விஸ்வகர்மா நிர்மாணித்த ஸ்ரீகிருஷ்ணரின் துவாரகாபுரி மாளிகை, காலை வெயிலில் தகதகத்துக் கொண்டிருந்தது. அனுஷ்டானங்கள் முடிந்து, தன் எட்டு மனைவிகள் (ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, மித்ரவிந்தை, சக்தி, பத்திரை, லட்சுமணை, ஜாம்பவதி) புடைசூழ அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

 அப்போது துவராடை, ஜடாமுடி, கையில் தண்டு- கமண்டலம் ஏந்தி, தவக் கனல் ஒளிரும் முனிவர் ஒருவர் அரண்மனைக்குள் நுழைந்தார்.

ஸ்ரீகிருஷ்ணர் எழுந்து, மேலாடையை இடுப்பில் கட்டிக் கொண்டு கூப்பிய கரங்களுடன், ‘‘ஐயனே! வரவேண்டும். வரவேண்டும்! தர்மாத்மாவான தங்களது பாத தூளியால் இந்த அரண்மனை புனிதம் அடைந்தது!’’ என்று அவரை வரவேற்றார். கண்ணனின் மனைவியரும் முனிவரை வணங்கி ஆசி பெற்றனர்.

முனிவர், ‘‘கேசவா, அடியேனுக்கு இன்று தங்களது அரண்மனையில்தான் பிக்ஷ. பசி மிகுதியாக உள்ளதால், தாமதமின்றி அன்னம் படைத்தால் பரம திருப்தி அடைவேன். தயாராகட்டும். அதற்குள் அடியேன் சென்று நீராடி வருகிறேன்!’’ என்று கூறிச் சென்றார்.

அந்த முனிவர் சாதாரணமானவர் அல்லர். துர்வாச மாமுனி. அத்திரி மகரிஷியின் புதல்வர். ருத்ரனின் அம்சம். சிறு பிழையையும் பொறுக்க மாட்டார். சினமும் சாபமும் பொத்துக் கொண்டு வரும்.

இப்படிப்பட்ட துர்வாசர் தங்களது அரண்மனையில் உணவு உண்ண விருப்பம் தெரிவித்ததால், கண்ணனின் தேவியர் சற்றே பயப்பட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணரும், ‘‘துர்வாசரின் கோபத்துக்கு ஆளாகாமல் விருந்து இருக்க வேண்டும்!’’ என்று கூறியது அவர்களை மேலும் சங்கடப்படுத்தியது.

இருந்தாலும், ‘எல்லாவற்றுக்கும் மூல கர்த்தாவான கிருஷ்ணன் இருக்கும்போது நாம் ஏன் வீணாகச் சஞ்சலப்பட வேண்டும்? அவர் பார்த்துக் கொள்வார்!’ என்று திடமான நம்பிக்கையுடன் உணவு சமைக்க முனைந்தனர்.

என்ன ஆச்சரியம்! அடுப்பு பற்ற வைத்தது தெரியவில்லை. வேலைகள் மளமளவென நடந்தன. அன்னம், விதவிதமான சித்ரான்னங்கள், நாவுக்கு இதமான பொரியல், கூட்டு வகைகள், தினுசு தினுசான பச்சடி கள் மற்றும் வறுவல் வகையறாக்களுடன் விருந்து தயாரானது.

அந்த உணவை மோப்பம் பிடித்தபடி அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘ஆஹா! என்ன மணம்... என்ன மணம்! காத தூரத்துக்கு அப்பாலும் வீசும் போலுள்ளதே. உங்கள் கைப்பக்குவமே தனி. துர்வாசரைவிட எனக்குத்தான் இப்போது பசி அதிகம். தேவியரே, நீங்கள் சமைத்துள்ள அமுதை உடனே புசிக்க என் மனம் தூண்டுகிறது!’’ என்று கூறி மனைவியர் எட்டுப் பேரையும் ஏறிட்டு நோக்கினார்.

பட்ட மகிஷிகள் எவரும் பதில் பேசவில்லை. ஆனால், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்து, ‘‘பிரபு! கண்ணிமைப்பதற்குள் இவ்வளவு உணவு வகைகளை நாங்களா சமைத்தோம்? யாவும் தங்கள் அருளால் உண்டானவை!’’ என்று சொல்லிக் கண்ணீர் விட்டார்கள்.

