மூலவர் - பரமபுருஷன், வாசுதேவன்
தாயார் - பரிமளவல்லி நாச்சியார்
விமானம் - கோவர்த்தன விமானம்
தீர்த்தம் - கோவர்த்தன தீர்த்தம், மானசரஸ், இந்திர தீர்த்தம்
திருநாமம் - ஸ்ரீ பரிமளவல்லீ ஸமேத ஸ்ரீ பரமபுருஷாய நமஹ:
நாடு : இந்தியா
மாநிலம் : உத்தராகண்டம்
மாவட்டம் : சமோலி
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

பாசுரம்
வாலிமாவலத்தொருவனதுடல்கெட வரிசிலைவளைவித்து,அன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே.
- பெரிய திருமொழி (958)


திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம். திருமங்கை தமது மங்களாசாசனத்தை இங்கிருந்துதான் துவங்குகிறார்.

பாசுரம் பதவுரை

முதற்பத்து - இரண்டாந் திருமொழி வாலிமாவலத்து
நெஞ்சே - ஓ மணமே!,
அன்று - முன்பு ஸ்ரீராமாவதாதரத்தில்
வாலி - வாலி யென்னும்பெயருடையவனான
மா வலத்து ஒருவனது - மஹா பலசாலியான ஒரு வாநரராஜனுடைய
உடல் கெட - சரீரம் சிதறும்படியாக.
வரிசிலை வளைவித்து - அழகிய வில்லை வளையச் செய்து
(அந்த வாலியை ஒழித்த பெருமான்)
ஏலம் நாறு - பரிமளம் வீசுகின்ற
தண்தடம் பொழில் - குளிர்ந்து விசாலமான சோலைகளிலே
இடம் பெற இருந்த எழுந்தருளியிருக்கப்பெற்ற - பாங்காக
நல்இமயத்துள் - நல்ல இமயமலையினுள்

ஆவி மா முகில் அதிர்தர - சிறுதுளியையுடைய காளமேகங்கள் அதிராநிற்க,
பீலி மா மயில் - தோகைகளையுடைய பெரிய மயில்களானவை
அரு வரை முகடு - ஏறமுடியாத படி உன்னதமான மலையினுச்சியிலே
அகடு உற ஏறி - கீழ்வயிறு தழுவும்படியாகச் சென்று ஏறி
நடம் செயும் - கூத்தாடா நிற்கு மிடமாயும்
தடம் சுனை - பரந்த சுனைகளையுடையதாயுமிருக்கிற
பிரிதி - திருப்பிரிதி யென்கிற திவ்ய தேசத்தை
சென்று அடை - சென்று சேரக்கடவை.

இத்தலம். இமயமலைக்கு வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற அழகுள்ள இடத்தில் எங்கோ அமைந்துள்ளது. அல்லது அமைந்திருந்தது என்றும் சொல்லலாம். ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாததால் இதனைச் சேவிக்க இயலாது.

திருப்பிரிதி என்னும் திருநாமம் எவ்வாறு வந்துள்ளதெனில், பதரி கண்டம் முதலான வடநாட்டுத் திருப்பதித் திருநாமங்களைப் போல இதை வடமொழி பெயராகக் கொண்டு பிரீதி எனவழைத்து காலப்போக்கில் பிரிதியாக மருவியுள்ளதாகக் கருதலாம். எம்பெருமான் பிரீதியுடன் (உகப்புடன்) எழுந்தருளியிருக்கும் இடம் என்றபடி.

1. திருமங்கையாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது மங்களாசாசனத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள ஸ்தலங்களில் சிலவற்றை மங்களாசாசனம் செய்து கொண்டே வந்து தென்னாடு புகருகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார். அவரது முதற்பதிகம் விளைந்த திவ்யதேசம் இதுதான்.

2. ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிரிதி என்னும் கருத்து ஒன்றும் நிலவுகிறது. இந்த இடத்தில் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்ல. அது எங்கோ இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு. இதில் தற்போது திருப்பிரிதி என்றழைக்கப்படும் ஜோஷிமட் திருப்பிரிதியாகாது. திருப்பிரிதி இமயத்திற்குள் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஸ்ரீவைஷ்ணவ சுதர்சன ஆசிரியர் ஸ்ரீமான் திரு. கிருஷ்ணசுவாமி ஐயங்கார். இவர் கூறும் கருத்துக்களே ஏற்றுக்கொள்வதற்கு உடன்பாடாய் இருப்பதாலும் அதுவே உண்மையாகுமாதலாலும் அவர் தமது கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்களை இங்கே சுருங்கச் சொல்கிறோம்.

