திருவிண்ணகரப்பனை சரண் புகுவோம் பூலோக வைகுந்தமான திருவிண்ணகரை தென் திருப்பதி என்றும் அழைப்பர். மேலும் ஆகாச நகரம் என்றும் அறியப்படுகின்றது இத்திவ்ய தேசம் (விஷ்ணு க்ருஹமே அதாவது திருமாலின் இல்லமே விண்ணகர் ஆனது.) திருவிண்ணகரில் ” மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்னும் அந்த வாக்கியம் வைரங்களினால் மின்னுகின்றது ஒப்பிலியப்பனின் வலது திருக்கரத்தில்.
நாமும் இன்றும் என்றும் ஒப்பிலியப்ப பெருமாளை திருவிண்ணகரப்பனை சரணடைவோம் திருவிண்ணகரப்பன் திருவடிகளே சரணம்
என்னப்பனெனக்காயிருளாய் னென்னைப்பெற்றவளாய்
பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப்பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன்
தன்னொப்பாரில்லப்பன்தந்தனன் தனதாள்நிழலே.
அன்று வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் திருவிண்ணகரப்பனை பொன் மதில் சூழ் என்னப்பன், பொன்னப்பன்(ஹேம), மணியப்பன்(மணி), முத்தப்பன்(முத்த), தன்னொப்பாரில்லாவப்பன் (வ்யோம புரீசன்) என்று சேவித்து பாசுரம் பாடினார். இன்று அப்பொன்னப்பன் மின்னும் பொன் விமானத்தின் கீழ் சேவை சாதிக்கின்றார், சேவித்து அருள் பெறுங்கள்.
மேலும் ஆகாச நகரம் என்றும் அறியப்படுகின்றது இத்திவ்ய தேசம் (விஷ்ணு க்ருஹமே அதாவது திருமாலின் இல்லமே விண்ணகர் ஆனது. )
* ஒரு மனை நோன்பனாக (ஏக பத்னி விரதனாக), பூமிதேவித் தாயார் மட்டும் = இராமன்!
* மாம் ஏகம் சரணம் வரஜ (என் ஒருவனையே சரணம் எனப் பற்று) என்னும் கீதை சொன்ன = கண்ணனாக!
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குகோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன்தன் விண்ணகர்
வைகுண்டத்தின் திருமால் அடியாருக்கு அருள் புரியும் பொருட்டு திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாற்கடல், அழகிய மலர்களில் வண்டுகள் தேனைக் கிளரும் திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை குன்றாது சேவை சாதிக்கின்றான் என்று பாடுகின்றார் பேயாழ்வார்.
பேயாழ்வார் 2 பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், மற்றும் திருமங்கையாழ்வார் 34 பாசுரங்கள் பாடியுள்ளனர் விண்ணகர் ஒப்பிலியப்பன் மேல்.
திருவிண்ணகர், திருவேங்கடம், திருவல்லிகேணி ஆகிய தலங்களில் பெருமாள் தான முத்திரையில் சேவை சாதிக்கின்றார். அதாவது வலது திருக்கரத்தால் தனது திருவடித்தாமரைகளை காட்டுகின்றார். சரம ஸ்லோகத்தில் கூறியபடி என்னை சரணடை நான் உன்னை காப்பாற்றுவேன் என்று காட்டுகின்றார் பெருமாள். திருவிண்ணகரில் ” மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்னும் அந்த வாக்கியம் வைரங்களினால் மின்னுகின்றது ஒப்பிலியப்பனின் வலது திருக்கரத்தில்