ஆழ்வார்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் குலசேகர ஆழ்வார். அரசாட்சியை துறந்து பெருமாணயே சரணாகதி என்று இருந்த அவர், ஒரு சமயம் திருமலை வந்து திருவேங்கடனை தரிசித்து அவனது அழகில் மெய்மறந்து இனி இங்கேயே ஏதாவது பிறவி எடுத்து அவனை நித்தமும் தரிசிக்க வேண்டும் என்று பல்வேறு பிறவியினை வேண்டுகிறார். அதனை பார்ப்போம்.

1. நாரையாக (கொக்கு) ;

ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே:

உடம்பை வளர்க்கும் மனித உடம்பெடுத்து பிறத்தலை நான் விரும்பவில்லை.
திருவேங்கட மலையில் திருக்ககோனேரி என்ற புஷ்கரணியில் குருகாய் (நாரயாய்) பிறத்தல் வேண்டும்.

அது சரி ! கொக்காய் பிறந்தால் விரட்டப்படலாம், திருவேங்கடத்தை விட்டு போக நேரிடும். உன்னை விட்டு வெகு தூரம் சென்றிடுவேனே.. எனவே அந்த பிறவி வேண்டாம். அடுத்து

2. மீனாக பிறக்க :

தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே:

 தேவ லோகத்து இந்திரனாகவும் , பூ லோக அரசனாகவும் இருந்து அனுபவிக்கும் சுகத்தை விருப்பில்லை,
உன் மலையில் உள்ள நீர்சுனையில் ஒரு மீனாக பிறந்து உன்னை பிரியாமல் வாழ விரும்புகிறேன்.

அது சரி! மீனாக பிறந்தாலும் பெருமாளே ! உன் அருகில் வர இயலாது.
நீர்சுனை வற்றி போனால் மீனாய் எடுத்த பிறவி வீணாய் போகும், எனவே இந்த பிறவியும் வேண்டாம். அடுத்து ?

3. தங்க வட்டில் :

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறு வேனாவேனே:

சிவன், பிரம்மா, தேவந்திரர் என உன்னை காண வந்து நிற்க நீருமிழ்கின்ற தங்க
விட்டிலை ஏந்தி உள்ளே புகும் பாக்கியம் தரும் விட்டிலாக பிறக்க வேண்டும்.

பொன் வட்டிலை பிடித்தால் உன் முகத்தை தான் பார்க்க முடியும். திருவடிகள்
அல்லவா அடியார்க்கு பேறு. திருவடிகளை பார்க்க முடியாது போகும். எனவே
இப் பிறவியும் வேண்டாம். பின்பு எது வேண்டும்?

4. சென்பகமாய்:

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே:

 பாடல்கள் பாடி வண்டு கூட்டங்கள் திரியும் வேங்கட மலையில் செண்பக
மரமாய் ஆவேனோ! தினமும் உன் திருவடிக்கு செண்பக மலர் கொடுத்து திருவடியில் நிலைப்பேனோ.

ஹே! மாதவா ! செண்பக மரமாய் நிற்கும் பேறு புண்ணியம்
செய்தவர்க்கே கிடைக்குமோ என்னவோ?
எனவே அதுவும் வேண்டாம் . அப்புறம் எப் பிறவி?

5. புதராய் பிறக்க:

 எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே:

எல்லா உலகுக்கும் தலைவனான பெருமானுடைய அழகிய
இத் திருமலையில் தம்பமாக (புதராய்) நிற்கும்படியான
பாக்கியத்தை கொடுப்பாயாக!

முள் செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன்.
பெருமானுக்கும் , அடியாருக்கோ எந்த பயனும்
இல்லை எனவே இதுவும் வேண்டாம். சரி பிறகு…

6. சிகரமாக பிறத்தல்: 

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா அருந்தவத் தன் ஆவேனே:

 இங்கு இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நின்றால்
இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்க்கு உணர்த்தும் பேறு கிடைக்கும்.

ஹே! நாராயணா !பொன்மயமான இம் மலையில் சிகரமாய்
நின்றாலும் யாருக்கும் பயனின்றி போகலாம்.
எனவே அதுவும் வேண்டாம். சரி அப்புறம்

7. காட்டாற்றாய் பிறக்க:

தேனார்பூஞ் சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே:

 திருமலையில் நான் காட்டாற்றாய் இருந்தால் உன் திருமுழுக்குக்கும்,
அடியாரின் தாகம் தீர்க்கவும் ஆவேன். எனவே இப்பிறவியை வேண்டுகிறேன்.

மாதவா! நான் கானாறாய் நின்றாலும் உன் கோவிலை சுற்றி அடர்ந்த காடுகள்
இருப்பதால் உன் அடியார்கள் உன் கோவிலை அடைய முடியாமல் போகலாம்.
அதற்கு நான் தடையாய் ஆகி விடுவேன். அப்படியான இப் பிறவியும் வேண்டாம்.

8. வழியாக கிடக்கின்ற நிலை:

சோலைத் திருவேங்கட மலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே

உன் கோவிலை சுற்றி காடுகள் இருப்பதால், அடியாயர்கள் வர முடியாமல் போகலாம்.
அவர்களுக்கு பாதை வேண்டுமே? எனவே அவர்களுக்கு வழியாக ஆவேன்.

ஹே பரந்தாமா ! உன் கோவிலுக்கு வருவதற்கு பல வழி இருக்கலாம். நான் வழியாக கிடந்தாலும்,
அடியார்கள் அதை பயன் படுத்தாமல் போனால்….. அவர்கள் திருவடி என்
மேல் படாமல் போய்விடும். எனவே வழியாகவும் பிறக்க வேண்டாம்.

9.படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேன்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

உன்னை காண வரும் அடியார்களின் திருவடிகள் என் மீது
பட வேண்டுமாயின் உன் திருக்கோவிலின் படியாக இருக்க வேண்டும்.

திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும்
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில்
வாசற்படியாகவே வைத்துக் கொள்ள வேண்டு மென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்
கொண்டார்.

10. எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனுமாவேன்

உம்பர் உலகு ஆண்டு ஒருகுடைக் கீழ் ஊர்வசி தன்
அம்பொற் கலை அயல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே:

நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில்
மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில்
வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.

என இப்படியாக திருமாலின் மீது கொண்ட பக்தியால் இந்த பத்து பாசுரங்களை
குலசேகர ஆழ்வார் மனமுருகி பாடியுள்ளார்.
இது தான் பக்தியின் வெளிப்பாடு.