ஏழுமலையான் என்று பெயர் வரக்காரணம்

திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா?

ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். அந்த ஏழு மலைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

ஒன்றாம் மலை :
''வேம்'' என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

இரண்டாம் மலை :
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் மலை :
வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை புஜித்தன. எனவே இது ‘வேத மலை” என்று அழைக்கப்படுகிறது.

நான்காம் மலை :
சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை” எனப் பெயர் பெற்றது.

ஐந்தாம் மலை :
விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை” எனப் பெயர் வந்தது.

ஆறாம் மலை :
  ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை” எனப்படுகிறது.

ஏழாம் மலை :
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு ‘ஆனந்த மலை” என்று பெயர் வந்தது. இந்த ஏழுமலைகளின் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஏழுமலையான் என்று பெயர் வந்தது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!