புருஷசூக்தம், ரிஷிகேசம் முதலான ஸ்லோகத் தொகுதிகளை இயற்றிய ரிஷி நாராயணர், ஐந்து இடங்களில் தவமிருந்ததாகக் கூறுகிறார்கள். 

1. விஷால் பத்ரி, 
2. ஆதி பத்ரி, 
3. வ்ருத பத்ரி, 
4. பவிஷ்ய பத்ரி, 
5. யோகதியான் பத்ரி 

ஆகிய இந்த ஐந்து ஆசிரமங்களை “பஞ்ச பத்ரி” என்று அழைக்கிறார்கள்.

'விஷால் பத்ரி' என்ற 'ஸ்ரீபத்ரிநாராயணன் கோயி'லோடு, மற்ற நான்கு பத்ரி திருத்தலங்களும், ரிஷிகேஷ்-பத்ரிநாத் மார்க்கத்தில் உள்ளன. 

 (1)விஷால் பத்ரி: Vishal Badri (Badrinath)

விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் இமயமலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 10,279 அடி உயரத்தில் அலக்நந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது.

இதுதான் பத்ரிநாதரின் பிரதான தலமாகும். பூஜைகள் நடக்கும்போது, “ஜெய் பத்ரி விஷால் கி” என்று பக்தர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். 

இமயமலையின் மிதமிஞ்சிய குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இக்கோயில் நடை திறந்திருக்கும்.

பத்ரி நாராயணனை தரிசித்துவிட்ட திருப்தியில் அவருடனேயே கருவறைக்குள் இருக்கும் குபேரனை நாம் கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு. 

ஆனால், அவரை நாம் கவனித்தால், அவர் நம்மை கவனிப்பார்! 

ஆமாம்! ஒரு ரூபாய் நாணயங்கள் அல்லது வெள்ளி நாணயங்கள் சிலவற்றை ஒரு பட்டுத் துணியில் வைத்து அதை அர்ச்சகரான ராவல்ஜியிடம் கொடுத்தால், அவர் அதை குபேரன் காலடியில் வைத்து பிரார்த்தித்து பிறகு நம்மிடம் அளிப்பார். 

அந்தக் காசுகளை நம் வீட்டுப் பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். இதற்காகக் காசுகளையும், பட்டுத் துணிகளையும் விற்கும் கடைகளும் கோயில் முன்னால் உள்ளன. 

தொட்ட விரல் உடனே மரத்துப்போகும்
படியான குளிர்ச்சி மிகுந்த நீர் பிரவாகமாகப் புரண்டோடும் அலக்நந்தா நதிக் கரையில், 'சேஷ நேத்ரம்' என்று ஒரு பகுதி உள்ளது. 

இங்கே ஒரு சிறு பாறை அனைவராலும் வணங்கப்படுகிறது. இதன் மேல்புறத்தில் ஆதிசேஷ நாகத்தின் கண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன; பக்கவாட்டில் பகவானின் சரண பாதுகை செதுக்கப்பட்டுள்ளது. 

பகவான் நாராயணனின் அம்சங்கள் இப்படி பல பகுதிகளில் வியாபித்திருப்பது, மனதை வேறெங்கும் அலைபாய விடாமல் அந்த திவ்ய அம்சங்களிலேயே லயித்திருக்கச் செய்யும் இறை உத்தியாகவே தோன்றுகிறது! 

பத்ரிநாத்திலிருந்து சற்றுத் தொலைவில் 'வசோதரா' என்ற ஒரு பகுதி உள்ளது. 

இங்கு கண்களையும், மனதையும் குளிர்விக்கும் நீர்வீழ்ச்சி ஒன்று பனிப்புனலாக வீழ்கிறது. விழும் வேகத்தில் சுற்றிலும் தன் பனித்திவிலைகளை அது தூவுகிறது!

பன்னீர்த் தெளிப்பாக இப்படி சிதறும் திவிலைகள், தம் மீது படுமாறு பக்தர்கள் அங்கே ஆவலுடன் நின்றிருக்கிறார்கள்! 