அவர்களை எழுப்பி, கண்ணீரைத் துடைத்த கிருஷ்ணர், ‘‘அன்புக்குரியவர்களே! சஞ்சலம் வேண்டாம். உங்கள் உணர்வைப் புரிந்து கொண்ட நான் மாயாசக்தியால் இவற்றை உண்டாக்கினேன். யாவும் நலமாகவே முடியும்!’’ என்று தேற்றினார். அப்போது துர்வாச முனிவர் மந்திரம் ஜபித்தபடி உள்ளே வந்தார்.

அவரை பொற்பீடத்தில் அமரச் செய்து, பெரிய வாழையிலை பரப்பி உணவு பரிமாறத் தொடங்கினர் கண்ணனின் தேவியர். அவற்றை ருசித்து, ரசித்துச் சாப்பிட்டார் துர்வாசர். சூடான உணவானதால் முனிவருக்கு வியர்க்காதிருக்க அருகில் நின்று மயில் விசிறியால் விசிறினார் கிருஷ்ணர். துர்வாசர் எந்த வகையிலும் குற்றம் காண முடியாதபடி விருந்து சிறப்பாக அமைந்தது.

இறுதியில் பாயசத்தை ருசி பார்த்த துர்வாசர், கிருஷ்ணரை அருகே வருமாறு ஜாடையால் அழைத்தார். அவர் வந்ததும், தன்னிடம் மீதம் இருந்த பாயசத்தை ஒரு பாத்திரத்தில் வடித்து, கிருஷ்ணரிடம் கொடுத்து, ‘‘இதை என் எதிரிலேயே தேகம் முழுக்கப் பூசிக் கொள்ளுங்கள்!’’ என்றார். கிருஷ்ணரும் சற்றும் தயங்காமல் பாயசத்தைத் தேகம் முழுவதும் பூசிக் கொண்டார். பாயசத்தின் புனிதத்தாலோ அல்லது கால வித்தியாசத்தினாலோ தன் பாதங்களில் தடவவில்லை.

துர்வாசர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். ‘‘கேசவா! தாங்கள் பூசிக்கொண்டது பாயசம் மட்டுமன்று; அது ருத்ர கவசம்! எனவே, இனி தங்கள் தேகத்தை எவராலும் எந்த ஆயுதத்தாலும் தாக்க இயலாது. இந்த சிவ கவசம் தங்களைப் பாதுகாக்கட்டும். நான் வருகிறேன்!’’ என்று கூறிவிட்டு துவாரகையை விட்டுக் கிளம்பினார்.

பின்னாளில் கிருஷ்ணாவதாரம் முடிவுறும் காலத்தில் முனிவர்களின் சாபத்தால் யாதவ குலத்தினர் பிரபாச தீர்த்தத்தில் ஒன்று கூடி சவட்டைக் கோரை வடிவங்கொண்ட வச்சிராயுதங்களால் ஒருவரையருவர் தாக்கி மாண்டனர். ஆதிசேஷன் அவதாரமான பலராமர் யோக சக்தியால் தன் உடலைத் துறந்து, ஆயிரம் தலைகள் கொண்ட சர்ப்ப வடிவுடன் கடலினுள் சென்று மறைந்தார்.

தான், வைகுண்டம் செல்லும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா, அரச மரத்தடியில் வலது தொடை மீது இடது பாதத்தை வைத்து தியான நிலையில் அமர்ந்திருந்தார்.

அப்போது ஜரை (ஜரன்) என்ற வேடன் அங்கு வந்தான். விதியினால்  தூண்டப்பட்ட நிலையில், அவன் பார்வைக்கு பகவானின் பாதம் ஒரு மான் போலத் தோற்றமளித்தது. எனவே, அவன் பாணம் தொடுத்தான். அது பகவானின் பாதத்தைத் தாக்கித் துளைத்தது. ‘ருத்ர கவசம்’ படாத பகுதியானதால் வேடனின் அம்பு இலகுவாகத் தாக்கித் துளைத்தது. பரமபுருஷனின் ஓர் அவதார நிறைவுக்கும் அதுவே மூல காரணமாக அமைந்தது.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்