ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் காலதூஷகன் என்ற திருடன் சிறந்த பெருமாள் பக்தன். தான் திருடுவதில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்வதற்கும் செலவு செய்து வந்தான். ஒருசமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்றபோது, அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். அதையடுத்து, காலதூஷகனைத் தேடி அரண்மனை சேவகர்கள் வந்தனர். இந்நிலையில் இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்று, மன்னரிடம், மன்னா, நான் திருடியதாக குற்றம் சாட்டுகிறீர்களே, எதற்காக திருடினேன் என்று தெரியுமா?
நாட்டில் ஒருவனுக்கு பணப்பற்றாக்குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். என்னிடம் பொருள் இல்லாததால்தான் நான் திருடினேன். ஆகவே, என்னை என குற்றப்படுத்த முடியாது,' என்றார்.
இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படி தைரியமாகப் பேச முடியாது எனப்புரிந்து கொண்டு, வந்திருப்பது யார் எனக்கேட்டார். அப்போது ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் பெருமாள் தன் சுயரூபம் காட்டியருளினார். மன்னன் உண்மை அறிந்து மன்னிப்பு வேண்டினான். திருடன் வடிவில் வந்ததாலும், பக்தர்களின் உள்ளங்களை கவரும் திருடனாக இருந்ததால் சுவாமிக்கு, கள்ளபிரான் என்ற பெயர் ஏற்பட்டது.
ஓம் நமோ நாராயணாய