நைமிசாரண்யம் - Naimicharanyam

கலியுகம் ஆரம்பத்தில் ரிஷிகள் பிரம்மாவை தஞ்சமடைந்தனர். அந்த ரிஷிகள் தியானம் செய்ய பூலோகத்தில் ஒரு இடம் அவசியம் வேண்டுமே . அது எது? ப்ரம்மா தியானம் செய்து கொண்டிருந்தார். ஒரு தர்ப்பையை வளைத்து உருண்ட சக்கரமாக பண்ணி அதை உருட்டி விட்டார்.

''ரிஷிகளே இந்த தர்ப்பைச் சக்கரத்தின் பின்னாலேயே செல்லுங்கள். அது எங்கே நிற்கிறதோ அந்த இடத்தை நீங்கள் தபோ வனமாகக் கொண்டு தியானம்,தவம் எல்லாம் செய்யுங்கள். ப்ரம்மா உருட்டி விட்ட தர்ப்பை சக்ரம் நின்ற இடம் தான் சக்ரதீர்த்தம். நைமிசாரண்யம்.   

நமது பாரத வர்ஷத்தில், முதன் முதலாக ப்ரம்மா இங்கே ஸ்வயம்பு மனுவையும், சதரூபியையும் அனுப்பி, அவர்கள் இல்லறம் நடத்தி ஸ்ருஷ்டி யை தொடர எண்ணியபோது ப்ரம்மா தேர்ந்தெ டுத்தது இந்த நைமிசாரண்யம். நமக்கு எத்தனை எத்தனையாவதோ எள்ளுத்தாத்தா பாட்டி இந்த ஸ்வயம்பு மனு, சதரூபி.

இது உத்தர பிரதேசத்தில் உள்ளது. வடநாடு என்பார்கள் வைஷ்ணவர்கள். சீதாபூர் , கைராபாத் ரோடுகளின் சந்திப்பில் உள்ளது. 20 மைல் சீதாபூரிலிருந்து, 24 மெயில் சண்டிலா ரயில் நிலையத்திலிருந்து. 45 மைல் லக்னோ விலிருந்து.

 ஸ்வயம்பு மனு - சதரூபி தம்பதியர் 23000 வருஷம் குடும்ப வாழ்க்கை நடத்தி எண்ணற்ற சந்ததிகள் உருவானது. நைமிசாரண்யத்தில் இன்றும் மனு-சதரூபி கோவிலை காட்டுகிறார்கள்.
இங்கேதான் நமது ஹிந்து சனாதன தர்மம் வேதநூல்கள் வியாசர் போன்ற ரிஷிகளால் உருவானது. ரொம்ப பெருமிதப்பட வேண்டிய விஷயம்.

வேத வியாசர் சுதருக்கு சத்யநாராயண பூஜையின் போது சொல்லும் சத்யநாராயணர் கதையை சொன்ன இடம் இது. சத்யநாராயண சுவாமி கோவில் இங்கே இருக்கிறது.

நைமிஸாரண்யம் என்றவுடனே, நிறைய ரிஷிகள், அடர்ந்த காடு, ஆங்காங்கே ஓடும் மிருகங்கள், சப்தமிடும் எண்ணற்ற பக்ஷிகள், பூத்துக்குலுங்கும் மணமிகுந்த புஷ்பங்கள் செடி கொடிகள், புல்தரை, பளிங்கு போல் ஓடும் சிற்றோடைகள்.. தூரத்தில் மலைகள் மூட்டம். இதெல்லாம் வேதகாலத்தில் வியாசர் இருந்தபோது. ஆரண்யம் என்றாலே காடு என்று அர்த்தம். இங்கே வேத வியாசர் எதிரே 88000 ரிஷிகள் அமர்ந்து அவர் வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்களை உபதேசம் செய்வதை கேட்ட காலம் அது. தவம் செய்ய ஏற்ற வனப்பிரதேசம். ம். எண்ணற்ற ரிஷிகள் தவம் செயது பலன் பெற்ற தபோவனம். தவபூமி. ஹிந்துக்களுக்கு தெய்வீகமான ஒரு ஸ்தலம்.அநேக ரிஷிகளின் அதிர்வு என்றும் இருக்கும் இடம். அதன் பல பெயர்கள் நேமிஷரன், நாபி கயா க்ஷேத்திரம், நைமிசாரண்யம், நீம்ஸார், நைமிஷ் , நிம்கர், நிம்சார் என்று பல. போதுமா? நாபி கயா க்ஷேத்திரம் என்ற பேர் எதனால் தெரியுமா? மஹா விஷ்ணு கயாசுரனை கொன்று மூன்று துண்டாக வீசியபோது அவன் வயிற்று பகுதி விழுந்த இடம் இது. ''நாபி கயா'' அதனால்தான். நைமிஷாரண்யம் என்ற பெயர் எதனால் என்றால், ராக்ஷஸர்களை நிமிஷ காலத்தில் மஹா விஷ்ணு கொன்று ரிஷிகளுக்கு இந்த காடு ராக்ஷஸ தொந்தரவு இல்லாமல் இருந்ததால் . வராஹ புராணம் இந்த நிமிஷத்தில் அசுர வதம் பற்றி சொல்கிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் இது ஒன்று.

ராவணனைக் கொன்று அயோத்தி திரும்பிய ராமர், அஸ்வமேத யாகம் செய்த இடம் நைமி சாரண்யம். அதேபோல் சீதை கடைசியில் பூமிக்குள் மறைந்த இடம். ஆதி சங்கரர் இங்கே விஜயம் செய்து தியானம் செய்திருக்கிறார். கண்ணில்லாத கிருஷ்ண பக்தர் சூர்தாஸ் வாழ்ந்த இடம். சௌனக ரிஷி மஹா பாரதத்தை மற்ற ரிஷிகளுக்கு சொல்லிய இடம். முப்பத்து மூன்று கோடி தேவாதி தேவர்கள் வந்து தியானம் செய்த இடம். அதனால் இங்கு எண்ணற்ற கோவில்கள்.

இதுவரை தோன்றிய நான்கு யுகங்களில் நான்கு தீர்த்தங்கள் தோன்றின. இதில் முதலாவதாக சத்ய யுகத்தில் தோன்றியது நைமிசாரண்யம்.

இப்போது நைமிசாரண்யம் போக பல மாதம் நடக்கவேண்டும். ட்ரைனில், பஸ்ஸில், பிளேனில் கூட போக வழியும். நல்ல ரோடு. காடைத்தேட வேண்டாம். ஹோட்டல்கள் யாத்ரிக விடுதிகள் கையில் உள்ள பணத்தின் பலத்தை ஒட்டி கிடைக்கும். 9ம் நூற்றாண்டில் நடந்தே திருமங்கையாழ்வார் வந்து இங்கே பெருமாள் மீது ''நைமிசாரத்துள் என் தாய்''என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். பெருமாள் விஷ்ணுவை ஆரண்ய ஸ்வரூபி என்பது பக்தர்கள் போற்றுவது வழக்கம். விஷ்ணுவும் ரிஷிகளும் இன்றும் மரங்களாக இந்த ஆரண்யத்தில் இருப்பதாக நம்பிக்கை.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!