அ) திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார். இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.

ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்திருந்தால் ஆழ்வார் முதலில் ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்து விட்டு அதன் பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் முதலில் திருப்பிரிதியை தமது திருமொழியில் 1-2ல் மங்களாசாசனம் செய்து விட்டு அதன் பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்கிறார். (எனவே ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்)

ஆ) திருமங்கையாழ்வாரும், மற்றும் பிற ஆழ்வார்களும் தாம் மங்களாசாசனம் செய்யும் திவ்ய தேசத்தின் மருங்கமைந்த இயற்கை காட்சிகளை தம் பாடல்களில் மறவாது குறிப்பிடுவர். உதாரணமாக திருவரங்கத்தைப் பாடும் பாக்கள் பலவற்றில் ஆழ்வார் காவிரியைக் குறித்துள்ளார். கங்கை கரையில் உள்ள வதரியச்சிரமத்தை பாடும் போது முதல் ஒன்பது பாசுரங்களிலும் ஈற்றடியில் கங்கையின் கரைமேல் வதரியாச் சிரமத்துள்ளானே என்று முத்திரை பொறிக்கிறார். இதே போல் கண்டமென்னும் கடிநகர்ப் பதிகப் பாசுரம் ஒவ்வொன்றிலும் அந்த நகர் கங்கை கரையில் உள்ளதென்பதை உணர்த்தியுள்ளார்.

கங்கைக் கரையின் மேலுள்ள ஜோஷி மடமே திருப்பிரிதியாகில் திருப்பிரிதிப் பதிகப் பாசுரம் ஒன்றிலாவது கங்கையைப் பற்றிச் சொல்லி இருக்கவேண்டும். கங்கை பெருகி ஓடும் நதி. திருப்பிரிதி பாசுரத்தில் தடஞ்சுனைகளையும், அருவிகளையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். இவைகள் கங்கைகரையில் இல்லை. ரிஷிகேசத்திலிருந்து வதரி வரை செல்லும் பாதையை ஒட்டியே கங்கை பாய்கின்றது.

திருப்பிரிதிக்கு கங்கையின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் சொல்லாமல் இருப்பதிலிருந்தே திருப்பிரிதியானது கங்கையின் உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் தாண்டி வதரிக்கு மிகவும் வடக்கே இருந்திருக்க வேண்டும் என்று காட்டும் முக்கியமான அகச் சான்றாகும்.

இ) திருமங்கையாழ்வார் திருப்பிரிதிக்கு இட்டருளிய பாசுரங்களில் எல்லாம் இமயத்துள் என்று இந்த திவ்ய தேசத்தைக் குறிக்கிறார். இமயத்துள் என்னும் பதத்தாலே இமயத்தின் நடுவில் இருப்பதே திருப்பிரிதி என உணர்த்துவதன் மூலம் இமயத்தின் தென்பகுதியில் உள்ள வதரி முதலிய திவ்ய தேசங்களைக் காட்டிலும் திருப்பிரிதியை வேறுபடுத்திக் காட்டுகிறார்.

இவ்வாறே பிரிதியில் உள்ளவனென்றும் இமயத்துள் இருப்பவனென்றும் ஆழ்வார் திருவுள்ளம் பற்றியதாலே ஏற்றினை இமயத்துள் எம்மீசனை என்ற பதத்திற்கு பெரியவாச்சான் பிள்ளை பொருள் கூறுமிடத்து ஹிமவானில் திருப்பிரிதியில் வந்து ஸந்நிஹிதனானவன் என்று அருளினார். (பெரியவாச்சான் பிள்ளை கங்கையையோ வதரியையோ குறிப்பிடவில்லை. இமயத்தை ஹிமவான் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது)
ஈ) திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் திருப்பிரிதியின் இயற்கை காட்சிகளை விளித்துப் போகும்போது அங்கு வாழும் காட்டு மிருகங்களை தமது பாக்களில் கூறிப்போகிறார்.

"விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன வேழங்கள் துயர் கூற விலங்கொள் வாளெயிற்றரியவை திரிதரு பிருதிசென்றடை நெஞ்சமே" - பெரிய திருமொழி (959)

பெரிய யானைகளை இம்சித்துக் கொண்டு சிங்கங்கள் சஞ்சரிக்கும் பிரதேசம் என்கிறார். ஏனங்கள் வளைமருப் பிடந்திடக் என்று காட்டுப் பன்றிகள் வாழுமிடம் என்கிறார்.

போர்கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம்பொழிலிமயத்துள் என்று போர் செய்தலையே தொழிலாக கொண்ட வேங்கைப் புலிகள் திரியுமிடமென்கிறார். இரும்பசியது கூர அரவமாலிக்கும் - பெரிய திருமொழி (965)

பசியினால் பாம்புகள் பெருமூச்சு விடுமென்கிறார். களிறென்று பெரிய மாசுணம் வரை யெணப் பெயர்தரு பிரிதி யானைகளை விழுங்கக்கூடிய மலைப் பாம்புகள் ஊர்ந்து செல்லக்கூடிய இடமென்கிறார். திருப்பிரிதியை இவ்வண்ணம் பாடியிருக்கும் திருமங்கையாழ்வார், வதரியைப் பற்றிப் பாடும் பொழுது ஒரு பாசுரத்திலாவது துஷ்ட மிருகங்கள் இருப்பதைப் பற்றிப் பாடவில்லை

பாரோர் புகழும் வதரியென்று திருமங்கையாழ்வார் காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஜனங்கள் வருடந்தோறும் வதரி சென்று வந்திருக்கிறார்களா கையாலே துஷ்ட மிருகங்கள் சஞ்சரித்திருக்க முடியாது. ஆகவே சிங்கம், புலி, மலையரவு ஆகிய துஷ்ட ஜந்துக்கள் வாழுமிடமாய் பாடப்படும் திருப்பிரிதி வதரிக்கு 20 மைல் தெற்கே உள்ள ஜோஷி மடமாக இருக்கவே முடியாது. ஜோஷி மடம் பிரிதியாய் இருக்க முடியா தென்பதற்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசமொன்றில் அமைந்தது திருப்பிரிதி என்பதற்கும் இது முக்கியமான அகச்சான்றாகும்.

பேராசிரியரான பெரியவாச்சான் பிள்ளையின் காலம் சுமார் 700 ஆண்டுகட்கு முற்பட்டதாகும். அக்காலத்தில் திருவரங்கமும் திருப்புல்லாணியும் எங்கேயுள்ளதென்பது எவ்வளவு பிரசித்தமாயிருந்ததோ அவ்வளவு பிரசித்தமாயிருந் திருக்கும். திருப்பிரிதியின் ஸ்தானமும். ஆகையால் திருப்பிரிதியின் ஸ்தானத்தை நிர்ணயிப்பதில் ஆழ்வார் பாசுரத்திற்கு உள்ள பலம் ஆச்சான் பிள்ளையின் வியாக்கியானத்திற்கும் உண்டென்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை வாலி மாவலத்து என்று தொடங்கும் திருப்பிரிதி திருமொழியின் பிரவேசத்தில் இப்படி ஸௌலப்யத்திற்கு எல்லையான உகந்தருளின நிலமெங்கும் புக்கு அனுபவிக்க கோலி அதில் இப்பாஷை நடையாடுமிடத்துக்கு எல்லையாயிருக்குமிறே திருமலை. அவ்வளவில் நில்லாதிறே இவருடைய ஆசையானது.

ஆகையால் உகந்தருளின நிலங்கட்கு எல்லையான ஹிமாவானில் திருப்பிரிதியளவும் சென்று அவ்விடத்தை அனுபவித்ததாகத் திருவுள்ளத்தோடே காட்டுகிறார். என்று அருளிச் செய்கிறார். திருவேங்கிடம் எப்படித் தமிழ்நாட்டிற்கு எல்லையோ (இங்கு பெரிய வாச்சான் பிள்ளை அதில் இப்பாஷை என்றது தமிழ் மொழியினை) அதுபோல உகந்தருளிய நிலங்களுக்கெல்லாம் எல்லையாயிருப்பது திருப்பிரிதி என்று அருளியிருப்பது மற்ற திவ்யதேசங்கள் அனைத்திலும் வடக்கே இருப்பது என்று ஐயந்திரிபறக் காட்டுகிறது. .

