மூலவர் - தேவராஜன் (ஸ்ரீஹரி)
தாயார் - ஸ்ரீஹரிலக்ஷ்மி,புண்டரீகவல்லி
விமானம் - ஸ்ரீ ஹரி விமானம்
தீர்த்தம் - சக்ர தீர்த்தம், கோமுகி தீர்த்தம், நேமி தீர்த்தம், திவ்ய தீர்த்தம், விச்ராந்த தீர்த்தம்
திருநாமம் - ஸ்ரீஹரிலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ தேவராஜாய நமஹ
ஊர் : நைமிசாரண்யாம்
நாடு: இந்தியா
மாநிலம்: உத்தரப் பிரதேசம்
மாவட்டம்: சீதாப்பூர் மாவட்டம்
அமைவு: நைமிசாரண்யா
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்
- பெரிய திருமொழி (1006)
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

பாசுரம் பதவுரை
தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே - தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய் - அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!
நைமிசாரணியத்துள் எந்தாய்!-;
ஊன் - மாமிசத்தை
இடை சுவர் வைத்து - நடுநடுவே சுவராக வைத்து
என்பு - எலும்புகளை
தூண் நாட்டி - கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து - மயிர்களை மேலே மூடி

ஒன்பது வாசல் தான் உடை - நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை - குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது - விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன் - உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன் - (இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.

தலவரலாறு
ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார்.

இந்த பாரத தேசத்தில் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று. வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர்.

அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் எம்பெருமான் அருள்புரிந்து அவர்களை சாயுஜ்ய பதவிக்குரியனாக்கினார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய ஸ்வரூபியாக (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர். தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய மூர்த்திகள் இல்லை.

இறைவன் இறைவி
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஶ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவியின் பெயர் ஶ்ரீஹரிலட்சுமி என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி. விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.

சிறப்பு
இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை ஆரண்ய ரூபியாக எண்ணி வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் உண்டு.இங்குள்ள சக்ர தீர்த்தம் சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு. வினோதமான முறையில் இங்கு விநாயகருக்கும் சன்னதி உண்டு. இதுவும் வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதது.

இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்றவற்றை உருவாக்கினார்கள். இதனால் வேறெந்த ஸ்தலத்திற்கும் இல்லாத பெருமை (வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்தது) இத்தலத்திற்குண்டாகிறது.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

சூதபௌராணிகர் உக்கிரசிரவஸ், குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு மகாபாரதம் மற்றும் புராணங்களை எடுத்துக் கூறினார்.

தங்கும் வசதி
இத்திருத்தலத்தில் அஹோபில மடமும், ஶ்ரீ ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன.

அமைவிடம்
உத்தரபிரதேச மாநிலம், கல்கத்தாவின் டேராடூன் இரயில் பாதையில் அமைந்துள்ள பாலமாவ் என்ற இரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சீதாபூர் என்ற இடத்திற்குச் செல்லும் கிளை ரயில் ஏறி நைமிசாரண்யம் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.