கேட்பதை சரியாக கேளுங்கள் - இறை சிந்தனை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம் அவனை நிலை தடுமாற செய்தது.

இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.

அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான்.

"இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை.

பிறகுதான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. "ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண மூட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருப்பேனே" என்று அந்த மீனவன் வருந்தினான்.

இப்படிதான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக கேட்காமல் வெறும் பணத்தை மட்டுமே கேட்கிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் உயிருக்கு சமமான நிம்மதியை இழக்க நேரிடுகிறது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!