கடவுளைக் காண உதவும் கண்ணாடி

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார்.. 

...அப்பொழுது அவ்வழியே ஒரு மாணவன் வந்தான்.. அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவன்..

அவன் அரசமரத்தடி பெரியவரைப் பார்த்து,

 "ஐயா! பெரியவரே! 
ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்?.. 
சுகமாகப் படுத்து உறங்கும்..'' என்று கிண்டலாகக் கூறினான்..

அதற்கு அப்பெரியவர்,

"தம்பி! நான் உறங்கவில்லை!.. 
கடவுளைத் தியானிக்கிறேன்..." என்றார்..

"ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? 
ஐயா! நான் படித்தவன்..
மூடன் அல்லன்!..
கடவுள், கடவுள்.. என்று கூறுவது மகா மூடத்தனம்!..
கடவுளை நீர் எப்பொழுதாவது கண்ணால் கண்டிருக்கின்றீரா?..''
...என்று கோபத்தோடு வாதம் செய்ய ஆரம்பித்தான் அம்மாணவன்..

"தம்பி, கடவுளைக் காண முடியாது..
உணர மட்டுமே முடியும்...''
...என்றார் பெரியவர்..

"என்ன உணர்வீரா?..

எனில், நீங்கள் கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?.."'

"இல்லையப்பா.."

"கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?..''

"இல்லையப்பா...''

"ஐயா! 
என்ன இது மூட நம்பிக்கை?..

கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை!..
மூக்கால் முகர்ந்தீரில்லை!.. கையால் தொட்டீரில்லை! காதால் கேட்டீரில்லை! 

...இப்படி இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அரிய நேரத்தை வீணடிக்கிறீரே!..

 கடவுள் கடவுள் என்கிறீரே... அவர் கறுப்பா, இல்லை, சிவப்பா?..''

"அது சரி, தம்பி!..
முதலில் உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது என்று சொல்லேன்.."

"தேன் பாட்டில்.''

"தேன் இனிக்குமா?.. கசக்குமா?.."

"என்ன ஐயா! 
...இதுகூட உமக்குத் தெரியாதா?...
 தேன் இனிக்கும்.. தித்திக்கும்... 
இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்...''

"தம்பி! இனிக்கும்... தித்திக்கும்... என்றாயே, 

 ...அந்த இனிப்பு, கறுப்பா?.. இல்லை, சிவப்பா?... 
அதற்கு என்ன உருவம்?..
சற்று விளக்கமாகச் சொல்லேன்..
நீதான் படித்த அறிஞன் ஆச்சே..."

மாணவன் திகைத்தான்... 

இனிப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், 
இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்..

"ஐயா! 
தேனின் இனிப்பை எப்படி இயம்புவது?..
இதைச் சொல்ல முடியாது.. சொன்னாலும் புரியாது .. தெரியாது!..
உண்டவனே உணர்வான்!.''

பெரியவர் புன்முறுவல் பூத்தார்...

"அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிப்பையே உன்னால் காட்ட முடியாது,  
அது எப்படி இருக்குமென்பதை, உண்டவனே உணர்வான் என்கிறாயே..

அப்படியானால், ஞானப் பொருளாகவும்... அநுபவ வஸ்துவாகவும்... விளங்கும் இறைவனை அனுபவத்தால் அல்லாமல், வேறு எப்படியப்பா உணரக் கூடும்?.."
என்று மடக்கினார்...

மாணவன் வாய் சிறிது அடங்கியது... 

"பெரியவரே! எனக்குப் பசிக்கிறது... 
சாப்பிட்டுவிட்டு வந்து உம்முடன் பேசிக்கொள்கிறேன்.." 
...என்று ஒதுங்கப் பார்த்தான் மாணவன்..

...ஆனால், பெரியவர் விடுவதாக இல்லை!..

"தம்பி! சற்று நில்.. 
பசி என்றாயே, அதைக் கண்ணால் பார்த்திருக்காயா?..'' 

"இல்லை.."

"என்ன தம்பி! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய்.. 

பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது?..

பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய்!.. 
பசி என்று ஒன்று கிடையவே கிடையாது.. 
இது சுத்தப்பொய்!. 
பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள்!.
என்று அதிரடியாகப் பேசிய பெரியவர், 
பிறகு தாமே இறங்கி வந்தார்..

"..உனக்கு இப்போது புரிகின்றதா?..
பசி என்ற ஒன்று அநுபவப் பொருள்!. 

