முக்திநாத் அருள்மிகு ஸ்ரீமூர்த்தி ஸ்ரீதேவி திருக்கோயில்.
திருச்சாளக்கிராமம் (ஸாளக்கிராவா)

முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

மூலவர் - முக்தி நாராயணன், ஸ்ரீமூர்த்தி
உற்சவர் : ஸ்ரீமூர்த்தி
தாயார் - ஸ்ரீதேவி நாச்சியார்
விமானம் - கனக விமானம்
தீர்த்தம் - சக்ர தீர்த்தம், கண்டகி ஆறு
திருநாமம் - ஸ்ரீ தேவிநாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தயே நமஹ:
புராணபெயர் : சாளக்கிராமம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் , பெரியாழ்வார்
நாடு : நேபாளம்
மாவட்டம் : மஸ்டாங்


வழித்தடம்
நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து 250 கி.மீ தொலைவில் முக்திநாத் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 600 அடி உயரத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. விமானம் மூலமோ அல்லது நடந்தோ இத்திருத்தலத்தை சென்றடையலாம்.

பாசுரம்
கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,
தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.
- பெரிய திருமொழி (988)

பாசுரம் பதவுரை

கலையும் கரியும் பரிமாவும் - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
திரியும் கானம் கடந்துபோய் - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று
சிலையும் கணையும் துணை ஆக - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான் - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர் - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே

மலை கொண்டு - மலைகளாலே
அணை கட்டி - ஸேது கட்டி
மதிள் நீர் இலங்கை - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள
வாள் அரக்கர் தலைவன் - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய
பத்து தலை - பத்துத்தலைகளையும்
அறுத்து உகந்தான் - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய
சாளக்கிராமம் - ஸ்ரீஸாளக்ராமத்தை
நெஞ்சே அடை - மனமே!, சென்று சேர்.

தல வரலாறு
வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராம ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.

மதுகுளத்து அரசனான "தர்மதுவசன்" மற்றும் அவனது மனைவி மாதவிக்கும் "விருந்தை" என்ற மகள் அவதரித்தாள். அவள் சிறு வயதிலேயே இறைவன் நாராயணனை மணாளனாக அடைய விரும்பி இறைவனை நோக்கி தவமியற்றினாள். அப்போது அவள் முன் தோன்றிய பிரம்மா விதிப்படி இன்னும் இரு பிறவி எடுக்க வேண்டும் என்றும் இரண்டாம் பிறவியிலேயே இறைவனை அடைய வேண்டும் என்று வரம் அளித்தார் பிரம்மதேவர்.

பிரம்மா அளித்த வரத்தின் படியே அடுத்த பிறவியில் ஜலந்தரன் என்ற அசுரனுக்கு மனைவியானாள். இருப்பினும் இறைவன் மீது பக்தி கொண்ட விருந்தை மறு பிறவியிலும் இறைவன் மீது பக்தி கொண்டு பதிவிரதையாகா வாழ்ந்தாள். ஜலந்தரன் ஏராளமான கொடுமைகளைச் செய்தும் அவளது விரதத்தால் காப்பாற்றப்பட்டான். அவனது கொடுமைக்கு முடிவினை எண்ணிய திருமால் அவளது விரதத்திற்கு தடை ஏற்படுத்தி அசுரனை வதம் செய்தார். இதனால் மனம் வெகுண்ட விருந்தை கல்லாக போகும் படி எம்பெருமானான ஸ்ரீமந்நாராயணனை சபித்தாள்.

இறைவனாக இருந்தாலும், உத்தமிகள் சாபத்திற்கு ஆளானால் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு இவ்வரலாறே சான்றாகும். சாபமளித்தவரே விமோசனம் அளிக்க வேண்டும் என்பதால், அவள் அடுத்த பிறவி வரை பெருமாள் கல்லாக இருந்ததாகவும், பிறகு உருவம் பெற்று அவளை மணந்ததாகவும், கல்லாகக் கிடந்த இவ்விடத்தில் எக்காலமும் கல்லாக, மண்ணாக, காற்றாக என அனைத்துமாகி இருந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும் முக்தியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் நமக்காக அருள்வதாக தலவரலாறு கூறுகிறது.

சிறப்பு
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.

இமயமலைச் சாரலில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், கடுமையான குளிர் இப்பகுதி முழுவதும் இருக்கும். கடுங்குளிர் என்பதால் கம்பளி போன்ற குளிர்கால ஆடைகளை எடுத்துச் சென்றால் மட்டுமே குளிரைத் தாங்க முடியும். இவ்விடத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால் இங்கு செல்லும் பக்தர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் செல்வது என்பது அவசியமான ஒன்று. பரிபூரண பக்தியோடு மட்டுமல்லாமல், இறைவனின் கருணையும், அருளும் இருந்தால் மட்டுமே நாம் இத்தலத்திற்குச்செல்ல முடியும்.

அக்கால புராணங்கள் பலவற்றிலும் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. "சாளக்கிராமத்தில் ஒவ்வொரு கல்லிலும் இறைவன் இருக்கிறார்" என்ற பதிவே அனைத்திலும் உள்ளது.
சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள் கருதப்படுகின்றன.

1. வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ சேத்திரம்

2. கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு சேத்திரம்

3. பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண சேத்திரம்

4. பசும்பொன் (அ) மஞ்சள் சற்று மஞ்சள் கலந்து சிகப்பு நிற சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம சேத்திரம்

5. மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன சேத்திரம்

6. கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்

இந்த வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும் மாறுபடுகின்றனவாம்.
நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும்
பச்சை - பலம், தைரியம்
வெண்மை - ஞானம், பக்தி, மோட்சம்
கருப்பு - புகழ், பெருமை
புகை நிறம் - துக்கம், தரித்திரம்

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது. பூஜிக்கப்பட்ட சாளக் கிராமங்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி.

இதைப்பால் அல்லது அரிசி மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோஷமில்லை.. சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும்.

சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று. பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள்.

இதன் மீது புனித நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள். இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு.

நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய ஸாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி நதிக் கரையில் அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும்.

இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர் கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது.

இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார்.

சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது.

வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 70வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.

முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர். திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள். தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர்.

பயணகாலம் வழி
ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம்.

பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சாளக்கிராமம்

★சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.
இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.

★திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார்.

★அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

★சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.

★சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

★சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள்.

★சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.
சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.

★ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது.
லட்சுமி நாராயண சாளக்கிராமம்

★நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது.
லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்

★இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது.
ரகுநாத சாளக்கிராமம்

★இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது.
வாமன சாளக்கிராமம்

★வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது.
ஸ்ரீதர சாளக்கிராமம்

★விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது.
தாமோதர சாளக்கிராமம்

★மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது
ராஜராஜேஸ்வர சாளக்கிராமம்

★விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது
ரணராக சாளக்கிராமம்

★பதினான்கு சக்கரங்களும் கொண்டது.
ஆதிசேட சாளக்கிராமம்.

★சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதனசாளக்கிராமம்.

★ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது
சுதர்சன சாளக்கிராமம்.

★மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது
கதாதர சாளக்கிராமம்.

★இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது
ஹயக்ரீவ சாளக்கிராமம்.

★இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.

★துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது
வாசுதேவ சாளக்கிராமம்.

★சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது
பிர்த்யும்ன சாளக்கிராமம்.

★விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.

★ சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள்.
சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும்.

★சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.

★சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல
செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.

★12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.

★12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர்.