தோஷமுள்ள ஜீவர்களை பெருமாளின் திருவடியில் சரணாகதி பண்ண வைத்து தாம் அவர்களுக்காக பெருமாளிடத்தில் பிரார்த்திக்கும் போது சந்தோஷமடைகின்றார்களாம் ஒரு ஜீவன் கடைத்தேற வழி செய்தோமேயென்று! பாதுகையும் அதைத்தானேச் செய்கின்றது.!
நம்மையும் நம்பெருமாளின் திருவடியையும் பந்தபடுத்தி பிரார்த்திக்கின்றது. நம்பெருமாளின் ஸ்ரீசடாரி சாதிக்கப்பெற்ற அனைவருமே நம் பரம ஆச்சார்யரான ஸ்வாமி நம்மாழ்வாரின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.
என்னதாவி என்னும் வல்வினையினுட்கொழுந்தெழுந்து
உன்ன பாதமென்ன நின்ற ஓண்சுடர்க் கொழுமலர்
மன்னவந்து புண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே (திரு-17)
எம்பெருமான் பரமபதத்தில் துயில்வது நித்யசூரிகள் அனுபவிப்பதற்கு – திருப்பாற்கடலில் உறைவது அதன் கரையில் வாழும் ஸ்வேத தீப வாஸிகள் அனுபவிப்பதற்கு – ஆனால் பரமபதத்தினை விரஜாநதி சூழ்ந்திருப்பது போல பொன்னி சூழ்ந்த திருவரங்கத்தில் உறைவது பாபக்குவியலான எனக்கு.
வேறு எவரிடமும் காண முடியாத நேர்மையையும், எளிமையையும் உடைய, தேவரீரிடம் ருசியை உண்டாக்கி என்னை அனுபவிக்கச் செய்வதற்கு! பாபக்குவியலான என்னுடைய ஆத்மாவிற்கு உன்னைக் குறித்த ஈடுபாடு தோன்றிற்று. பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்களும், முத்துக்களும் சேர்ந்து பாதுகை தம் செம்பவளவாய் திறந்து, தம் முத்துப்பல் காட்டி சிரிக்கின்றதாம். எதற்கு..?
பிழைசெய்த மக்கள்தமை பெருமாள் திருவடியில் சேர்ப்பித்து திருப்தியோடு புன்னகை புரிகின்றதாம். பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள அநேக ஜாதிகற்களும் சேர்ந்து மயில் தோகை போன்றுள்ளதாம். இது கிருஷ்ணாவதாரத்தில் அவரின் திருமுடியில் ஏறியமர்ந்ததற்கு மன்னிப்புக் கேட்டு பெருமாள் திருவடியில் அடைக்கலம் புகுந்தது போலுள்ளதாம்!.
நாம் இப்போது இருக்கும் லோகத்திலிருந்து பிரும்மலோகம் வரையில் லீலாவிபூதி என்று பெயர். இது பிரகிருதியால் செய்யப்பட்டது. இந்த பிரகிருதிக்கு ஸத்வம், ரஜஸ், தமோ மூன்று குணமுண்டு. நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு, வெளுப்பு, கறுப்பு ஆகிய ரத்னங்கள் இந்த மூன்று குணங்களின் பிரதிபலிப்பாக, பிரகிருதியின் பிரதிபலிப்பாக, நம்பெருமாளின் திருவடியில் சேர்ந்திருக்கின்றது. இந்த மூன்று குணங்களால் அனைத்து ஜீவன்களும் திண்டாடுகின்றது.
இந்த பிரகிருதியானது ஸம்ஸாரம், மோக்ஷம் இரண்டுக்குமே உதவுகின்றது. ஆனால் பாதுகை, அதாவது நம்மாழ்வார், மோக்ஷத்திற்கு மாத்திரமே உதவுகின்றார்.
பாதுகையில் வைரமும், இந்திர நீலக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளன. இதனைப் பார்க்கும் போது பகலும், இராத்திரியுமாக, தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷத்தினை கொடுப்பதற்காக, பகல், இரவு இரண்டினையும் விலங்கில் போட்டிருப்பது போலுள்ளதாம். நல்ல ஆச்சார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு புண்ணியம், பாபம் இரண்டும் தொலைந்து நித்யமான பெருமாளுடைய லோகம் கிடைக்கின்றது.
பாதுகைதான் நல்ல ஆச்சார்யன்! பாதுகையினைப் பணிவோம்! பெறுதற்கரிய பேறு பெறுவோம்!