கருவறையில் அருள்மிகு நரசிம்ம சுவாமி சாளக்கிராம வடிவினராக, வீராசனத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தந்து அருள்கிறார். பெருமாளுக்கு அருகில் அருள்மிகு பத்ரி நாராயணர், உத்தவர், குபேரர், சண்டிகாதேவி, இராமர், இலட்சுமணன், சீதாதேவி ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். இங்கு ஆதிசங்கரால் கட்டப்பட்ட நரசிம்ம கோவிலும், வாசுதேவர் கோவிலும் உள்ளன.

இங்குள்ள பெருமாளின் பெயர், பிராட்டியின் பெயர், சயன திருக்கோலம், போன்றவற்றையும், திருமங்கை தமது பாசுரங்களில் குறிக்கிறார்.

நூற்றெட்டுத் திருப்பதி ப்ரபாவ நூல்களில் திருப்பிரிதி பற்றிக் கூறியுள்ள விவரங்கள் ஆழ்வார் பாசுரங்களோடும் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தோடும் ஒத்திருக்கையாலே பாரதத்தின் வட எல்லையில் இமயத்தினுள்ளே மானஸரோவர தீர்த்தத்தில் உள்ளதொரு அடர்ந்த காடே திருப்பிரிதியென்று பெயர் பெற்றிருந்ததென்றும், அதில் எம்பெருமான் பரமபுருஷன் என்னும் திருநாமத்தோடு பரிமளவல்லி நாச்சியாரோடு ஆதிசேட சயனத்திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.

இறைவன் இறைவி
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய புஜங்க சயனக் கோலத்தில் பரம புருஷன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பரிமளவல்லி நாச்சியார் தீர்த்தம் இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானசரோவரம் ஆகியன. விமானம் கோவர்த்தன விமானம் என்ற அமைப்பினைச் சார்ந்தது.

சிறப்புகள்
திருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது.

திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது.

இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிர்தியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு

சிவபெருமான் கோயில் கொண்டருளும் ஒப்பற்றத் தலம் திருக்கயிலை என்பது அனைவரும் அறிந்ததே. மாதொரு பாகன் உறையும் கயிலைச் சாரலிலுள்ள ஒரு வனப் பகுதியில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியும் கோயில் கொண்டருள்கிறார் என்ற செய்தி பெரும் வியப்பினைத் தோற்றுவிக்கிறதல்லவா!!

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் திருப்பிரிதி எனும் தலம் வடநாட்டில் அமைந்துள்ளது. இத்தலம் 'ஜோஷி மட்' எனும் கருத்து நிலவி வந்தது. எனினும் எண்ணற்ற ஆய்வுகள் மூலம் 'திருப்பிரிதி' எனும் தலம் திருக்கயிலைக்கு அருகிலோர் வனப் பகுதியையே குறிக்கிறது என்று ஐயம் திரிபறக் கண்டறிந்துள்ளனர்.

திருமங்கை ஆழ்வார் பரந்தாமன் உறையும் வடநாட்டுத் தலங்களை நேரில் தரிசித்துப் பாசுரங்களைப் பாடி அருளிக் கொண்டுச் செல்கிறார். முதலில் திருப்பிரிதி; பின்னர் பத்ரிநாத்; சாளக்கிராமம்; நைமிசாரண்யம்; அகோபிலம்; திருவேங்கடம் என்று வரிசைக் கிரமமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்து ஒவ்வொரு தலத்துக்கும் பாசுரங்களை அருளிச் செல்கிறார்.

முதலாவது பத்ரிநாத் தலமோ ஜோஷி மட்டிற்கு வடக்கே அமைந்து உள்ளது. ஜோஷி மட் தலம் 'திருப்பிரிதி' என்றிருக்குமே ஆயின் ஆழ்வார் முதலில் பத்ரிநாத் தலத்தையே பாடி இருக்க வேண்டும். அங்கனம் பாடாது திருப்பிரிதியைப் பாடியுள்ளாரெனில் திருப்பிரிதி பத்ரிநாத்துக்கு வடப் புறமே உள்ளதென்பது திண்ணம். இது ஆய்வாளர்கள் முன்வைக்கும் முதல் வாதம்.

