பங்குனி உத்திர நாளில் இந்திய தேசத்திலுள்ள புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியிலுள்ள எட்டு புனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
இந்த நாளில் ஸ்ரீ வேங்கடவனை சேவிப்பதும், புனித நீராடுவதும் அதி சிறப்பானவை.
அதுமட்டுமா!
வைஷ்ணவ தென்கலைப் பிரிவின் மஹா ஆசார்யரான ஸ்ரீராமாநுஜர் பெருமாளைத் தொழுது சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று வசனக் கவிதைகளைப் பாடியதால் 'உடையவர்' என்ற பதவியை திருமாலிடமிருந்து பெற்றார்.
இந்தப் பதவியை ஸ்ரீராமாநுஜர் பெற்ற நாள் பங்குனி உத்திரம்.
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் 'சேர்த்தி வைபவம்' நடைபெறுவதும் இந்த நாளில்தான்.
ஸ்ரீரங்கநாத பெருமாள் - ரங்கநாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டையிட்டுக் கொள்வதும், பின்னர் இணைவதும் இந்த நாளின் விசேஷம்.
இந்த வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கத்தைப் போலவே இந்த நாளில் காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் மற்றும் பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
இந்த வைபவம் பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் நடைபெறுகிறது.
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரமாகும்.
நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தை செய்யும்போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த நன்னாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வங்களின் திருமணங்கள் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.
திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்கு சென்று பெருமாள் ஸ்ரீராமர் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய நாளாக பங்குனி உத்திர நாள் விளங்குகிறது.
விரதம் இருப்பது எப்படி?
பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம்.
பங்குனி உத்திரம் என்பதால் விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.
ஆனால் வயதானவர்கள் மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம்.
எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம்.
பங்குனி உத்திரத்தன்று காலையில் ஸ்நான சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தை தொடங்கி விட வேண்டும்.
மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும்.
பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள்
வீட்டில் இருந்து கூட பூஜை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து சிறிய அளவில் முடிக்கலாம்.
இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும்.
பிறகு ஒரு ஸத் பிராம்மண தம்பதியினரை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாத பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து தஷிணை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும். பெருமாள் தாயாரை திருமண கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
அன்று இரவு முழுவதும் ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் போன்றவற்றை படிக்கலாம்.
வயதானவர்களுக்கு மட்டும் துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.
மற்றவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.
மேலும், 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
பலன்கள் :
பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.
இந்த நாளில் திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால் எப்பேர்ப்பட்ட திருமண தடை நீங்கி திருமணம் கூடி வரும்.
அப்படி கூடா விட்டாலும் வருடா வருடம் நடைபெறும் ஸ்ரீ லஷ்மி நாராயண கல்யாணம் மற்றும் ஸ்ரீ நிவாச திருக்கல்யாணம் தொடர்ந்து பார்த்து கொண்டே வாருங்கள்.
கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.
கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையையும் பெற முடியும்.
உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்
கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள். அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள்.
பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான். எனவே, இந்த நாள் லஷ்மி கடாட்சமாக விளங்குகிறது.
உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான்.
அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் இந்த இனிய பங்குனி உத்திர நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாகக் காணப்படும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், திருவிளக்கு பூஜை, தீர்த்தவாரி, தேர்த்திருவிழா என தமிழகம் முழுக்க இந்த நாளில்தான் பல விசேஷங்கள் காலம் காலமாக நடைபெறுகின்றன.
பங்குனி உத்திர நாளில் நீர் மோர் பானகம் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது, அன்னதானம் செய்வது போன்றவை மிகப்பெரும் புண்ணியத்தைத் தரும்.
ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து