நாரதர் தினமும் லட்சம் தடவையாவது "நாராயண" என்ற நாமத்தை ஜெபித்து விடுவார். ஒரு கட்டத்தில், அவருக்குத் தன்னை விடச் சிறந்த நாராயண பக்தன் இல்லை என்ற எண்ணம் உருவானது. மிகுந்த பெருமையுடன் வைகுண்டம் சென்றார்.
"நாராயணா! ஸ்ரீஹரி! பக்தவத்சலா! அடியேனின் நமஸ்காரம். ஒன்று கேட்பேன். பதிலளிப்பீர்களா?'' என்றார். "உம்...கேள், உலகத்திலுள்ள எல்லார் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையிலிருப்பவன் ஆயிற்றே, கேள்.. சொல்கிறேன்,'' என்றார்.
"இந்த உலகில் உமது சிறந்த பக்தன் யார் எனச் சொல்வீர்களா?'' "உம்...ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்திலே இருக்கிற திருத்தங்கல் வெங்கடேசன் தான் சிறந்த பக்தன்,'' என்றார் பகவான்.
நாரதருக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட பக்தனை பார்த்தே தீருவது என்று திருத்தங்கல் வந்தார். தன்னை மறைத்துக் கொண்டு வெங்கடேசனைக் கவனித்தார். வெங்கடேசன் காலையில் எழுந்தான். கடன்களை முடித்துவிட்டு "ஹரி நாராயணா" என்று சொல்லிவிட்டு கலப்பையுடன் வயலுக்குப் போனான். அங்கே காத்திருந்தவர்களிடம், "நீ உழு, நீ விதைக்கிற வேலையைப் பார், நீ களத்துமேட்டுக்கு போ, நீ உரம் போடு,'' என்று வேலைகளைப் பிரித்துக் கொடுத்தான். அவனும் வேலையில் இறங்கிவிட்டான். மாலையில், வீட்டுக்கு கிளம்பினான். "ஹரி நாராயணா" என்றபடியே கலப்பையைத் தூக்கி தோளில் வைத்தான். இரவாகி விட்டது. அவன் மனைவி சோறு போட்டாள். சாப்பிட்டான், தூங்கிவிட்டான். உணர்ச்சிவசத்தின் உச்சிக்கே போய்விட்டார் நாரதர். "இவனைப் போய் சிறந்த பக்தர் என்றாரே பகவான், நியாயம் கேட்போம்,'' என்றவர் அடுத்த கணம் வைகுண்டத்தில் நின்றார். "பகவானே! அந்த வெங்கடேசன் இரண்டு தடவை தான் உன் நாமம் சொன்னான். நான் லட்சம் தடவை சொல்கிறேன். அவனா உயர்ந்த பக்தன்!'' என்று வெறுப்புடன் கேட்டார். "நாரதா! அவன் எத்தனை தடவை ஹரிநாமம் சொன்னான்?'' "இரண்டு தடவை''. "சரி! அவனுக்கு எத்தனை வேலைகள் இருந்தன?'' "நிறைய வேலை பார்த்தான், ஏற்றம் இறைத்தான், நாற்று நட்டான், உழுதான், பணியாளர்களை மேற்பார்வை செய்தான், கஷ்டப்பட்டு உழைத்தான்''. "பார்த்தாயா! பல வேலைகளுக்கு மத்தியில் அவன் இரண்டு தடவை என் நாமம் சொன்னான். அவனைக் கவனிக்கும் ஒரே வேலையைச் செய்த இன்று ஒரு தடவை கூட என் நாமத்தைச் சொல்ல மறந்து விட்டாயே!'' என்றார். அதன்பிறகு நாரதர் பகவானிடம் பேசத்தான் முடியுமா?
ஓம் நமோ நாராயணாய!