திரிபுரதாசர்

கிருஷ்ணர் அருள்புரியும் திருத்தலமான மதுராவில் திரிபுரதாசர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். இயல்பிலேயே அவரது மனம் கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்திருந்தது. 

எப்போதும் கடவுளின் சேவையில் ஈடுபட்டு வந்தார். பஜனை பாடல்களைப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். கல்வி, கேள்விகளில் சிறந்த தாசரைப் பற்றி அறிந்த மதுராவை ஆண்ட மன்னன், அவரை அமைச்சராக நியமித்தான். ஆனால் அவர் அந்தப்பதவியை விரும்பவில்லை. 

சிறிது காலத்திலே மன்னரிடம் அவர், அரச பதவியில் இருப்பவர் போர் சிந்தனையிலேயே இருக்க வேண்டியுள்ளது. பகவானுக்கு கைங்கர்யம் செய்வதை விரும்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன், என்று கூறினார்.

அமைச்சரின் எண்ணத்தை அறிந்த மன்னன், பக்தர் ஒருவர் தன்னிடம் பணியாற்றியதை எண்ணி மகிழ்ந்தான். தாசருக்கு நிறைய பொன்னும் பொருளும் வாரி வழங்கினான். ஆனால், பொருளாசை அற்ற தாசர், அதை ஏழைகளுக்கும், கோயில் திருப்பணிக்கும் செலவிட்டார். 

நாம சங்கீர்த்தனம் செய்வதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நல்லநாளில் இல்லத்தில் பஜனை நடத்தி, அடியார்களுக்கு அன்னதானம் செய்தார். மனைவியை அழைத்துக் கொண்டு யாத்திரை கிளம்பினார். பக்திப்பாடல்களைப் பாடியபடியே நடந்தார். அவர்கள் பிருந்தாவனத்தை அடைந்தனர். 

அங்குள்ள கோயில் கோபுரத்தைக் கண்டதும், தாசரின் மனதில் பக்தி பெருக்கெடுத்தது. பிருந்தாவன கிருஷ்ணரைத் தரிசித்த பின், வேறு எந்த திருத்தலத்திற்கும் செல்ல அவருக்கு மனமில்லை. அங்கேயே தங்கி, கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினர். சிறுகுடில் அமைத்து தங்கினர். 

உஞ்ச விருத்தியாக (யாசகம் செய்தல்) கிடைக்கும் அரிசியைச் சமைத்து பகவானுக்கு நைவேத்யம் செய்து உண்டார். பஜனை செய்ய ஒருநாளும் தவறியதில்லை. ஒருமுறை, பிருந்தாவனத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. மன்னர்கள், செல்வந்தர்கள் பட்டு பீதாம்பரங்களை கிருஷ்ணருக்கு காணிக்கையாக அளித்தனர். 

பக்தர்கள் இறைவனுக்கு புதுப்பட்டாடை அணிவித்ததைப் பார்த்த திரிபுரதாசர், தாமும் இறைவனுக்கு பட்டாடை சமர்ப்பிக்க விரும்பினார். இந்த ஆசையைத் தன் மனைவியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் மனைவி, சுவாமி! ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஒரு நூல் வேட்டியாவது வாங்கிக் கொடுப்போம் என்றார். 

பிறகு வீட்டிலிருந்த ஒரு பித்தளைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குப் புறப்பட்டார். அதை விற்று விட்டு அந்தப் பணத்தில் நூலாடை ஒன்றை வாங்கிக் கொண்டு கண்ணபிரான் ஆலயத்துக்குள் நுழைந்தார். கோயிலில் சந்தியாகால தீபாராதனையின்போது, பக்தர் கூட்டம் கண்ணனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தது. திரிபுரதாசர், அர்ச்சகரிடம் ஆடையைக் கொடுத்து அதை எம்பெருமான் திருமேனியில் சாத்தி, கற்பூர ஆரத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அந்த ஆடையை வாங்கிய அர்ச்சகர், அவரை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்து விட்டு, ‘‘பெரிய செல்வந்தர்கள் தரும் விலை உயர்ந்த பட்டாடைகளே அணிவிக்க முடியாமல் ஆலயத்தில் குவிந்திருக்கின்றன. இதைச் சமர்ப்பிக்கவா ஓடோடி வந்தீர்? இந்தத் துணியை எடுத்துச் செல்லுங்கள்!’’ என்றார் சத்தமாக. உடனே திரிபுரதாசர், ‘‘ஐயா! இந்த ஏழையின் ஆடையை ஒரு முறையேனும் இறைவன் திருமேனியில் சாத்த வேண்டும்!’’ என்று நயமாகச் சொல்லி, அதை அர்ச்சகரிடமே கொடுத்துவிட்டு கோயிலை வலம் வரச் சென்றார்.

அர்ச்சகர் ஏளனத்துடன் அந்தத் துணியைக் கீழே விரித்து, அதன் மேல் கால்களை நீட்டி அமர்ந்து விட்டார். இரவில் திருமஞ்சனம் முடிந்து பூஜைகள் ஆரம்பமானதும் மூலமூர்த்தியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அர்ச்சகர்கள் துப்பட்டாக்களையும், பீதாம்பரங்களையும் கொணர்ந்து போர்த்தினர். எனினும் நடுக்கம் குறைய வில்லை. தூபம், தீபம், அகில், கற்பூரம் ஆகியவற்றைக் கமழச் செய்தனர். நடுக்கம் நின்றபாடில்லை. செய்தி ஊரில் பரவ, கோயிலில் குழுமிய மக்கள், ‘இது என்ன கெட்ட காலமோ?’ என்று கலங்கினர். 

அப்போது, ‘எம்பக்தன் திரிபுரதாசன் தந்த நூல் ஆடையை அணிவித்தால் என் நடுக்கம் நிற்கும்’’ என்ற அசரீரிக்குரல் அர்ச்சகரின் செவியில் விழுந்தது. அதை எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் தெரிவித்த அந்த அர்ச்சகர், தான் கீழே விரித்திருந்த துணியை எடுத்து உதறிவிட்டு பயபக்தியுடன் எம்பெருமான் திருமேனியில் சாத்தினார். 

திரிபுரதாசர் அளித்த நூல்வேட்டியை மூலவருக்கு அணிவித்ததும் பகவானின் நடுக்கம் நீங்கியது

அப்போது கோயில் பிராகாரத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்த திரிபுரதாசர், யாரோ பிடித்து உலுக்கியது கண்டு விழித்து எழுந்தார். 

விவரம் அறிந்த தாசர், ‘‘வேணுகோபாலனே! எனது எளிய ஆடையை ஏற்றுக் கொண்ட உமது பெருந் தன்மையை என்ன சொல்வேன்!’’ என்று மெய் சிலிர்க்க, கை கூப்பியபடி நின்று விட்டார்.

அங்கு ஓடோடி வந்த அர்ச்சகர், ‘‘சுவாமி! அறியாமல் அபசாரம் செய்து விட்டேன். இறைவனே வலியக் கேட்டு, உமது ஆடையை அணிந்த பெருமையை என்னவென்பேன்! என்னை மன்னியுங்கள்!’’ என்று திரிபுரதாசரின் காலடியில் விழுந்தார்.

திரிபுரதாசரின் பக்தி எங்கும் பரவியது. அவரும், அவருடைய மனைவியும் பிருந்தாவனம் கோயிலியே தங்கி சேவையில் ஈடுபட்டனர். 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!