சிறுவனின் திருப்திக்காக உணவு உண்ட இறைவன்

ஒருசமயம், அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பிராமணர், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மது என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பகவானின் முன்பு உணவை வைத்துவிட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார்.

முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, பகவானுக்கு உணவு கொண்டு வந்த மது, அதனை படைத்து விட்டு, “எனதன்பு பகவானே, இந்த படையலை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சிறுவன் என்பதால் படையலை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது” என்று கூறி பிரார்த்தித்தான்.

அதன் பிறகு, மது தனது நண்பர்களுடன் விளையாடு வதற்காக வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான்.

“பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்பட்டால், அவர் என் மீது கோபப்படுவார். தயவுசெய்து சாப்பிடுங்கள்,” என்று அவன் வேண்டினான்.

மீண்டும் வெளியே சென்று திரும்பி வந்த மது, தட்டில் உணவு இன்னமும் அப்படியே இருப்பதைக் கண்டான். அதை உண்ணுமாறு அவன் மீண்டும் பகவானை கண்ணீர் மல்க வேண்டினான்.

மூன்றாவது முறையாக மது திரும்பி வந்தபோது, பகவானின் முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டு காலியாக இருந்தது.

அந்த காலித்தட்டை மது மகிழ்ச்சியுடன் தனது தாயாரிடம் எடுத்துச் சென்றான்.

“பிரசாதம் எங்கே?” அவள் கேட்டாள்.

“அலர்நாதர் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்!” என்று மது பதிலுரைத்தான்.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மதுவும் அவனது குடும்பத்தினரும் பட்டினியாக இருந்தனர்; ஏனெனில், மது எப்போது உணவு படைத்தாலும் பகவான் அதனை முழுவதுமாக சாப்பிட்டு வந்தார்.

ஸ்ரீ கேதனன் திரும்பி வந்து நடப்பவற்றை அறிந்தபோது, தனது மகனைக் கடிந்து கொண்டார்.

“பகவான் அலர்நாதரின் பிரசாதத்தை நீ என்ன செய்தாய்?”

“அவர் சாப்பிட்டு விடுகிறார் தந்தையே. தாங்கள் சொல்லித் தந்தபடியே நான் அவருக்குப் படைத்தேன்.”

“அவர் சாப்பிட்டிருக்க முடியாது. அவர் ஒரு கற்சிலை,” என்று ஸ்ரீ கேதனன் பதிலுரைத்தார்.

இருப்பினும், என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஸ்ரீ கேதனன் விரும்பினார். எனவே, தனது மகன் பகவானுக்கு உணவு படைத்தபோது, அவர் ஒரு தூணிற்குப் பின்னால் மறைந்து_கொண்டார். மது சென்ற பின்பு, பகவான் கீழே குனிந்து பாயாசம் இருந்த கிண்ணத்தை எடுப்பதை ஸ்ரீ கேதனன் மறைந்தபடி பார்த்தார். தூணின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ கேதனன், பகவானின் கையைப் பிடிக்க, சூடாக இருந்த பாயாசம் அவரது திருமேனியில்சிந்தியது.

“நிறுத்துங்கள்!” ஸ்ரீ கேதனன் கூக்குரலிட்டார். “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விக்ரஹம் உணவு உண்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? 

நீங்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டால், நாங்கள் எவ்வாறு வாழ முடியும்?” 

அலர்நாதர் பதிலுரைத்தார்: “பிராமணனின் போர்வையில் உள்ள லெளகீகவாதியே, உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாத மனிதனால் படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. எளிமையான முறையில் அன்புடன் அர்ப்பணித்த காரணத்தினால், மது கொடுத்த உணவை நான் ஏற்று வந்தேன்.”

சூடான பாயாசம் பட்டதால், பகவான் அலர்நாதரின் உடலில் ஏற்பட்ட தழும்புகளை கோயிலில் உள்ள பிராமணர்கள் இன்றும் நமக்குக் காட்டுகின்றனர்.

கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!