இரண்டாவது, திருமங்கை ஆழ்வார் பத்ரிநாத் தலப் பாசுரம் ஒவ்வொன்றிலும் கங்கைக் கரையிலுள்ள தலம் என்று தெளிவாகக் குறிக்கிறார். ஆனால் திருப்பிரிதி பாடல்களில் அவ்வாறு குறிக்கவில்லை. மாறாக தடஞ் சுனைகளையும் அருவிகளையும் குறித்துள்ளார். இவை எதுவுமே கங்கைக் கரையுலுள்ள 'ஜோஷி மட்' பகுதியில் இல்லை.

மூன்றாவது, திருப்பிரிதி பாசுரங்களில் ஆழ்வார் 'இமயத்துள்' என்று பரவலாகக் குறித்துள்ளார். இதன் மூலம் இமய மலைக்குத் தென்புறம் அமைந்துள்ள பத்ரிநாத் முதலிய தலங்களைக் காட்டிலும் திருப்பிரிதி தலத்தை வேறுபடுத்திக் காட்டியருளியுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நான்காவது, திருப்பிரிதி பாசுரங்களில் யானைகளை இம்சித்துக் கொண்டு சிங்கங்கள் சஞ்சரிக்கும் இடம் என்றும், வேங்கைப் புலிகள் திரியும் இடமென்றும், மலைப் பாம்புகள் ஊர்ந்து செல்லும் இடமென்றும் குறித்தருள்கிறார். ஆனால் பத்ரிநாத் தலப் பாசுரங்கள் ஒன்றிலும் துஷ்ட மிருகங்களின் சஞ்சாரத்தை ஆழ்வார் குறிக்கவில்லை.

ஆழ்வார் குறித்துள்ள தலம்; மூர்த்தி; தீர்த்தம்; விமானம் எதுவுமே 'ஜோஷி மட்' தலத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக இல்லை. மேலும் வைணவ ஆசிரியர்களின் உரைகளையும் ஒப்பு நோக்கும் போது 'திருப்பிரிதி' மானசரோவரம் அருகில் ஒரு அடர்ந்த வனப் பகுதியில் உள்ளதென்பது தெளிவு.

உத்தரகாண்ட் மானிலத்தில் கார்வால் மலைப்பகுதியில் சாமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் உள்ளது ஜோஷிமட். இதுதான் திருப்பிரிதி என்பது பொதுவான அபிப்பிராயம். ரிஷிகேசத்திலிருந்து பத்ரி நாத் செல்லும் வழியில் இருக்கிறது. இது தனி முனிசிபாலிடி. பத்ரி மற்றும் பல மலையேற்றப் பாதைகளுக்கு முகத்வாரம் போல உள்ளது. குரு கோவிந்த் காட், தேசிய பூக்கள் பூங்கா [valley of flowers national park] இந்தியாவின் கடைசி கிராமமான மானா போன்றவற்றுக்குப் போகும் பாதையும் இதுதான்.

ஆதிசங்கரர் ஏற்படுத்திய பல பீடங்களுக்கும் ஆதாரமான இடம். ஆதிசங்கரர் இங்கு ஜ்யேஹிஷ் பீடத்தை ஸ்தாபித்து ஒரு மரத்தடியில் [கல்பக விருட்சம்] தவம் செய்து திவ்ய ஞானம் பெற்று சங்கர் பாஷ்யம் போன்ற பல நூல்களை இயற்றினார் என்று சொல்கிறார்கள். இந்த மடம் அதர்வ வேதத்துக்கான பாதுகாப்பு மடம் என்றும் அறியப்படுகிறது. ஜ்யேஹிஷ் என்பது திரிந்து ஜோஷிமடம் ஆகிவிட்டது.

ஆதிசங்கரர் தவம் செய்து ஞானம் பெற்ற மரம் கல்பக விருட்சம் என்று தற்போதும் போற்றப்படுகிறது. 1200 வருடங்களுக்கு மேலான இந்த மல்பெரி எனப்படும் முசுக்கொட்டை மரத்தின் சுற்றளவு சுமார் 22 மீட்டர். இலைகள் காயாமல் இருக்கின்றன. பூக்களும் வருகின்றன. காய்கள் இல்லை. முற்காலத்ஹ்டில் திருப்பிரிதியில் பள்ளிகொண்ட பெருமாளாக மூலவர் காட்சி அளித்தாராம். தற்போது ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட நரசிம்மர் ஆலயமும் வாசுதேவர் ஆலயமும் உள்ளன.

