இந்துக்களின் 16 சடங்குகள்

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.

அகத்தின் எட்டு (8) சடங்குகள்:

1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
8) பேராசை இல்லாமை

புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:

1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.

2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.

5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.

6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.

7) குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) – குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.

8) குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) – குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.

9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) – குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) – குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.

12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) – குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.

13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) –வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.

14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) – ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) – உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.

(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)

16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) – ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.

இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.

“எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. ஒருசில புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று கௌதமர் தர்மசூத்திரம் (8:23) -இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!