த்ரிவிக்ரம அவதாரத்தில் உலகெல்லாம் அளந்து நின்றான் எம்பெருமான். அந்த பிரம்மாண்ட ரூபத்தை பெரிது என்று கொண்டாடுகின்றோம். ஆனால் அந்த திரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம் உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி உலகின் மீது வைத்தான். அதே உலகத்தை வராஹ அவதாரத்தில் தன் மூக்கின் மேல் தரிக்கிறான் பகவான், ஆதலால் உலகம் பகவான் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வராஹ அவதாரிதான் விஸ்வாத்மா – ஜகத்துக்கு தலைவன். திரிவிக்ரமாவதாரத்தை விட பல கோடி மடங்கு நெடிய வராஹ வடிவமானான் பகவான். ஹிரண்யாசுரனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறான்; கண்களை உருட்டுகிறான். பூமி பிராட்டி அந்த நேரத்திலே அழுது கொண்டிருக்கி றாள்.பகவானுக்கு வருத்தம்! காப்பாற்றுகிற நேரத்திலே அவள் அழுது கொண்டிருக்கிறாளே!

தூக்கிவிட்ட பகவானை கொண்டாடி மகிழ்வதல்லவா வழக்கம். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள்..? நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா? என்று கேட்கிறார் பகவான்.அதற்கு பிராட்டி கேட்கிறாள்: நான் கூக்குரலிட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் பார்யை, சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா? என்று கேட்டாள்.

எத்தனை வித ரூபங்களில் பகவான் வந்தாலும், அவன் பேசுகிற பேச்சிலே மாற்றம் கிடையாது.பூமி பிராட்டிக்குப் பதில் சொன்னான்: இந்திரியங்கள் சரியாக இயங்கும் நிலையிலே, என்னுடைய விச்வரூபத்தை எவன் உணர்கிறானோ, அர்ச்சனை பண்ணுகிறானோ, என் திருநாமத்தை வாய்விட்டு உரக்கச் சொல்கிறானோ, என் திருவடியி லே எவன் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ, அவன் அழைக்கும் போது நான் ஓடோடி வருவேன்”. வராக சரம ச்லோகம் சொல்கிறது.அந்திம காலம் என்பது மனிதர்களுக்கு கல் கட்டை மாதிரி விழுந்து கிடக்கும் நிலை வந்து விடும். அப்போது சரணாகதி பண்ண முடியுமா? சுற்றம் அவனைச் சூழ உட்கார்ந்து “சொல்லு, நீ பொருள் வைத்திருக்கிறாயா? ” என்று கேட்டுத் துளைக்கும். அவன் இதற்கு பதில் சொல்வானா?

இல்லை நாராயணா என்று பகவான் நாமத்தைச் சொல்லுவானா? இத்தனை நாள் ஓடி உழைத்துப் பொருள் தேடியும் அதை எங்கே வைத்தோம் என்று அவனுக்கு நினைவு வரவில்லையே… அந்தச் சமயத்திலே பகவான் திருப்பெயரை அவன் எப்படிச் சொல்வான்?

வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.

ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

“எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும் போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.

ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.

அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும்.என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.

எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு. பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.