இந்தப் பகுதிக்கு வருவது அவ்வளவு எளிதான செயலல்ல. 

என்றாலும், அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்தாமல், நாராயணனின் நேரடி ஆசீர்வாதமாக அந்தத் திவிலைப் பொழிவுக்கு உடல் மடித்துத் தலை வணங்குகிறார்கள் பக்தர்கள்! 

இதையும் கடந்து சென்றால் 'லக்ஷ்மி வனம்' என்ற அழகிய நந்தவனத்தைக் கண்குளிரக் காணலாம். 

பத்ரிநாத் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது 'மானா' என்ற ஒரு கிராமம்.

இங்கே ஒரு குகை, புராதனப் பெருமையைப் பறைசாற்றியபடி அமைந்திருக்கிறது! நீடுபுகழ் தொன்மை வாய்ந்த பாரம்பரியம் மிக்கது!! 

ஆம்! இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவிய விதை மனதில் ஊன்றியது! 

இதற்கு அருகில் மற்றொரு குகை உள்ளது. வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச்சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார்! 

அங்கே மகாபாரத தியான ஸ்லோகத்தை எழுதி வைத்திருக்கிறார்கள்: 

‘‘நாராயணம் நமஸ்க்ருத்ய 
நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ
ஜெயம் உதீரயேத்’’

மகா காவியம் தோன்றிய இதே இடத்தில்தான் கலைகளின் தெய்வம் சரஸ்வதியும் நதியாக உற்பத்தியாகிறாள்! 

ஆனால், நம் கண்களுக்கு அந்த நதி புலப்படுவதில்லை. இங்கே அந்தர்வாகினியாகி, அதாவது... மறைந்துபோய், பிறகு அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் சேர்கிறாள். 

இங்கே தோன்றும் நதி உடனே மறைவானேன்..?! 

'உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகமெடுத்திருக்கிறாள். அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம், விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை. ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்துபோகச் செய்துவிட்டார்'  

- இப்படி ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.   

மறைவது என்பதை முனிவரின் விருப்பப்படி ஓசையின்றி செல்வது என்றும் கொள்ளலாம். ஏனென்றால் சற்று அருகிலேயே இந்த சரஸ்வதி நதி, அலக்நந்தா நதியுடன் கலக்கிறது. இதற்கு ஆதாரமாக அந்த சங்கமத் தலத்தில் சரஸ்வதிக்கென ஒரு கோயில் இருக்கிறது! 

சரஸ்வதி கோயில் பக்கத்திலேயே ஒரு பாலம். இதற்கு 'பீம் பாலம்' என்று பெயர். ஆமாம், பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன் கட்டிய பாலம்தான். 

'இந்த பாலம் வழியாகத்தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள்' என்கிறது இப்பகுதி புராணம். 

இங்குள்ள பாறைகளில் பீமனின் கை, கால் தடங்கள் பதிந்திருப்பதை இன்றும் காண முடிகிறது! 

'மானா' கிராமம்தான் இந்தியாவின் வடக்கு எல்லை! அதற்குப் பிறகு திபெத் நாட்டின் எல்லை ஆரம்பித்துவிடுகிறது. 

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், வியாசர் குகை வாசலில் ஒரு விளம்பரப் பலகை இருக்கிறது. இதில் வடமொழிகளுடன் தமிழிலும் ஒரு அறிவிப்பு உள்ளது... 

 ‘'இதுதான் இந்தியாவின் கடைசி டீக்கடை!’' என்று!! 

(2) ஆதி பத்ரி: Aadhi Badri

சிவாலிக் மலையின் அழகால் சூழப்பட்டுள்ள ஆதி பத்ரி, யமுனா நகரின் வடக்கே அலக்நந்தாவும் பிண்டார் நதியும் சங்கமிக்கும் இடத்தில் கர்ணப் பிரயாகையிலிருந்து ராணிகேத் மார்க்கமாக 19 கி.மீ. தொலைவில் உள்ளது. 

இங்கு போய்வர சீரான சாலை வசதிகள் உள்ளன. ஆனால், உணவு மற்றும் தங்கும் வசதிகள் எதுவும் இங்கு இல்லை. 

