ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புத்தூர் என்ற பல திவ்ய தேசத்தில் உடையவர் சன்னதிகளிலும் இரண்டு பக்கமும் சித்திர ரூபத்தில் ஆழ்வானையும், ஆண்டானையும் காணலாம் இவர்கள் இருவரும் இராமானுசனுக்கு வலது, இடது கரம் போன்றவர்கள்.

திருகோஷ்டியூர் நம்பியை ராமானுஜர் பதினெட்டு முறை சென்றார் என்பது பிரசித்தம். 18ஆம் முறை சந்திக்கும் போது ”தண்டமும் பவித்திரமுமாகத் நீர் ஒருவர் மட்டும் வாரும்” என்று சொல்ல அடுத்த முறை உடையவர் கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு திருக்கோஷ்டியூர் சென்று நம்பியைத் தண்டனிட்டார்.

நம்பி “ஒருவர் மட்டும் என்றேன், ஆனால் நீர் இவர்களை அழைத்து வருவானேன் ?” என்று கேட்க அதற்கு ராமானுஜர் “தேவரீர் தண்டமும் பவித்திரமுமாக வரச் சொன்னீர்கள் - முதலியாண்டான் எனக்கு த்ரிதண்டம், கூரத்தாழ்வான் என் பவித்திரம்” என்றார்

அதனால் தான் இவர்கள் இருவரும் உடைவர் கூடவே இருக்கிறார்கள். ஆனால் கூரத்தழ்வான் ஏன் தாடி வைத்துக்கொண்டு இருக்கிறார் ?

கூரத்தாழ்வானைப் பற்றி மேலும் சில விஷயங்கள் பார்த்துவிட்டு அதைப் பற்றி சொல்லுகிறேன்.

இராமானுச நுற்றந்தாதியில் இந்த கூரத்தாழ்வானை பற்றிய இந்த இரண்டு வரி பலருக்கு தெரிந்திருக்கும்.

”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பு ஆம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” இதில் ‘நம்’ என்ற பிரயோகத்தை கவனித்திருப்பீர்கள். ’நம்’ தமிழில் ஒரு ஸ்பெஷல் வார்த்தை. நம்ம ஆளு, நம் வீடு, நம் குழந்தை, நம் ஊர், நம் நாடு என்று எங்கு எல்லாம் ‘நம்’ சேருகிறதோ அங்கே எல்லாம் அபிமானம் இருக்கும். வாடகை வீட்டை காலி செய்யும் போது சுமாரான பெயிண்ட் அடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம். ஆனால் சொந்த வீடாக இருந்தால், கலர் சற்றே மங்கினால் கூட கலர் அட்டையைப் பார்த்து, செலக்ட் செய்து இரண்டு கோட் பெயிண்ட் அடிப்பதற்குக் காரணம் அது நம் வீடு. செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்தியது என்று அமெரிக்காவோ, ஆந்திராவோ எங்கு இருந்தாலும் நீயூஸ் பேப்பரில் பார்க்கும் போது நம் நாடு என்று சந்தோசப்படுகிறோம்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆழ்வார், ஆசாரியர் ஏன் பெருமாளுக்கும் இந்த ’நம்’ உண்டு. இதனை உபதேச ரத்தினமாலையில் நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்
அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே! ஏத்ததனைச் சொல்லி நீ இன்று என்கிறார் மணவாள மாமுனிகள். அதாவது அன்புடையார் இவர்களுக்கு அன்பாகச் சாற்றிய திருநாமங்கள் என்கிறார்.

மேலே குறிப்பிட்டுள்ள இராமானுச நூற்றந்தாதியில் “நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார். காரணம் என்னவாக இருக்கும் ?

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் பிராத்திக்கிறார்கள். பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன் ஆனால் என்னுடைய நிழல் போல பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்” என்று விண்ணப்பிக்க அப்படிப்பட்டவர் யார்? என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி.

இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று கொள்ளலாம்.

