அதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் மூன்றாம் பத்து பத்தாம் திருமொழியின் எட்டாவது பாசுரத்தில் தெரிவிக்கிறார்:
“அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும்
செய்எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே!”
திருமாலின் திருவடிகளை பிடித்துக் கொண்டால் துக்கமே இல்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதே இப்பாடலின் சாரமாகும்.
அல்லல் இல் இன்பம் அளவிறந்து--
துக்கம் என்பது சிறிதும் இல்லாத எல்லையற்ற ஆனந்தத்துடன் வைகுண்டத்தில் திகழ்கிறார் திருமால். அவரது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை, அதில் துக்கத்தின் கலப்பும் இல்லை.
எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்--
அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கத்தையும் தனியாகப் பார்த்தாலும் அழகு நன்கு வெளிப்படுகிறது, திருமேனியை மொத்தமாகப் பார்த்தாலும் அழகு திகழ்கிறது. அந்த அழகின் ஒளியானது வைகுண்ட லோகம் முழுவதும் பரவி வெள்ளம் போலே பெருக்கெடுத்து ஓடுகிறது.
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
தாமரை மலரின் வாசனையே ஒரு வடிவம் கொண்டது போல் திகழ்கின்ற மகாலட்சுமியுடன் ஆனந்தமாக இணைந்து களித்து மேலும் மகிழ்பவர். அதாவது, தனக்கே உரித்தான இயற்கையான பரமானந்தம் அளவிறந்து இருக்க, அதற்கும் மேலான பரமானந்தமாக மகாலட்சுமியுடன் சிருங்காரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்கிறார் திருமால்.
எல்லையில் ஞானத்தன் –
மகாலட்சுமியோடு இப்படி உறவாடுவதற்குத் தேவையான பேரறிவை கொண்டவர் திருமால். அவரது ஞானத்துக்கு எல்லையே இல்லை.
ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் –
அந்த ஞானத்தைக் கொண்டே அனைத்துச் செயல்களையும் செய்ய வல்லவர் திருமால். அதாவது, மனிதர்களான நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தியே செய்ய முடியும். ஆனால் இந்த உலகை இயக்குதல் உட்பட அனைத்தையும் திருமால் தனது எண்ணத்தாலேயே செய்து முடித்து விடுகிறார்.
எல்லையில் மாயனை –
எல்லையில்லாத வியக்கத்தக்க செய்கைகளைக் கொண்டவர் திருமால்.
கண்ணனை –
அந்த லீலைகளை நமக்குச் செய்து காட்டும் பொருட்டுக் கண்ணனாக வந்து அவர் எளிமையுடன் அவதரித்தார்.
தாள் பற்றி –
அந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கியதால்
யான் ஓர் துக்கம் இலனே –
எனக்கு வாழ்வில் ஒரு சிறிய துக்கம் கூட இல்லை, நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.
இறைவனின் ஆனந்தம், அழகு, சிருங்கார ரசம், அனைத்தும் அறியும் தன்மை, சக்தி, லீலைகள், எளிமை உள்ளிட்ட குணங்களை நாம் சிந்திக்கச் சிந்திக்க, நமது துக்கமெல்லாம் நீங்கிவிடும் என்று இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார் நம்மாழ்வார்.
இவ்வாறு நமது துக்கங்களை எல்லாம் போக்கி மகிழ்விக்கவல்ல எண்ணற்ற மேன்மைகளைத் திருமால் தன்னகத்தே கொண்டிருக்கிறார்.
பெரிய வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்து வைத்தால், அதில் அலைகள் சுழித்துச் சுழித்துப் பெருகும் அல்லவா?
அதுபோலத் தான் திருமாலின் எல்லையற்ற மேன்மைகளும் பெரு வெள்ளத்தில் எழும் அலைகள் போல் சுழித்துச் சுழித்துப் பெருகுகின்றன.
‘ஆவர்த்த:’ என்றால் சுழல் என்று பொருள். ‘சத’ என்றால் நூறு.. நூற்றுக்கணக்கான சுழல்களாய்ச் சுழித்துச் சுழித்து பெருகும் மேன்மைகளை உடையவராகத் திருமால் திகழ்வதால்,. அவர் ‘சதாவர்த்த: ’ (சத+ஆவர்த்த: = சதாவர்த்த:) என்றழைக்கப்படுகிறார்.
‘சதாவர்த்த:’ என்றால் நூற்றுக்கணக்கான சுழற்சிகளை உடையவர், அதாவது சுழித்துப் பெருகும் நூற்றுக்கணக்கான மேன்மைகளைக் கொண்டவர் என்று பொருள்.