இங்கே குப்தர்கள் கால கோவில்கள் அமைந்துள்ளன. ஸ்ரீ கேதார்நாத், மந்த்ரா தேவி மற்றும் ஆதி பத்ரி நாராயணா போன்ற புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன.

இந்த ஆதிபத்ரி கோயில்கள் 6 முதல் 12 நூற்றாண்டுவரை பல அந்நிய சக்திகளால் அடுத்தடுத்து பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 

சமீபத்தில், ஆதி பத்ரியில் மூன்று திட்டு அளவிற்கு கலைப்பொருட்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

நாராயணர் கோவில்:

நாராயணர் கோயில் ‘நாராயண மட்’ என்று அழைக்கப்படுகிறது. ரிஷி நாராயணனால் உருவாக்கப்பட்டது என்றும் பிறகு குப்தர்கள் செப்பனிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்த கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் இங்கு விஜயம் செய்திருக்கிறார். அவருக்கு முன் பஞ்ச பாண்டவர்களும் இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள். 

350 சதுர மீட்டர் பரப்பில், 14 சிறுசிறு கோயில்கள் கோபுரங்களுடன் இங்கே திகழ்கின்றன. கடப்பா கற்கள் என்று அழைக்கப்படும் செவ்வக கருநிற கற்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. 

இவற்றில் பெரும்பாலான கோயில்கள் சேதமுற்றுள்ளன. 

நாராயணர் கோயிலின் பிரதான பகவான், ஆதி பத்ரிநாராயணர்! மூன்றரை அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட கருப்பு நிறக் கல்லால் மிகவும் அழகாக, தாமரை சுதையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவர். 

கர்ப்பகிரகம், நடு சந்நதி, (அந்தரால் என்கிறார்கள்), மக்கள் சேவை மண்டபம் என்று 3 பிரிவுகளாக இக்கோயில் விளங்குகிறது. பகவான் ஆதிநாராயணன் மேல் இரு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தியிருக்கிறார். 

இச்சிலை சிதிலமடைந்துவிட்டதால் அவரது கீழ் இரு கரங்களை முழுமையாகக் காண இயலவில்லை.  

இக்கோயிலைச் சுற்றி பிராகாரத்தில் கருடன் (மூலவருக்கு நேர் எதிரே), உமாமகேஷ், லக்ஷ்மி நாராயணன், சூரியன், விநாயகர், துர்க்கா, ஹனுமன், ராம - லட்சுமண - சீதா, சிவன் சந்நதிகள் தனித்தனியே உள்ளன. 

 (3) வ்ருத பத்ரி: Vridha Badri

ஜோஷிமட்-பீப்பிள் கோர்ட் பேருந்து சாலையில், ஜோஷிமட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலையிலிருந்து சில கரடு முரடான படிகளில் இறங்கி, கோயிலை அடையலாம். 

இத்தலத்தை அனீ மடம் அல்லது ஊர் பாரிஷி ஆசிரமம் என்கிறார்கள். புராண தீர்த்தம் உள்ளது. அலகாநந்தாவின் அழகான பள்ளத்தாக்கில் நாரத முனிவருக்கு பகவான் காட்சி அளித்த இடம். 

இங்கு நாரதர் தவம் செய்தபோது ஸ்ரீ பத்ரி நாராயணன் வயோதிக ரூபத்தில் தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். அதனாலேயே இதனை புடா (வயதான) பத்ரி என்றும் கூறுவர். 

நாரதர் இக்கோயிலை நிர்மாணித்தார் என்றும் பின்னர் ஆதிசங்கரர் பூஜைகள் செய்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. 

இக்கோயிலின் அருகிலேயே அர்ச்சகர்கள் வசிப்பதால், சுவாமி தரிசனத்திற்கு எந்தத் தடையோ தாமதமோ ஏற்படுவதில்லை. 

கோயில் வருடம் முழுவதும் திறந்திருக்கும்.

(4) பவிஷ்ய பத்ரி: Bhavishya Badri

ஆதிபத்ரியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது. 

