சுவாமி !...... பெருமாள் ! உண்மையிலேயே  உத்தமரா? ” என்று கேட்ட சீடர் - விளக்கும் எளிய கதை

ஸ்ரீரங்க மன்னாரை   ஆண்டாள் பாடிய  மூன்றாம் பாசுரத்தில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று  பாடியுள்ளாள். “ஓங்கி உலகளந்த…” பாசுரத்தின் பொருளைத் திருப்பாவை ஜீயரான ராமானுஜர், தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு சீடர் எழுந்து, “சுவாமி! ஒரு ஐயம்! ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று த்ரிவிக்கிரமப் பெருமாளை ஆண்டாள் பாடுகிறாளே! உண்மையிலேயே அவர் உத்தமரா?” என்று கேட்டார்.

“புருஷோத்தமரான பெருமாளை ‘உத்தமன்’ என்று சொல்வதில் என்ன தவறு?” என்று கேட்டார் ராமானுஜர். அந்தச் சீடரோ, “இல்லை சுவாமி! த்ரிவிக்கிரமப் பெருமாள் உண்மையில் ஏமாற்று வேலை தானே செய்தார்.

சிறிய கால்களை மகாபலியிடம் காட்டி மூவடி நிலம் வேண்டுமென யாசித்து விட்டுப் பெரிய கால்களால் மூவுலகங்களையும் அளந்தாரே! இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைக்காரரைப் போய் ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாளே! இதை எப்படி ஏற்க முடியும்?” என்றார்.

அதற்கு மிக அழகாக விடையளித்தார் ராமானுஜர்: “மனிதர்களில் நான்கு வகைகள் உண்டு-
அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன்.

பிறரை வஞ்சித்து, பிறரைக் கெடுத்து, அதைக் கண்டு மகிழ்ந்து வாழ்பவனுக்கு அதமாதமன் (sadist) என்று பெயர்.

பிறரைப் பற்றிக் கவலைப் படாமல் தான் வாழ்ந்தால் போதும் என்று சுயநலத்துடன் வாழ்பவனுக்கு அதமன் (selfish) என்று பெயர்.

தானும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்குடன் வாழ்பவனுக்கு மத்யமன் (ordinary soul) என்று பெயர்.

தான் கெட்டாலும் பரவாயில்லை, பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதித் தியாகம் செய்பவனுக்கே உத்தமன் (noble soul) என்று பெயர்.

இவ்வாறிருக்க, மகாபலியைத் த்ரிவிக்கிரமன் ஏமாற்றினார் என்று நீ சொல்கிறாயே!

மகாபலியை ஏமாற்றி அவனது சொத்தைத் த்ரிவிக்கிரமன் எடுத்துக் கொண்டாரா? இல்லையே!

அந்தச் சொத்துக்கு உண்மையான சொந்தக்காரனான இந்திரனிடம் தானே அதை மீட்டுக் கொடுத்தார். இந்திரன் இழந்த சொத்தைப் பெறவேண்டும் என்பதற்காக ‘வஞ்சகன்’ என்ற பெயரைத் த்ரிவிக்கிரமப் பெருமாள் ஏற்றுக் கொண்டாரே ஒழிய இதில் பெருமாளுக்குச் சுயலாபம் எதுவுமில்லை.

தனக்கு அவப்பெயர் உண்டானாலும் பரவாயில்லை, தேவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று கருதியதால் தான் த்ரிவிக்கிரமனை ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாள்!” என ராமானுஜர் விளக்கினார்.

வஞ்சகன் போல் மகாபலியிடம் வந்து, அவனை வஞ்சித்து அவனது சொத்தை அபகரித்தாலும், அதைத் திருமால் தனது சுயலாபத்துக்காகச் செய்யாமல், அசுரனிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்டு, அதற்குரியவர்களான தேவர்களிடம்
கொடுக்க வேண்டும் என்ற பொது நல நோக்கிலேயே செய்தார்.

எனவே அச்செயலோடு தொடர்புடைய தோஷங்களாலோ, பாபங்களாலோ தீண்டப்படாமல் உத்தமராகவே – தூயவராகவே விளங்குகிறார்.
‘ சுசி :’ என்றால் தூயவர் என்று பொருள்.

எப்போதும் தூயவராக விளங்குவதால் திருமால் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார்.

“ சுசயே நம :” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், மொழி, மெய் அனைத்தும் தூய்மையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.