...அது கண்ணால் காணக் கூடியதன்று!. 
அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள்!. 

அவரைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால்தான் உணர்தல் வேண்டும்!.''
...என்று முடித்தார் பெரியவர்..

மாணவனின் உடம்பு வியர்த்தது... 
பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்...

"என் அறியாமையை உணர்கின்றேன்... இருந்தாலும் ஒரு சந்தேகம்... கடவுளை தன்னுள்ளே காண முடியுமா?'.."
...என்று தொடர்ந்தான் மாணவன்..

"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பி!..
உன்னுடைய இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?..''

"என்ன ஐயா!  
எனக்கென்ன கண் இல்லையா?..
இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்..'' 

"தம்பி! ஆனால், இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?...''

"மிக நன்றாகத் தெரிகிறதே.."

"அப்பா! அவசரப்படாதே!. எல்லாம் தெரிகின்றதா?..''

"என்ன ஐயா! 
தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறைதான் கூறுவது?.. 
எல்லாந்தான் தெரிகின்றது!.."
...என்று அலுத்துக் கொண்டான் மாணவன்...

"அப்பா! கோபிக்காதே!..
எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?.."'

"ஆம்! தெரிகின்றன..''

"முழுவதும் தெரிகின்றதா?..''

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில், 
"முழுவதும் தெரிகின்றது..'' என்றான். 

"தம்பி! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?..''

..இப்பொழுது மாணவன் விழித்தான்...

"ஐயா! பின்புறம் தெரியவில்லை..''

"என்ன தம்பி, முதலில் தெரிகின்றது, தெரிகின்றது என்று பன்முறை சொன்னாய்!..

...இப்பொழுது, பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே.. 

சரி போகட்டும்...
முன்புறமாவது முழுவதும் தெரிகின்றதா?..'' 

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே...''

"அப்பா! அவசரங்கூடாது... முன்புறம் எல்லாப் பகுதிகளையும் பார்க்க முடிகிறதா?.. நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும்தான் பார்க்கிறேன்...எல்லாம் தெரிகின்றது.''

"தம்பி! இன்னும் ஒருமுறை சொல். 
எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்..."

"ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன்.. 
முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

"தம்பி! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?.."

மாணவன் துணுக்குற்றான்..
சட்டென்று தலை குனிந்தான்..
தன் அறியாமையை எண்ணி வருந்தத் தொடங்கினான்...

தணிந்த குரலில்,
"ஐயனே! முகம் தெரியவில்லை!.." என்றான்..

"குழந்தாய்!.. 
அழிந்துபோகும் உன் உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை... 
முன்பக்கம், முகம் தெரியவில்லை... 

நீ இந்த உடம்பில் சிறுபகுதியை மட்டும் பார்த்துவிட்டு, 
"கண்டேன்...கண்டேன்..." என்று பிதற்றுகின்றாய்!. 

போகட்டும்...

அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்..''

"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்..''

"தம்பி! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல்,
ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்..''
..என்றார் பெரியவர்..

"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன?.. சொல்லுங்கள்.. இப்போதே வாங்கி வருகின்றேன்..."
...என்று பரபரத்தான் மாணவன்..

"தம்பி அது கடைகளில் கிடைக்காது!... 

அந்த ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.. 

ஒரு கண்ணாடி இறையருள்.. 

மற்றொன்று குருவருள்... 

...இந்த இறையருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகள் இருந்தாலும், எல்லோராலும் கடவுளைப் பார்க்க முடிவதில்லை... 

அவரவர் பாப, புண்ணியத்தின்படியே, ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்..

"தம்பி! இறையருள் எங்கும் நிறைந்திருப்பினும், அதனை குருவருள் மூலமே பெற வேண்டும்..

...அந்த குருவைத் தேடி வெளியே அலையாதே..
உன்னுள்ளே தேடு!..

உன்னுள் ஒளிரும் இறைவனே குருவாக இருந்து உன்னை வழி நடத்துவார்..

...அந்தக் குருவின் சொல்லுக்கு விரோதமில்லாமல் நீ நடக்க ஆரம்பித்தால், ஒருநாள் உன்னாலும் கடவுளை உணர முடியும்!.."
...என்று முடித்தார் பெரியவர்....

மாணவன், தலைக்கனம் முற்றிலும் அழிந்தவனாய், 
இப்பொழுது சிந்திக்கத் தொடங்கினான்...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!