர்.
ப்ரஹாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன.
மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. கோயில் கோபுரம் 5 நிலை உடையது.
திருமணத் தடையுள்ளவர்கள் ஆயில்யம் நக்ஷத்ரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்யமாகும் என்பது நம்பிக்கை.
இத்தலம் தாயாரின் பிறந்த ஸ்தலம் என்பதால், இவளே இங்கு ப்ரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
நாச்சியார் கோவில் என்று அழைத்தால் அது திருநரையூர் நாச்சியார் கோவிலை குறிக்கும்.
ஆனால் திருச்சிராப்பள்ளியில் நாச்சியார் கோவில் என்றால் அது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை குறிக்கும்.) மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை.
பொதுவாக பெருமாள் ஸ்தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன ப்ரசாதம் தருகின்றனர்.
இவளுக்கு படைக்கப்படும் நெய்வேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.
பெருமாள் ஸ்தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, ஸ்வாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள்.
இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது.
ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.
ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார்.
கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்ரத்தில் அவதரித்ததாக ஐதீகம். எனவே ஆயில்ய நக்ஷத்ரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது.
அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார்.
அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
கோயிலுக்கு வரும் ஸ்வாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு ப்ரஹாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார்.
அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, ஸ்வாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, ஸ்வாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார்.
பங்குனி உத்ரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் ஸ்வாமி, இரண்டு தாயார்களுடன் சேர்ந்து காட்சி தருவதை தர்சிப்பது விசேஷம்.
இவ்வூர் மேலும் ஆழ்வார்களில் எட்டாவது ஆழ்வாராக குறிப்பிடப்படும் முனிவாகனர் என்று கூறப்படும் திருப்பாணாழ்வார் அவதரித்த ஊராகும். இவர் கார்த்திகை மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். அமலநாதிபிரான் என்ற ப்ரபந்தத்தை பாடியவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
திறக்கும் நேரம் :-
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி :-
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்.உறையூர் -620 003. திருச்சி மாவட்டம்.