தலை எழுத்தை மாற்றும் சடாரி

நாம் பெருமாள் கோவிலுக்குப் போகிறோம் என்றால், அங்கே தீர்த்தமும், துளசியும், பிரசாதமாகத் தருவார்கள்.

அதற்குப் பிறகு எல்லோருடைய தலையிலும் பெருமாள் திருவடிக்கு அருகில் வைக் கப்பட்டிருக்கும் சடாரியை தலையில் வைப்பார்கள்.இரண்டு கைகளையும் கூப்பி,சற்று குனிந்து, அந்தச் சடாரியை தலையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தலையெழுத்தை மாற்றும் சக்தி சடாரிக்கு உண்டு.நாம் எம்பெருமான் திருவடிகளில் சரணடைகின்றோம்.

சரணடைதல் என்றால் நம்முடைய தலையும் அவருடைய திருவடியும் பொருந்துகின்றன என்று பொருள்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொருவரும் பெருமாளின் திருவடிகளில் சென்று தலையைப் பொருத்துகின்ற வாய்ப்பு இல்லை.

ஆனால், அவனுடைய திருவடி நிலைகளான பாதுகைகளை சடாரியாக மாற்றி,பெருமாளின் திருவடித் தொடர்பு பெற்ற பாதுகைகளை அதாவது சடாரியை,நம் ஒவ்வொருவர் தலையின் மீதும் வைப்பதன் மூலமாக,பெருமாளின் திருவடிகள் நம் தலையில் பட்டு,நம்முடைய பாவங்கள் அகன்றதாக நாம் கருதுகின்றோம்.

அடுத்த முறை பெருமாள் கோவிலுக்குச் சென்று,சடாரியை நமது சிரசில் வாங்குவதற்கு முன்,அதனுடைய பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை.

ஸ்வாமி வேதாந்த தேசிகர் “பாதுகா சகஸ்ரம்” என்றொரு அற்புதமான நூலை இயற்றியுள்ளார்.

ஸ்ரீரங்கநாதரின் திருவடிப் பாதுகைகளின் பெருமையைப் பேசும் அற்புதமான இந்த நூல்,அவருக்கு கவிதார்க்கிக சிம்மம் என்ற விருதினைப் பெற்றுத் தந்தது.

ஒரே நாள் இரவிலே எழுதப்பட்ட அந்த அற்புதமான நூலில் சொல்லப்பட்ட கருத்துக்கள்,ஸ்ரீ பாதுகைகளின் பெருமையை மட்டும் அல்லாது,ஸ்ரீ வைஷ்ணவ சமயத்தின் பெருமையையும்,நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைக்கும்.

பாதுகைகள் பகவானின் திருவடிகளைச் சுமக்கின்றன.அந்தப் பாதுகைகளை நாம் தலையாலே சுமக்கின்றோம்.

வைஷ்ணவர்கள் தம்முடைய நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் காப்பு இந்த பாதுகைகளையே குறிக்கிறது.

பெருமாளின் திருவடித் தாமரைகளில் பொருந்திய பாதுகைகளைத் திருமண் காப்பாக மட்டுமல்ல,ச டாரியாகவும் அணிகின்றோம்.

சரணாகதி மார்க்கமாகிய பிரபத்தி மார்க்கத்தை,சுவாமி நம்மாழ்வார் வலி யுறுத்துவார். “புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்பது அவர் காட்டும் சரணாகதி மார்க்கம்.

வேதத்தின் விளக்கமாகத் திருவாய்மொழியை நமக்கு அருளிய நம்மாழ்வார், ஸ்ரீ ரங்கநாதரின் திவ்ய மணிப்பாதுகையாக அவதரித்தார்.மறுபடியும் பாதுகைகளே ஸ்ரீ ராமானுஜராகவும் அவதரித்தன.

இதை சுவாமி மணவாள மாமுனிகள்
பூமகள்கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாமகிழுஞ்செல்வச் சடகோபர் - தேமலர்த்தாட்கு
ஏய்ந்தினிய பாதுகமாம் எந்தை யிராமாநுசனை
வாய்ந்தெனது நெஞ்சமே வாழ்.
-என்று பாடுகின்றார்.

சரணாகதி மிக எளிதானது.அதே சமயம் மிக உயர்வானது.

பக்தி உடைய அடியவர்களுக்கு எளியவனான எம்பெருமானின் திருவடிகளுக்கு தினசரி கைங்கரியம் செய்யும் பாதுகைகள், சரணாகதர்கள் பற்றிக் கொள்வதற்கு எளிமையான சாதனமாக விளங்குகின்றன.

ஒருவருடைய கர்ம வினைகள் அவரவர் தலை எழுத்தாக பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதை மாற்றவோ நீக்கவோ ஒருவருக்கும் உரிமை இல்லை.

ஆனாலும்,ஸ்ரீ ரங்கநாதனின் திருப்பாது கைகளை,எந்த பக்தன் தன் தலை மேல் ஏற்றுக் கொள்கின்றானோ,அந்த பக்தனின் தலை மேல் இந்த சடாரி (பாதுகை) பட்டதும், அவர்கள் தலையெழுத்துக்கள் ரசவாதம் செய்தது போல் மாறிவிடுகின்றன.

ஸ்ரீ ராமபிரானின் பாதுகைகள் ராமபிரானுடைய கால்களால் மிதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தகுந்த காலத்தில் அது ராமனிடம் அரசையே பெற்று விட்டது.

