இவர்களின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை !
சான்றோர்களின் ஆசிர்வாதம்..!
முன்னொரு காலத்தில் சோழ நாட்டு அரசன் வேட்டையாடுவதற்காக காட்டிற்கு சென்றார்.
அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்தபடி கத்தியது.
அதைப்பார்த்த அரசர் பறவைகளின் மொழி அறிந்த வீரன் ஒருவரை அழைத்தார்.
இந்த பறவை என்ன சொல்கிறது? என்று கேட்டார்.
அதற்கு அந்த வீரன் அரசே! அந்தப் பறவை நம்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
உழவன் ஒருவர் புல் வெட்டுவதற்காக வருவார். அவர் பாம்பு கடித்து இறந்துவிடுவார் என்று சொன்னது! என்றான்.
அப்போது கையில் அரிவாளுடன் உழவன் ஒருவர் அந்த வழியாக சென்றார்.
பறவை சொன்னதில் பாதி நடந்து உள்ளது.
மீதியும் நடக்கிறதா? என்று அறிய ஆவல் கொண்டார் அரசர்.
அதற்காக தன் வீரர்களுடன் அங்கேயே தங்கினார்.
மாலை நேரம் வந்தது.
தலையில் புல் கட்டுடன் அந்த உழவர் திரும்ப வந்தார். இதைப்பார்த்த அரசர் குறி சொன்ன வீரனை அழைத்தார்.
இந்த உழவனைப் பாம்பு கடிக்க மறந்துவிட்டதா அல்லது இவன் எமனை ஏமாற்றி விட்டானா?
உன்னால் எனக்கு ஒருநாள் வீணாயிற்று.
சாவில் இருந்து இவன் எப்படித் தப்பித்தான். காரணம் சொல்.
இல்லையேல் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது! என்று கோபத்துடன் கத்தினார்.
அந்த வீரன், அரசே! பறவை சொன்ன மொழி இதுவரை தவறியது இல்லை.
இவர் உயிர் பிழைக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும். இவரை விசாரித்தால் உண்மை தெரியும்! என்றார்.
உழவர் தலையில் புல் கட்டுடன் அவர்கள் அருகில் வந்தார். அந்தப் புல் கட்டில் அரிவாள் ஒன்று செருகப்பட்டு இருந்தது.
உழவனே! புல் கட்டைக் கீழே போடு! என்றார் அந்த வீரன்.
அவரும் புல் கட்டைக் கீழே போட்டான்.
புல் கட்டு விழுந்த வேகத்தில் அதைக் கட்டியிருந்த கயிறு அறுந்தது.
உள்ளே இருந்த புற்கள் பரவலாக விழுந்தன. அதில் பாம்பு ஒன்று வெட்டப்பட்டு இறந்து கிடப்பது தெரிந்தது.
இதைப் பார்த்து எல்லாரும் வியப்பு அடைந்தனர். அந்த வீரன், அரசே! இந்தப் பாம்பு இவரைக் கொல்ல வந்திருக்கிறது.
இது எப்படி இறந்தது என்று தெரியவில்லை? என்றான்.
அந்த உழவனைப் பார்த்து அரசன், நீ புல் வெட்டக் காட்டிற்குள் சென்றாய்.
அங்கே விந்தையான நிகழ்ச்சி ஏதாவது நடந்ததா? என்று கேட்டான்.
அரசே! அப்படி எதுவும் நடக்கவில்லை.
வழியில் முதியவர் ஒருவர் வந்தார்.
நான் அவரைப் பணிவாக வணங்கினேன். நீடூழி வாழ்க என்று என்னை வாழ்த்தினார்! என்றார் அந்த உழவர்.
இதைக் கேட்ட அந்த வீரன், அரசே! அந்த முதியவரின் வாழ்த்துதான் இவரைக் காப்பாற்றி உள்ளது.
உயர்ந்த சான்றோர்களின் சொற்கள் விதியையும் மாற்றும் வல்லமை வாய்ந்தவை! என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட அரசர் அந்த வீரனுக்கும், உழவனுக்கும் பரிசு அளித்து சிறப்பித்தார்.
நீதி : உயர்ந்த சான்றோர்களின் ஆசிர்வாதம் விதியையும் மாற்றும் வல்லமை வாய்ந்தவை.