சித்திரை, தமிழ் புத்தாண்டின் ஆரம்ப மாதம். "சித்திரா" என்னும் சொல் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் குறிக்கும் சொல்லாகும். புத்தாண்டின் ஆரம்பத்தையும் ஒளிர வைக்கும் பிரகாசமான மாதமே சித்திரை.
பனி குறைந்து வெயில் வரத் தொடங்கும் பொழுது வசந்தத்தின் ஆரம்பமாக மல்லிகை மணக்கும். மாமரம் பலன்களைக் கொடுக்கும். வெள்ளரிக்காய் தாகம் தீர்க்கும். கிரினி, தர்பூசணி போன்ற பல கனிகள் நமைக் குளிர வைக்கும். நோய் தீர்க்கும் வேப்பம் பூக்கள் இம்மாதத்தில் மட்டுமே கிடைக்கும்.
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம்முடைய முன்னோர்கள் இந்த தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம். இந்த வேப்பம் பூவுடன் வெல்லம், புளி போன்றவை சேர்த்து செய்யப்படும் இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும்.
வடநாட்டில் சித்திரை வருடப்பிறப்பை வைசாகி என்றும், மேஷ சங்கராந்தி என்றும் குறிப்பிடுவர்.
சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்றும் சொல்வார்கள். சித்திரை மாதப்பிறப்பை பித்ரு தினம் என்றும் சொல்வர். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். இந்த பித்ரு தினத்தில் தர்ப்பணம் செய்வது மிகவும் விஷேசம் மற்றும் சிறப்பு ஆகும்.
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரா பௌர்ணமி எனப்படும், இது ரொம்ப விஷேசமான நாள் ஆகும். இந்த சமயத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த சித்திரை திருவிழா காண்பதற்கு அறிய கண்கொள்ளாக் காட்சியாகும்.
சித்திரை மாதத்தை 'வசந்த ராகம்' என்றும் கூறுவார். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சயதிருதி என்று அழைக்கப்படுகிறது. அந்நாள் பொன், வெள்ளி போன்றவைகள் வாங்க ஏற்ற தினமாகக் கருதப்படுகிறது. அந்நாளில் தொட்டது அனைத்தும் துலங்கும் மேலும் மேலும் செல்வங்கள் சேரும் என்பது நம்பிக்கை. இந்த தினத்தில் உணவு தானியங்கள், அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்.
சித்திரை மாதத்தில் வரும் திருதியை தினம் விஷ்ணுபகவான் மீனாக அவதாரம் எடுத்த தினமாகும். சித்திரை மாத சுக்கில பஞ்சமி தினம் லட்சுமி தேவி பூமிக்கு வந்த தினமாகும். எனவே அன்று லட்சுமி பூஜை செய்தால் வளமான வாழ்வு கிடைக்கும்.
விண்ணுலக கணக்கரான சித்திரகுப்தன் பிறந்தது சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாள். அன்றைய தினம் 'சித்திர குப்தம் மகா ப்ரக்கியம் லேகினி பத்ர தரிசனம்! சித்திரா ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சௌர்வ தேஹினாம்!!' என்ற சுலோகத்தை கூறி வழிபட்டால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீராமானுஜர், பிறந்ததும் இந்த சித்திரை மாதத்தில் தான். எந்த மாதத்திற்கும் இல்லாத சிறப்புகள் சித்திரை மாதத்துக்கு மட்டுமே இருக்கிறது.
1. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும்.
2. சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.
3. சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும்.
4. சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
5. சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர்.
6.ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
7.சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது