மூலவர் : பத்ரிநாராயணர்
அம்மன்/தாயார் : அரவிந்தவல்லி
தல விருட்சம் : பத்ரி விருட்சம், இலந்தை மரம்
தீர்த்தம் : தப்த குண்டம்
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் : பத்ரிநாத் தாம்
மாவட்டம் : சாமோலி
மாநிலம் : உத்ரகாண்ட்
பாடியவர்கள் : பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்
 
திருவிழா
கிருஷ்ண ஜெயந்தி, ஜூன் மாதம் 8 நாட்கள் நடைபெறும் பத்ரி கேதார் திருவிழா.
 
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 69 வது திவ்ய தேசம்.

இங்குள்ள மூலவர் பத்ரிநாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.
பொது தகவல்
கி.பி. 9ம் நூற்றாண்டில் காஞ்சி சுவாமிகள் இங்கு வந்தபோது இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேவப்பிரயாகை என்ற இடத்திலிருந்து 124 மைல் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு இலகுவான வழி டேராடூன் சென்று செல்வதுதான். டேராடூனிலிருந்து பஸ்களில் இவ்வூரை அடையலாம். இந்த கோயிலுக்கு செல்லும் முறையே வித்தியாசமானது. இது மிகப்பயங்கராமான மலைப்பாதை என்பதால் பஸ்கள் காலை 6 மணியளவில் புறப்பட்டு மாலை 4.30 மணி வரை ஓடிக்கொண்டிருக்கும். பின்பு அடுத்தநாள் காலையில் புறப்பட்டு மாலையில் பத்ரிநாத்தை சென்றடையும். 2நாட்கள் பஸ் பயணம் இருக்கும். இடையில் ஜோஷிமாத் என்ற ஊரில் பஸ்கள் நிறுத்தப்படும். இங்கிருந்து மறுநாள் புறப்பட்டு 42 கி.மீ. தொலைவிலுள்ள பத்ரிநாத்தை அடையலாம். 

இப்போதுள்ள கோயில் கட்டடம் 18ம் நூற்றாண்டில் கார்வால் அரசர்களால் கட்டப்பட்டது. கர்ப்பகிரகம், தரிசன மண்டபம், சபா மண்டபம் ஆகியவை உள்ளன. கருடன், குபேரன், நாரதர், மகாலட்சுமி, ஆதிசங்கரர், சுவாமி தேசிகன், ராமானுஜ குருவின் சீடர் பரம்பரர் மற்றும் நாராயணர் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஸ்ரீமன் நாராயணன் வேதங்களை சிருஷ்டித்து தானே ஆதி குருவாக தோன்றி மக்களை உய்விக்கும் பொருட்டு, நரநாராயணனாக இமாலயத்தில் திருஅவதாரம் எடுத்து தவக்கோலம் பூண்டார். அது சமயம், லட்சுமி தேவியானவள் பத்ரி (இலந்தை மரம்) - யாக உருவெடுத்து மகா விஷ்ணுவிற்கு நிழல் கொடுத்து நின்று அவருடைய தவம் பூர்த்தியடைய உதவிசெய்தாள். இதன் காரணமாகவே இவ்விடத்திற்கு பத்ரிகாஸ்ரமம் என்ற பெயர் பெற்றது. ஸ்ரீமன் நாராயணன் தவம் பூர்த்தியான பின் மனிதனுக்கு முதலில் இங்கு தான் தாரக மந்திரரோபதேசம் செய்ததாக கூறுவர். உலகில் தோன்றிய ஞானம் அனைத்திற்கும் ஆரம்ப இடம் இதுவே. இத்தலத்தை திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும், தங்களது பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
பிரார்த்தனை
திருமணம் தடைபடுபவர்கள் இங்கு வந்து பத்ரிநாராயணரையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னுமிடத்தில் முன்னோர்களுக்கு காசி, கயா போல பிண்டம் இட்டு, அலக்நந்தாவில் பிண்டத்தை கரைத்தால் புண்ணியம் என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நேர்த்திக்கடன்
பத்ரிநாதருக்கு பால், தேன், அபிஷேகங்களும், திருமஞ்சனமும், மஹாபோக் என்ற நிவேதனமும் படைக்கப்படுகிறது.

தலபெருமை
இத்திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 10,248 அடி உயரத்தில் உள்ளது. செல்லும் பாதைகள் பெரும் வளைவுகளைக்  கொண்டவை. மிகக் குளிர்ந்த பகுதி என்பதால் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இங்கு தரிசனம் இருக்கும். மற்ற ஆறு மாதங்கள் நடை பூட்டப்படும். வைகாசி மாதத்தில் இருந்து கார்த்திகை மாதம் வரை பக்தர்களுக்கு நடை திறக்கப்படும். மார்கழியில் இருந்து சித்திரை வரை தேவர்கள் மட்டுமே இங்கு தங்கி தரிசனம் செய்வதாக ஐதீகம். அதிகாலையில் இங்கு நடைபெறும் தரிசனத்தை காண்பதற்கு முதல் நாளே ரூ.101 கட்டி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இங்கு பத்ரி நாராயணரை பத்ரி விஷால் என்றும் அழைப்பார்கள். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள இறைவன் குபேரனை அழைத்து மிக ஆடம்பரமான முறையில் திருமணம் ஏற்பாட்டை செய்த தலம் இது என்றும் கூறப்படுவதுண்டு. எனவே திருமணம் கைகூடாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வருவது சிறப்பைத் தரும். இந்த குபேரன் வசிக்கும் அளகாபுரி என்னும் பட்டணம் இங்கிருந்து 9 மைல் தொலைவில் இருப்பதாக கூறுகின்றனர்.

அதை நினைவுப்படுத்தும் வகையில் குபேரனுக்கு இக்கோயிலில் சன்னதி உள்ளது. இங்குள்ள அலக்நந்தா நதியும், குபேரப்பட்டிணத்தில் உற்பத்தியாகி வருகிறது. இது தேவப்ராயாக்கில் பாகிரதியுடன் கலந்து கங்கை என்ற பெயரை பெறுகின்றது.

இந்த தலத்தில் திருமந்திரம் அவதரித்தாக கூறப்படுகிறது. இங்கே பெரியாழ்வார், திருமங்கை ஆய்வார் ஆகியோர் வந்து வழிபட்டுள்ளனர். இந்த தலத்தை நந்தவனம் என்றும் குறிப்பிடலாம்.
நாராயணன் எங்கும் குடியிருப்பவர். இவர் இந்த குளிர்பிரதேசத்தில் நடத்தும் ஒரு அற்புதம் பக்தர்கள் வாழ்வில் மறக்க முடியாததாகும். இந்த தலத்தில் ஐந்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன. தப்த குண்டம், நாரதகுண்டம், கூர்ம தாரா, பிரகலாததாரா, ரிஷிகங்கர் ஆகியவையே அந்த தீர்த்தங்கள். இதில் கூர்மதாரா தீர்த்தம் அன்னதானங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது. இங்குள்ள தப்தகுண்டத்தில் நீராடிய பிறகே கோயிலுக்குள் செல்ல வேண்டும். இங்கு ஓடும் கங்கை நதியில் குளிப்பது இயலாத காரியம். எனவே தப்த குண்டத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். இந்த குண்டத்தில் வெந்நீர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிசய மாற்றம் எப்படி நடக்கிறது என்பது இதுவரை யாராலும் அறியப்படவில்லை. அக்னி பகவான் ஒரு முறை நெய் அதிகமாக உண்டமையினால் அஜீரணம் உற்றார். அதனை பொறுக்க முடியாத அக்னி பகவான் விஷ்ணுவை நோக்கி தவம் புரிந்தார். உடனே விஷ்ணு பகவான் அக்னி பகவானை ஜல ரூபமாய் பிரவேசிக்கச்செய்து அதில் பக்தர்கள் ஸ்நானம் செய்வதால் அவர்களுடைய பாவமெல்லாம் கறைந்துவிடும் என்றும் அதே சமயம் அக்னி பகவானின் அஜீரணமும் நீங்கும் என்றும் கூறினார். அது முதல் அக்னி பகவான் பத்ரி நாராயணரின் திருவடியிலிருந்து நீர்த்தாரை தாரையாகப் பிரவேசித்து சப்த குண்டலத்திலிருந்து விழுந்து பின்னர் சிதள குண்டத்தை அடைகின்றது. உடல் ஏற்கும் அளவிற்கு சூடாக உள்ள இந்த நீர் குண்டத்திற்கு அருகில் உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஜில் என்று அலக்நந்தா நதி பெருக்கெடுத்து ஓடுவது வியப்பாக உள்ளது. உலகில் நடைபெறாத அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆதிசங்கர் பிறப்பால் கேரளத்தைச்சேர்ந்தவர் என்பதால் இத்தலத்தில் கேரளத்து நம்பூதிரிகளை பூஜகர்களாக ஏற்பாடு செய்தார். இவர்களுக்கு ராவல்ஜி என்ற பெயர் உண்டு. எனவே, இங்கு பூஜைகள் கேரள முறைப்படி நடைபெறுகின்றது. ஆதிசங்கரர் இந்து மதத்தினை பரப்ப முதன் முதலாக தெற்கே சிருங்கேரியிலும், வடக்கே பத்ரிநாதத்திலும் கிழக்கே பூரியிலும், மேற்கே துவாரகையிலும், சிருங்கேரி மடங்கள் நிறுவினர். எனவே பத்ரியில் உள்ள சிருங்கேரி மடம் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்ரிநாத்கோயில் வருடந்தோறும் தீபாவளி ஒட்டி மூடப்படும். அதன் முன்னர் போதுமான நெய்யினை வாங்கி விளக்கேற்றி விட்டு, கோயிலினை மூடுவர். பின்னர் மே மாதத்தில் திறக்கப்படும் போது இத்தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பது தனிப்பெரும் சிறப்பு. எரியவிட்டு ஆறு மாதங்கள் கோயில் மூடப்பட்டிருக்கும் காலத்தில் தேவர்கள் இவ்விடத்திற்கு வந்து பத்ரிநாதரை பூஜிப்பதாக ஐதீகம்.

