திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ராயாகை)

மூலவர் - நீலமேக பெருமாள், புருடோத்தமன் நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்
தாயார் - புண்டரீகவல்லி (தாயார் சந்நிதி தனியே இல்லை. பெருமாளின் திருமார்பில் இருக்கும் தாயாரின் பெயர் இது என்றுதான் கொள்ள வேண்டும்.)
விமானம் - மங்கள விமானம்
தீர்த்தம் - மங்கள தீர்த்தம், கங்கை நதி
திருநாமம் - ஸ்ரீ புண்டரீகவல்லி ஸமேத ஸ்ரீ நீலமேகாய நமஹ:
விமானம் : மங்கள விமானம்
மங்களாசாசனம் : பெரியாழ்வார் 11 பாசுரங்கள்
ஊர் : திருக்கண்டம் கடிநகர்
(தேவப்ரயாக்)
மாநிலம் : உத்ராஞ்சல்

தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்
தேவப்பிரயாகை என்று வழங்கப்படும் இடமே புராண காலத்தின் கண்டமென்னும் கடிநகர் ஆகும். இத்தலம் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும், இத்தலம் வதரியாச்சரமத்திற்கு செல்லும் வழியில் ஹரித்துவாரிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கு சென்று இத்தலத்தை ரகுநாத்ஜீ மந்திர் என்றால் மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது.

பாசுரம்
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்
எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே.
- பெரியாழ்வார் திருமொழி (391)

பெரியாழ்வார் பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

பாசுரம் பதவுரை
கங்கை நங்கை என்ற வாசகத்தாலே - கங்கை கங்கை என்ற சப்த்த்தைச் சொல்லுவதனால் என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும்.
கடுவினை - கடுமையான பாவங்களை
களைந்திட நிற்கும் - ஒழிக்கவல்ல
கரைமேல் - கரையிலே
கை தொழ நின்ற - (பக்தர்கள்) கைகூப்பித் தொழும்படியாக நின்ற
கண்டம் என்றும் - ‘கண்டம்’ என்னும் பெயரையுடைய
கடி நகர் - சிறந்த நகரமானது (எதுவென்னில்,

தங்கையை - (இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய
மூக்கும் - மூக்கையும்
தமையனை - (அவருடைய) ***
தலையும் - தலையையும்
எங்கும்  - நாட்டெங்கும்
தன் புகழ்  - தன்னுடைய கீர்த்தியேயம்படி
இருந்து -  பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து
அரசு ஆண்ட -  ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும்
எம்  - எமக்குத் தலைவனுமான
தாசரதி -  இராமபிரானுமாகிய
எம் புருடோத்தமன்  - புருஷோத்தமப் பெருமாளுடைய
எமது இருக்கை  - வாஸஸ்தாநமாம்.

பாசுரம் விளக்க உரை
தங்கை மூக்கைத் தடிந்த விவரணமும், அதன்மேல் தோன்றும் ஆக்ஷேபத்திற்குப் பரிகாரமும், கீழ்- என்னாதன்  தேவியில் எட்டாம்பாட்டினுரையில் கூறப்பட்டது. தாசரதி- வடமொழித் தத்திதாந்தநாம்.(எங்குத் தன் புகழா இத்யாதி.) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கது. புருடோத்தமன்- திருக்கண்டங்கடிகளில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய திருநாமம். இருக்கை- தொழிலாகுபெயர்.

பின்னடிகளின் கருத்து;- ஏதேனுமொரு குளத்தில் நீராடுமவர்கள் அந்த நீரைக் கங்கையாக நினைத்து, ‘கஙகை, கங்கை’ என்று உச்சரித்தால் உடனே அவர்களுடைய பெருப்பெருத்த பாபங்களையெல்லா மொழிக்கும்படியான பெருமை பொருந்திய கங்கையின் கரையிலுள்ள கண்டமென்கிற நகரவிசேஷமென்பதாம்.