ஜோஷிமட் - மலாரி பேருந்து மார்க்கத்தில் 15 கி.மீ. தொலைவில், தபோவனம் எனும் ஓரிடத்தை அடையலாம். இங்கிருந்து மலைமேல் செல்ல வேண்டும். 

ஒற்றையடிப் பாதை. மிகவும் கரடுமுரடானது. மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து செல்ல வேண்டும். இயலாதவர்கள் வாடகை குதிரை மீதமர்ந்து செல்லலாம். 

இப்படி 6 கி.மீ. தொலைவைக் கடந்தால் இக்கோயிலை அடையலாம். கோயிலைச் சுற்றிலும் மரங்களும், மலைகளுமாக உள்ளன. 

இக்கோயில் மிகவும் சிறியது. இக்கோயிலில் 5 அடி உயரமுள்ள ஒரு கருப்புப் பாறாங்கல்லில் பகவானின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக தானே உருவாகி வருகிறது. 

முழு உருவும் தெரிந்தவுடன், அப்போது பத்ரி விஷால் பத்ரிநாராயணனை தரிசிக்க முடியாதென்றும், பவிஷ்ய பத்ரியில்தான் தரிசிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். 

இங்கு அகஸ்தியர் தவம் இருந்ததாக புராணம் சொல்கிறது.

இக்கோயில் பெரும்பாலும் பூட்டியே இருக்கிறது. 

மலைவழியே சற்றுத் தொலைவு சென்றால் சுபாயி என்னும் கிராமத்தை அடையலாம். இங்கே கோயில் அர்ச்சகர் வசிக்கிறார். அவரை அழைத்து வந்து கோயிலைத் திறக்கச் செய்து தரிசனம் செய்யலாம். 

அகஸ்தியருக்கு இங்கு ஸ்ரீநாராயணன் தரிசனம் கொடுத்ததாகவும், அப்போது பகவான்... தான், கலியுகத்தில் பவிஷ்ய பத்ரியில் கோயில் கொள்ளப் போவதாகவும் கூறினாராம். 

இனி வருங்காலங்களில் இயற்கை சீற்றத்தால் பக்தர்கள் பத்ரி விஷால் சென்றடைவது இயலாது போகலாம் எனவும், அச்சமயம், பத்ரி நாராயணனை (பகவான் பத்ரிவிஷாலை) இந்த பவிஷ்ய பத்ரிக்கு எழுந்தருளச் செய்து பூஜை செய்வர் என்றும் சொல்கிறார்கள். 

(5) யோகதியான் பத்ரி: Yogdhyan Badri

இக்கோயில், ஜோஷிமட்-பத்ரிநாத் பேருந்து மார்க்கத்தில் பாண்டுகேஷ் எனுமிடத்தில் உள்ளது. ஜோஷிமட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவு. 

பாண்டு மஹாராஜா, பாண்டுகேஷ்வரரைத் துதித்து தியானம் செய்ததால், இது “யோகத்யான் பத்ரி” என்று பெயர் பெற்றது. 
  
கர்ணன் பிறந்ததும்,  
குந்தி-பாண்டு திருமணம் நடந்ததும், 
பாண்டவர்கள் பிறந்ததும், 
பாண்டு மஹாராஜ தன்னுடைய இறுதி காலத்தை இங்கே கழித்ததும் இங்குதானாம். 

இங்கிருந்து கீழே 200 படிகள் இறங்கினால், இரண்டு சிறு கோயில்களைக் காணலாம். 

ஒன்றில் பகவான் வாசுதேவரை நிரந்தரமாக வைத்து பூஜை செய்கிறார்கள். யோக நிலையில் ஆளுயர சாளக்ராம மூர்த்தி. வெண்கலச் சிலையும் உள்ளது. இவற்றை பாண்டு மன்னர் ஸ்தாபித்தாராம். 

இன்னொன்றில் ஸ்ரீ பத்ரி நாராயணன் (பத்ரி விஷால் உற்சவரை) உறைபனிக்காலமான 6 மாதங்களில் இங்கு எடுத்துவந்து பூஜை செய்கிறார்கள்.