தல வரலாறு
முன்னொரு காலத்தில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. இது பார்வதி தேவிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே, தனது கணவராகிய சிவபெருமானிடம் முறையிட அவர் பிரம்மதேவனின் பேரில் கோபம் கொண்டு பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளிவிட்டார். பிரம்மஹத்தி தோஷத்தின் காரணமாக இத்தலை அவர் கையைவிட்டு கீழே விழவில்லை. அவர் விஷ்ணுவிடம் சென்று கேட்க பூலோகத்தில் பதிவிரதை ஒருவரிடம் பிட்சை ஏற்றால் பிரம்மஹத்தி தோசம் நீங்கிவிடும் என்று கூறினார். சிவபெருமானும் கைலாயத்தை விட்டு இறங்கி பூலோகத்திற்கு வந்தார். அச்சமயத்தில் பத்ரி காஸ்சரமத்தில் மானிடனுக்குத் தாரக மந்திரத்தை நாராயணர் உபதேசித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் நாராயணனுக்கு பணிவிடைகள் செய்து கொண்டிருந்த மகாலெட்சுமியிடம் பிச்சைகேட்க மகாலட்சுமி பிச்சையிட்டதும், சிவபெருமான் கையிலிருந்த பிரம்மதேவனின் தலை இங்கே விழுந்து விட்டது. இதைத்தான் பிரம்மகபாலம் என்பர். எனவே, பித்ருக்களுக்கு பிண்டம் இடுவது சிறப்பு. நமக்கு நாமே ஆத்ம பிண்டமும் இட்டுக்கொள்ளலாம்.

சிறப்பம்சம்
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மூலவர் பத்ரிநாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.

அமைவிடம்
திருச்சி - சென்னை-315 கி.மீ., சென்னை - டெல்லி- 2184 கி.மீ., டெல்லி-ஹரித்துவார்- 205 கி.மீ., ஹரித்துவார் - ரிஷிகேஷ்- 24 கி.மீ., ரிஷிகேஷ் - பத்ரிநாத்- 301 கி.மீ., பத்ரிநாத் - கேதார் நாத்- 243 கி.மீ. (ருத்ரப்பிரயாகை வழி), ஜோஷிமட் - பாண்டுகேஷ்வர் வழி - 24 கி.மீ., பாண்டுகேஷ்வர் - பத்ரி - 24. கி.மீ.

அருகிலுள்ள ரயில் நிலையம் 
பத்ரிநாத்

அருகிலுள்ள விமான நிலையம்
டேராடூன்

தங்கும் வசதி
ஜோஷிமாட்டில் உள்ள பெரிய லாட்ஜ்களிலும், தர்ம சாலைகளிலும் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.

திறக்கும் நேரம்
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில் பத்ரிநாத் தாம், சாமோலி மாவட்டம்,உத்ரகாண்ட் மாநிலம்.