ஒரு அழகான ஒப்பீடு...

காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் ஶ்ரீ அன்னங்கராசார்ய ஸ்வாமிகள், எம்பெருமானுக்கும் யானைக்கும் பலபடிகளாலே உள்ள ஒற்றுமையை அழகாக அருளிச் செய்துள்ளார்..

அவற்றை ஒவ்வொன்றாய் அனுபவிப்போம்...

1. யானையை எத்தனை தடவை பார்த்தாலும், பார்க்கும் போதெல்லாம் அபூர்வமான பொருள் போலவே இருந்து பரமானந்தத்தைத் தரும்..

எமபெருமானும் "அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்" என்றபடி இருப்பான்..

2. யானையின் மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப்பற்றியே ஏற வேண்டும்..

எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவர்களும் அவனது திருவடிகளைப் பற்றியே சேரவேண்டும்..

3. யானை தன்னைக் கட்டுவதற்குத் தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும்..

பெருமானைக் கட்டுப்படுத்தும் பக்தியாகிய கயிற்றை அவன் தானே தந்தருள்கிறான்..

4. யானையை எத்தனை தடவை நீராட்டினாலும், அடுத்தக் கணத்திலே அழுக்கோடே சேரும்.

எம்பெருமான் பரமபவித்ரனாய் இருக்கச் செய்தேயும்,
"பொய்நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கமும், அழுக்குடம்பும்" உடைய நம்போன்றவரோடே, தனது வாத்ஸல்யத்தினாலே, சேரத் திருவுள்ளம் கொண்டிருப்பான்..

5. யானையைப் பிடிக்க வேண்டுமானால், பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்..

எம்பெருமானைப் பிடிக்க வேண்டும் என்றால் பிராட்டியின் புருஷகாரம் (சிபாரிசு) தேவை.

6. யானை, பாகனுடைய அனுமதியின்றி தன் பக்கல் வருபவர்களைத் தள்ளிவிடும்..

எம்பெருமானும், ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டுச் சரணம் புகாதபேருக்கு, அங்கீகரித்து அருள மாட்டான்..

7. யானையின் பாஷை யானைப் பாகனுக்கே தெரியும்..

எம்பெருமானின் பாஷை திருக்கச்சிநம்பி போன்றவர்க்கே தெரியும்..
(பேரருளாளனுடன் பேசியவர் அன்றோ திருக்கச்சி நம்பிகள்!)

8. யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல், திரிதல்" முதலிய தொழில்கள் பாகன் இட்ட வழக்காய் இருக்கும்..

எம்பெருமானும் திருமழிசை ஆழ்வாரைப் போன்றோர் இட்ட வழக்காய் இருப்பவன்..
(சொன்ன வண்ணம் செய்த பெருமான்...)

9. யானை உண்ணும்போது இறைக்கும் அரிசி பலகோடி நுறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்..

எம்பெருமான் அமுது செய்து மீதம் வைத்த ப்ரஸாதத்தாலே, பலகோடி பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்..

10. யானைக்குக் கை நீளம்.

எம்பெருமானும், "நெடுந்தடக்கையன்" ஆவன்!.

11. யானை மறைந்த பின்னும் உதவும்..

எம்பெருமான் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளிய பின்னரும்,
இதிஹாஸ புராணங்கள், அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உணர்த்தி உதவுவான்...

12. யானைக்கு ஒரு கையே உள்ளது..

எம்பெருமானுக்கு "கொடுக்கும் கையொழியக் கொள்ளுங்கை" இல்லை!..

13. பாகனுக்கு ஜீவனங்களை யானை சம்பாதித்துக் கொடுக்கும்..

எம்பெருமான் அர்ச்சக பரிசாரகர்களுக்கு இங்கனே ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கிறான்...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!