ஆம்;ராமன் ஆளவேண்டிய அரசை, அவனுடைய பாதுகைகள் அன்றோ ஆண்டன!

பாதுகைகளை போலவே ஒரு சீடனும் இருந்தால், தகுந்த சமயத்தில் குருவின் ஆசியினால் உலகத்தையே வென்று விடலாம்.

அகல்யா சாப விமோசனம் ராமாயணத்தில் வரும் ஒரு அற்புதமான,உயிர்த் துடிப்பான நிகழ்ச்சி.

முனிவரின் சாபத்தால் கல்லாய்ப் போனாள் அகலிகை.

பகவானின் பாதுகையின் துகள் பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்றாள்.

பாதுகைகளில் ஒட்டி இருந்த பாததூசி, அகலிகையைக் காத்தது. அப்படிப்பட்ட அந்தப் பாதுகைகளின் தூசுகள் நம்மை மட்டும் காக்காதா என்ன?என்று ஸ்ரீவேதாந்த தேசிகர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

ராமனின் தலையில் அமர வேண்டிய மகுடம்,அவன் பாதுகைகள் மீது அமர்கிறது.எது அதிக மதிப்போ, அந்தப் பொருளைத்தான் நாம் பணயமாக வைப்போம்.

ராமன் அதிகப் பெருமையை ஸ்ரீ பாதுகைகளுக்கு தர எண்ணினா ன்.அதனை தனக்குச் சமமாக பரதனோடு அனுப்புகிறான். ஆனால், பகவானை பிரிந்து பரதனோடு செல்லும் பாதுகைகளின் மனம் எப்படி இருந்தது என்பதை வேதாந்த தேசிகரைத் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது.

எம்பெருமான் இராமனின் திருவடிகளுக்குச் செய்யும் கைங்கரியத்தை விட, பரம பாகவதனான பரதாழ்வான் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது சிறந்தது என்று எண்ணி அந்தப் பாதுகைகளை பரதனோடு சந்தோஷமாகச் சென்றதாம்.

ஸ்ரீராம பாதுகா பிரபா வத்தை முதலில் அறிந்தவன் பரதன். ஒரு பக்தனுக்காக பகவானிடம் தகவுரை செய்பவள் பிராட்டி.

இதனை வைணவத்தில் “புருஷகாரம்” என்று கொண்டாடுவார்கள். பகவானின் திருவடிகளை தஞ்சம் என அடையும் பக்தர்களுக்கு பிராட்டியின் நிலையிலிருந்து புருஷகாரம் செய்வது பாதுகைகள் அதாவது பகவானின் திருவடி நிலைகள்.

பக்தனை பகவானிடம் சேர்ப்பது, பல்வேறு மங்கலங்களைக் கொடுப்பது, அஞ்ஞானத்தை விலக்கி ஞானச் சுடர் விளக்கு ஏற்றி வைப்பது, எதிரிகளை இல்லாமல் ஆக்குவது என இத்தனை நன்மைகளையும் செய்யும் பாதுகைகளை மற்றொரு ஸ்லோகத்தில் ஏற்றிப் போற்றுகின்றார் ஸ்ரீதேசிகன்.

பாதுகைகளை ஒருவன் பற்றி விட்டால்,நவகிரக தோஷங்கள் எதுவாக இருந்தாலும், நிவர்த்தி ஆகிவிடும். அதனால் ஜாதக தோஷங்களுக்கு ஸ்ரீ பாதுகா சகஸ்ரத்திலிருந்து சில ஸ்லோகங்களைத் தினசரி பாராயணம் செய்யச் சொல்லும் வழக்கமும் இருக்கிறது.

மரண பயம் என்பது நரக வேதனை.அந்தக் காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வரத்தான் போகிறது.அதோ காலன் வந்து விட்டான். ‘‘சீக்கிரம் சீக்கிரம்”என, அவன் நம்மை அவசரப்படுத்துவான்.நம்மைச் சுற்றி அமர்ந்து உறவினர்கள் அழும் ஓசை ஒரு பக்கம்.‘‘புறப்படு சீக்கிரம்’’ என்று எம படர்கள் அதட்டும் அதட்டல் ஒரு பக்கம்.

நிலையில் அதோ ஒரு மெல்லிய சப்தம் கேட்கிறதே, அந்த மெல்லிய சதங்கை ஒலி நம் காதிலே விழுந்து மரண பயத்திலிருந்து விடுவிக்கிறதே அந்த ஒலி தான் ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகை ஒலி.

ஸ்ரீ வேதாந்த தேசிகன் பலப் பலவாக ஸ்ரீ பாதுகைகளின் பெருமைகளை, கற்பனை நயத்தோடும், தத்துவார்த்தத்தோடும், வெகுலாக லாவகமாகப் பாடுகின்றார். அதுவும் ஆயிரம் ஸ்லோகங்களில். அதில் சில ஸ்லோகங்களையாவது வாசித்துப் பழக வேண்டும்.

அப்படிப்பட்ட உணர்வை நிச்சயம் தூண்டும் நூல் தான் பாதுகா சகஸ்ரம் என்கின்ற அற்புதமான நூல்.

அடுத்த முறை, பெருமாள் கோவிலில் சடாரி வாங்கும் போது, இதில் சில விஷயங்களாவது நமது நினைவுக்கு வர வேண்டும்.

ௐ நமோ நாராயணாய

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!