“வஞ்ச முக்குறும்பு ஆம் குழியைக் கடக்கும்” என்பதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்கும். முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); செல்வச் செருக்கு ( அதிக பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் ). இந்த மூன்று கர்வங்களும் ஒரு பெரும் குழியைப் போன்றவை. அதற்குள் விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகக் கடினம். நம் கூடத்தாழ்வான் இந்த மூன்று கர்வங்களையும் ஜெயித்தவர்.

இராமானுச நுற்றந்தாதில் இந்த வரிக்கு இரண்டு விதமாகப் பாடங்கள் உண்டு குழியைக் கடக்கும் குழியைக் கடத்தும்
எது சரி ?

முதல் பாடத்துக்கு அர்த்தம் - குழியைக் கடக்கும் - இந்த மூன்று கவர்வங்களாகிய படு குழியை கடந்தவர் என்று பொருள்.

அடுத்த பாடம் குழியைக் கடத்தும் - இந்த மூன்று கவர்வங்கள் ஆகிய படுகுழியை தான் கடந்தது மட்டும் அல்லாமல், தன் சீடர்களையும் கடக்க வைத்தார் என்று பொருள். ஆக இரண்டும் சரியானவை தான் !

பெருமாளின் குணங்களை பேசும் போது தப்பே வராது ; ஆசாரியர்களைப் பற்றி பேசும் போதும் அதே. இந்த மூன்று குழிகளையும் கடந்தவர் என்பதற்கு அவர் வாழ்வே எடுத்துக்காட்டு முழுவதும் எழுதினால் ஒரு தனி புத்தகமே எழுத வேண்டும்

எம்பெருமான் வைபவத்தைப் பேசித் தலைக்கட்டலாம், எம்பெருமானார் வைபவத்தை பேசித் தலைக்கட்ட முடியாது என்பர் ஆண்டான் எம்பார் முதலானோர்; எம்பெருமானார் வைபவத்தைப் பேசித் தலைக்கட்டலாம்; ஆழ்வான் வைபவத்தைப் பேசித் தலைக்கட்ட முடியாது’ என்பர் ஆசிரியார்களனைவரும்
- ‘கூரத்தாழ்வான் வைபவம்’ 
புத்தகத்தின் முன்னுரையில் ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யார் ஸ்வாமி அதனால் இந்தக் கட்டுரையில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

ஒரு சமயம் ததீயாராதனத்திற்காக வாழையிலையை ஒருவர் மரத்திலிருந்து வெட்ட, வெட்டிய பகுதியில் ஒழுகிய சாற்றினைக் கண்டார். ஒரு உயிரை வெட்டி அதிலிருந்து ஒழுகும் ரத்தம் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்து மயக்கமுற்றார்.

இன்னொரு சமயம் இரவு அவர் எங்கோ சென்றுகொண்டு இருந்த போது வயலில் தவளை கத்தும் சத்தம் கேட்டது. அருகே சென்று பார்த்த போது நல்ல பாம்பின் வாயில் சிக்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அவருக்கு நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம் நினைவுக்கு வந்தது
நண்ணாதார் முறுவலிப்ப, நல் உற்றார் கரைந்து ஏங்க எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை!

கண்ணாளா! கடல் கடைந்தாய்! உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய், சாமாறே.

பொருள் : எதிரிகள் மகிழ்ந்து சிரிக்கவும், நல்ல உறவினர் வருந்தவும் எண்ணற்ற துன்பங்களை உண்டாக்கும் இந்த உலகின் தன்னைதான் என்னே ! கருணை உடையவனே உன் திருவடியை நான் அடையும்படி காலம் நீட்டாமல் உயிரை உடம்பிலிருந்து பிரித்து அருள வேண்டும்

அந்தத் தவளை பாம்பின் வாயிலிருந்து விடுதலையாகி யாரிடம் உதவிக் கேட்கும் ? என்று மயக்கமுற்று கீழே விழுந்தார்.

பெண் ஒருத்தி தண்ணீர் குடத்தைச் சுமக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் கண்ட ஆழ்வான், வெகு தூரத்தில் இருந்த அவள் இல்லத்துக்கு அவரே அதைத் தலையில் வைத்துச் சுமந்து சென்று சேர்ப்பித்தார்.

சம்பிரதாயத்தில் ஆழ்வான் என்றால் அது கூரத்தாழ்வான். ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வார்.