Thiruputkuzhi | Sri Vijayaragava Perumal Temple | விஜயராகவப் பெருமாள் | திவ்ய தேசம் - 57

மூலவர் : விஜயராகவப் பெருமாள்
அம்மன்/தாயார் : மரகதவல்லி
தல விருட்சம் : பாதிரி
தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்புட்குழி
ஊர் : திருப்புட்குழி
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
- திருமங்கையாழ்வார்


திருவிழா :
தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி. திருக்கார்த்திகை.

தல சிறப்பு :
மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 57 வது திவ்ய தேசம்.

பொது தகவல்
மூலவரின் மேல் உள்ள விமானம்- விஜய வீர கோட்டி விமானம்.

பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று.

நேர்த்திக்கடன்
தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை
இங்குள்ள தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு
ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.

பெயர்க்காரணம் :
திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.
சிறப்பம்சம் :
மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.

அமைவிடம் :
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ., தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ தூரத்திலும் உள்ள பாலுரெட்டிசத்திரத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : காஞ்சிபுரம்

திறக்கும் நேரம் :
காலை 7 மணி முதல்12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி - 631 502 காஞ்சிபுரம் மாவட்டம்.

போன் : +91- 44-2724 6501.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!