கடவுளை காட்டுங்க - ஆன்மீக கதை

நாமதேவருடைய குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் சைதன்யனும் ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருந்த சைதன்யனை குருவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே, தனக்குக் தெரிந்த அனைத்தையும் நாமதேவன் சைதன்யனுகுக் கற்றுக் கொடுத்தார். குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற சைதன்யனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.

ஒரு நாள் நாமதேவர் அவனை அழைத்து, "மகனே நீ கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டுவிட்டாய். இத்துடன் குருகுலவாசம் உனக்கு போதும். நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத் தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத் துணை இருப்பார்," என்று வாழ்த்தினார்.

தனது குருவை தரையில் விழுந்து வணங்கிய சைதன்யன் அவரிடம் பணிவாக, "குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப் பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும் எனக்குக் காட்டவில்லையே! கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பார்?" என்று வினவினான்.

"சைதன்யா உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள காட்டின் வழியே சுசந்த நகர் எனும் நகரத்தைத் தாண்டி பவானிபுரத்திற்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து அவனுடைய சேமலாபங்களை விசாரித்துக் கொண்டு வா?" என்றார்.

"அப்படியே செய்கிறேன் குருவே", என்று பதிலளித்தான் சைதன்யன். குருவின் மனைவி கொடுத்த உணவுப் பொட்டலங்களுடன், மறுநாள் காலையில் கிளம்பினான் சைதன்யன்.

குருகுலம் - சைதன்யன்

நண்பகல் நேரம் காட்டு வழியில் பாதியைக் கடந்து விட்டான். அப்போது அவனுக்கு மிகவும் தாகம் உண்டாயிற்று. இந்தக் காட்டில் குடிக்கத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று தேடிய அவன் கண்களில் ஒரு வயதான பார்வையற்ற மனிதன் தென்பட்டான். அவன் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப் பார்த்துப் பின் அதை முகர்ந்து பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்கொண்டான்.

"ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டான்.

"நான் இந்தக் காட்டில் வசிப்பவன். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு வழங்குகிறேன். குருடன் என்பதால், முகர்ந்து பார்த்து மூலிகைகளைக் கண்டுபிடிக்கிறேன்," என்றான்.

"இப்போது நீங்கள் பறித்துக் கொண்டிருப்பது என்ன மூலிகை?" என்றான்.

"இது பாம்புக் கடிக்கான மூலிகை. இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில் விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில் சுற்றுகிறாயே... இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்," என்று சில இலைகளைக் கொடுத்தான்.

அவற்றை பத்திரமாக வைத்துக்கொண்ட சைதன்யன், "ஐயா, குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான்.

"அருகில் ஒரு கிணறு உள்ளது!" என்று கிணறு இருக்கும் இடத்தைக் காட்டினான்.

அந்தக் கிணற்றை அடைந்து தாகம் தீரத் தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான் சைதன்யன். அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக் கண் விழித்த சைதன்யன் கண்களில் வேகமாக ஓடும் ஒரு முயல் தென்பட்டது.

திடீரென மரத்தில் ஏதோ சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர் தப்பினான் சைதன்யன்.

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த சைதன்யன் இருட்டும் நேரத்தில் சுசாந்த நகரை அடைந்தான். அங்கு பசியால் வாடிய ஒரு பிச்சைக்கார குடும்பத்திற்கு எஞ்சிய உணவுகளை கொடுத்துவிட்டு அன்று இரவு ஒரு சத்திரத்தில் தங்கினான்.

நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சைதன்யன் தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனிதனின் வாயில் நுரைதள்ள முனகிக் கொண்டிருபதைப் பார்த்தான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்த மனிதனின் அபாய நிலையை உணர்ந்த சைதன்யன் உடனே தன்னிடமிருந்த விஷக்கடி மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அந்த மனிதனின் வாயில் விட்டான். சற்று நேரத்திற்க்கெல்லாம் அவன் சாதாரண நிலையை அடைந்தான்.

அந்த நபர் யாருமல்ல! குடிமக்களின் குறைகளை அறிய மாறுவேடம் பூண்டு இரவில் திரிந்த அந்த நாட்டு மந்திரி.

சைதன்யனுக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மந்திரி, "நீ என் உயிரைக் காப்பாற்றினாய். அதற்க்கு செய் நன்றியாக உனக்கு மன்னரிடம் வேலை வங்கித் தருகிறேன்," என்றார்.

"மிகவும் நன்றி ஐயா. ஆனால், நான் முக்கிய அலுவலகமாக பவானிபுரம் சென்று கொண்டிருக்கிறேன். சில தினங்கள் கழித்து உங்களை சந்திக்கிறேன்," என்று கூறி மந்திரியிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டான்.

மறுநாள் காலை பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரை சந்தித்து சேமலாபங்களை விசாரித்து அறிந்து, பிறகு தன் குருவிடம் திரும்பினான் தான் சென்று வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும் விளக்கிக் கூறினான்.

"மகனே, நினைவிருக்கிறதா? கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகக்திற்கு நான் ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்து விட்டது. கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா?" என்றார்.

"நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்? பார்க்கவில்லையே!" என்றான் ஆச்சரியத்துடன் சைதன்யன்.

"மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால், ஒரே உருவத்தில் அவர் உனக்குத் தோன்றவில்லை," என்றார்.

"எந்த குருட்டு முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகை தந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்ப்படும் என்று எண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள் தான். உன்னுடைய உயிரைக்காப்பற்றிய முயலும் கடவுள் தான். எந்த மந்திரியை பாம்புக் கடியிலிருந்து நீ பிழைக்க வைத்தாயோ, அவருக்கு நீ கடவுள். இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்?" என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து உணர்ந்ததும் சைதன்யனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று. தனக்கு ஞானோதயம் உண்டு பண்ணிய குருவை விழுந்து வணங்கி விட்டு, அவரிடமிருந்து விடை பெற்றான்.

இதற்குப் பிறகு சைதன்யன் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு சுசாந்த நகரை அடைந்து மந்திரியை சந்தித்தான். மந்திரியின் உதவியால் அவனுக்கு அரசாங்கத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!