திருகண்டங்கடிநகர்- வடநாட்டுத் திருப்பதிகள் பரிரண்டினுள் ஒன்று; கண்டம் என்னுமிவ்வளவே இத்திருப்பதியின் பெயர்; கடி. என்னுஞ்சொல் இங்குச் சிறப்புப் பொருளது. “மத்தாற் கடல் கடைந்து வானோர்க்கமுதளித்த அத்தா வெனகுன்னடிப்போதில்- புத்தமுதைக், கங்கைக் கரைசேருங் கண்டத்தாய் புண்டரிக, மங்கைக்கரசே வழங்கு” என்ற ஐயங்கார் பாடலில் “கண்டத்தாய்” என்ற விளி நோக்கத்தக்கது.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

தல வரலாறு
இவ்விடத்திற்கு தேவப்ராயகை என்றும் பெயர். ப்ர-சிறந்த யாகம், வேள்வி, மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு ப்ராயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ராயாகை என்றாயிற்று என்றும் சொல்வர்.

தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில் பரவியிருப்பதால் தேவப்ராயாகை ஆயிற்றென்றும் சொல்வர். ப்ரயாகைக்கு கிழக்கே உள்ளே பிரதிஷ்டானம் என்ற இடத்தில் உள்ள தீர்த்தக் கிணறு. வடக்கேயுள்ள வாசுகி என்ற இடம், மேற்கே காம்ப்ளாஸ் என்னும் சர்ப்பங்கள் உள்ள இடம்.

தெற்கு திசையில் உள்ள பஹூ மூலம் என்னும் பகுதி ஆகியன ப்ரயாகையின் எல்லைகளாகும்.

தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதனிலையில் தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மாத்ஸய புராணம் கூறுகிறது.

சிறப்பு
கங்கையும், யமுனையும் கூடும் இடமே ப்ரயாகை. மிக ரஹஸ்யமான தீர்த்தமிது. விதிப்படி இங்கே வசித்துக் கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில் எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்ற ஞானத்தை நமக்கு தரும் என்று கூர்ம புராணம் கூறுகிறது.

கங்கையும், யமுனையும், சேருமிங்கு விதிக்கப்பட்டுள்ள முறைகளின்படி தூய்மையான மனத்துடன் யாகம் செய்பவர்கள் நற்கதி (மோட்சம்) அடைகின்றனர். என்றும், இங்கே உயிர்விடுபவர்கள் மோட்சம் பெறுகின்றனர் என்றும் ரிக்வேதம் பகர்கிறது.

இவ்விடத்தில் செய்யும் அன்னதானம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கொரு கதை உண்டு. சுவேத கேது என்னும் மன்னன் எண்ணற்ற தர்மங்கள் செய்தும் அன்னதானம் மட்டும் செய்யாதிருந்தான். அதன் மகத்துவத்தை முனிவர்கள் உணர்த்தியும் அவன் பின்பற்றவில்லை. அம்மன்னன் இறந்து மேலுலகு சென்ற பின் அவனை பசி வாட்டியது. இப்பசியை அடக்க தாங்கள் தான் வழிகாட்ட வேண்டுமென்று பிரம்மாவிடம் விண்ணப்பித்தான். அதற்குப் பிரம்மா, நீ அன்னதானம் செய்யாததால் உன்னை இங்கு கொடும்பசி வாட்டுகிறது.

பூவுலகில் தானம் செய்யாத பொருள் இங்கு கிடைக்காது. எனவே நீ மண்ணுலகு சென்று பாதுகாப்பாக உனது சரீரத்தை மிதக்க வைப்பதற்காக நீ வெட்டிய குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் உனது சரீரத்தை கத்தியால் அறுத்து அதைப் புசி என்றார். வேறு வழியின்றி சுவேத கேது அவ்வாறே செய்தான். ஆயினும் அவன் பசி அடங்கவில்லை. அப்போது முனிவரொருவர் ப்ரயாகையில் நீராடு என்று சொல்ல அவ்விதமே நீராடியும் பயனில்லை. அப்போது அங்கு வந்த அகஸ்தியர் ப்ரயாகையில் அன்னதானம் செய்தால் உன்சாபம் அகலுமென்றார்.

தேவ சரீரத்தில் நான் அவ்விதம் செய்ய இயலாதே என்று மன்னன் தெரிவிக்க அவ்வாறாயின் கையில் உள்ள யாதாயினும் ஒரு பொருளைக் கொண்டு அதை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்விக்கலாமென கூறினார். தனது தேவ சரீரத்தில் அவ்வாறு கழற்றிக் கொடுக்க அணிகலன்கள் யாதுமில்லையே என்று கூற, நீ செய்த பிற புண்ணியங்களின் பலன்களை திரட்டி கொடு என்று கூற, தான் செய்த தர்மத்தின் பலனையெல்லாம் திரட்டி ஒரு கணையாழி ரூபத்தில் தர அகஸ்தியர் அதனை அங்கிருந்த சீடர்களிடம் கொடுத்து இப்பொருளை விற்று அன்னதானம் செய்யுமாறு கூற அவ்வாறே அன்னதானம் செய்ய சுவேத கேதுவின் கொடும்பசி அகன்று மோட்சம் பெற்றாரென்பர்.

பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்றாலும் அவர்கள் சகோதரர்கள் அல்லவா, சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில் நீராடினால் போதும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடுமென மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு.

பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பெருமாளை இங்கு "ரகுநாத்ஜி" என்றழைக்கிறார்கள்.

தலவரலாறு
தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.

தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது. இத்தலத்தில் வழிபாடியற்றுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.

இறைவன் இறைவி
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)எனவும் வேணி மாதவன் என்றும் அழைக்கப்படுகிறான். இறைவியின் பெயர் புண்டரீக வல்லி, விமலா என்பனவாகும். தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை ஆகியன. விமானம் மங்கள விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.

சிறப்புகள்
பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் தான் கங்கை ஆறும் யமுனை ஆறும் கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும் சங்கமிக்கின்றன. மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது எனவே இங்கு வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும்.

இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள். ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.

ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத்  செல்லும் வழியில் வரும் முதல் திவ்யதேசம் இது. ரிஷிகேஷிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  இந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கங்கோத்ரியிலிருந்து கிளம்பி வரும் பாகீரதி நதியும் பத்ரிநாத்தில் பிறந்து வரும் அலகானந்தா நதியும் இணைந்து கங்கை என்ற நதியாக உருவெடுக்கும் அற்புதமான இடம் இது. பாகீரதியின் பச்சை நிறத் தண்ணீரும் அலகானந்தாவின் சாம்பல் நிறத் தண்ணீரும் ஒன்று கலப்பது கண்கொள்ளாக் காட்சி.

இந்த சங்கமத்தில் நீராடி விட்டு பல படிகள் ஏறிக் குன்றின் மீது அமைந்திருக்கும்  'வண்  புருஷோத்தமன்' என்னும் நீலமேகப் பெருமாளின் திவ்யதேசத் திருக்கோவிலை அடைய வேண்டும்..

பிரயாகை என்றால் இரு நதிகள் இணையும் இடம் என்று ஒரு பொருள் உண்டு. இரண்டு தேவ நதிகள் இங்கு இணைவதால், இத்தலம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது.

பிரயாகை என்றால் தவம் செய்யச் சிறந்த இடம் என்றும் பொருள். பிரம்மா, தசரதர், ராமர், பரத்வாஜர் ஆகியோர் இங்கே தவம் செய்திருக்கின்றனர். பரத்வாஜர் இங்கே தவம் செய்த பிறகுதான் சப்தரிஷிகளில் ஒருவராக ஆனார்.

ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள ராமர் இங்கே தவம் செய்தார். அதனால் இந்தக் கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. ராமர் அமர்ந்து தவம் செய்த இடத்தில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

கோவிலில் நரசிம்மர், ஆஞ்சநேயர், அன்னபூரணி, வாமனர், சிவன், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. முன்பே குறிப்பிட்டது போல் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட மேடையும் இருக்கிறது.

இந்த திவ்ய தேசம் பற்றி, பெரியாழ்வார் தமது 'பெரியாழ்வார் திருமொழியில் பதினோரு பாசுரங்கள் பாடியுள்ளார். இந்த திவ்ய தேசத்துக்குச் செல்ல முடியாதவர்கள் இந்தப் பாசுரங்களப் படித்தாலே இந்த திவ்யதேசத்தில் கங்கையில் நீராடிய அனுபவம் கிடைக்கும் என்கிறார் அவர்.

பாசுரங்கள்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி 
நான்காம் பத்து 
ஏழாம்  திருமொழி

1. தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்
எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே. (391)

2. சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும்
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (392)

3. அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்துஅங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (393)

4. இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (394)

5, உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (395)

6. தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (396)

7. விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி
மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு
அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும்
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (397)

8. திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு
நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே. (398)

9. வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (399)

10. மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை
ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (400)

11. பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று
தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே. (401)