மதிப்பு மிக்க ராம நாமம்...

மதிப்பு மிக்க ராம நாமத்தை சொல்லியதால் ஒரு முதியவர் ஒருவருக்கு கிடைத்த மறுவாழ்க்கையை பற்றிய கதையை கீழே பார்க்கலாம். 

காசியிலே இருந்த செல்வந்தர் ஒருவர் மிகச் சிறந்த கொடை வள்ளலாக இருந்தார். முந்தைய வினைப் பயன் காரணமாக, அவரைத் தொழுநோய் முழுமையாகப் பற்றிக் கொண்டது. அவரிடம் உதவி பெற்ற பலரும் அவரைப் பராமரிக்க முன் வந்தனர். ஆனால் அவரோ தன்னுடைய கடைசிக் காலத்தில் எவருக்கும் துன்பம் தரக் கூடாது என்று நினைத்தார். எனவே, தன்னைப் பராமரிக்க முன் வந்தவர்களிடம், ‘என்னை கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று மட்டும் வேண்டுகோள் வைத்தார். வாழ்நாள் முழுவதும் அவரை பராமரிக்க முன்வந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் அல்லவே.. அவர்களும் அவரை கங்கைக் கரைக்குத் தூக்கிச் சென்றனர்.

அங்கு சென்றதும் அந்த செல்வந்தர் கூறிய வார்த்தை, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

‘எனது உடலில் பெரிய கல்லைக் கட்டி, கங்கையாற்றில் தூக்கிப் போட்டு விடுங்கள். நான் கங்கையில் மூழ்கி இறந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார்.

ஆனால் அவரது நண்பர்களும், அவரால் உதவி பெற்று அதன் காரணமாக அவரைப் பராமரிக்க வந்தவர்களும், அவர் சொன்ன காரியத்தைச் செய்ய மறுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், வேறு வழியின்றி செல்வந்தரின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, அதோடு ஒரு பெரிய கல்லையும் இணைத்துக் கட்டினர்.

அதனைக் கண்டு அவருக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் அழத் தொடங்கினர். அப்போது அந்த வழியாக வந்த கபீர்தாசரின் சீடர் பத்மநாபர் வந்தார். அவர் செல்வந்தரின் உடலில் கல் கட்டப்பட்டிருப்பதையும், அவரைச் சுற்றி நிற்பவர்கள் துக்கத்தில் இருப்பதைக் கண்டு, ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் நடந்த விஷயங்களை விளக்கமாக கூறினார்கள்.

உடனே பத்மநாபர் அங்கிருந்தவர்களிடம், ‘நான் சொல்லும்படி நீங்கள் செய்தால், அவரைக் காப்பாற்றி விடலாம்’ என்று சொன்னார். அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

பிறகு பத்மநாபர், ‘அனைவரும் ராம நாமத்தை மூன்று முறை சத்தமாக சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அங்கிருந்தவர்களில் சிலர், ‘நாங்கள் ஏற்கனவே இவரை ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்று, வழிபாடுகளெல்லாம் செய்து பார்த்து விட்டோம். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை’ என்றனர்.

பத்மநாபரோ, ‘ராமனை வணங்கி நடக்காதது, ராமனின் பெயரைச் சொன்னால் நடக்கும். முயற்சித்துப் பாருங்கள்’ என்று நம்பிக்கையோடு கூறினார். அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ராம நாமத்தை மூன்று முறை சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம்! செல்வந்தரின் நோய் முழுமையாக நீங்கி, அவர் உற்சாகமாக எழுந்து நின்று கொண்டிருந்தார்.

பத்மநாபர் அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டுபோய், தனது குருவான கபீர்தாசரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

ஆனால் கபீர்தாசரோ, மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம் கொண்டார்.

அவர் பத்மநாபரைப் பார்த்து, ‘ராம நாமத்தின் பெருமையை அறியாதவராக இருந்திருக்கிறாயே... ராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே, அவர் குணமடைந்திருப்பாரே, மூன்று முறை சொல்ல வைத்து, ராம நாமத்தின் மதிப்பைக் குறைத்து விட்டாயே’ என்று சத்தம் போட்டார்.

ராம நாமத்தின் பெருமை அவ்வளவு சிறப்புடையது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!