ஜோஷிமடம் ரிஷிகேசிலிருந்து 25 கிமீ NH 58 தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அருகில் ஔலி என்ற பிக்னிக் இடம் உள்ளது. ஜோஷ்மட்டிலிருந்து ஔலிக்கு தொங்கு பாலம் உள்ளது. இதுதான் ஆசியாவிலேயே உயரமான நீளமான தொங்கு பாலமாம். மலையேற்றம் செல்பவர்களுக்கு இந்த இடம் சொர்க்க பூமி. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நிறைய நீர் விளையாட்டுக்கள் சாகஸ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன,

இதன் அருகில் தான் விஷ்ணு பிரயாகை ஹதி பர்வதம் என்ற யானை போன்ற இமயமலைச்சிகரம் பல கிளை நதிகள் சிற்றருவிகள் என அற்புத காட்சிகள். புராணங்களில் இந்த இடம் கார்த்திகேயபுரம் என்று வர்ணிக்கபடுகிறது. கத்யூரி வம்சத்து அரசரனான கார்த்திகேயன் ஆண்ட இடமாம். எட்டாம் நூற்றாண்டில் ஆதிகங்கரர் இங்கு விஜயம் செய்து அமைப்புகளை மாற்றினார் என்கின்றனர். இந்த திவ்ய தேசம் நந்தப் பிரயாகைக் கரையில் உள்ளது.

கருவறையில் கருமையான சாலக்ராம வடிவாக அமர்ந்த திருக்கோலத்தில் நரசிம்ம மூர்த்தி அருகில் பத்ரி நாராயணர். உத்தவர் குபேரன் துர்காதேவி சீதா ராம லட்சுமணர் கருடன் ஆகியோரும் உள்ளனர். கீழே ஹிரண்ய சம்ஹார வடிவாக உக்ர நரசிம்மர் எதிரே தனியாக ஒரு கோயில் நுழையும் இடத்தில் கருவறைக்கு நேராக அமர்ந்த திருக்கோலத்தில் பட்சிவாகனர்.

சன்னதியில் வாசுதேவர் என்ற திரு நாமத்துடன் சதுர்புஜனாக அமர்ந்த கோலத்தில் மஹாவிஷ்ணு. மேல் வலக்கையில் கதை இடக்கையில் சக்கரம் கீழ் இடக்கையில் சங்கு வலக்கையில் தாமரை மலர். வித்தியாசமான அமைப்பு சங்கும் சக்கரமும் இடது கைகளிலும். அருகில் ஸ்ரீதேவி பூதேவி நீலா தேவி ஆச்சர்யமாக பெருமாளின் தொடையிலிருந்து வெளிப்பட்ட ஊர்வசியையும் சன்னதியில் காண்கிறோம் தனியாக பலராமன்.

இந்த நரசிம்மர் சன்னதியை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்யும்போது ஸ்ரீ சக்கர எந்திரத்தை அடியில் வைத்தாராம். அது அலக் நந்தாவின் அடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நரசிம்ம மூர்த்தி சக்தி வாய்ந்தவர் என்றும் அவருக்கு எல்லாம் தெரியும் எதையும் மறைக்கமுடியாது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்திர தீர்த்தம் கோவர்த்தன தீர்த்தங்களுடன் கோவர்த்தன விமானம் கூடிய இத்திருத்தலத்தில் பார்வதி தேவிக்கு பரிமளவல்லி நாச்சியாருடன் பெருமாள் பிரத்யக்ஷமாம். கிழக்கு திருமுகத்துடன் புஜங்கசயனனான பரம புருஷன் இருக்கவேண்டிய இடத்தில் நரசிம்மரும் வாசுதேவரும் இருக்கின்றனர்.

அமைவிடம்
இத்தலம் ஹரிதுவாரிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் பத்ரிநாத் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ரிஷிகேஷ் - பத்ரிநாத் பாதையில் பத்ரிநாத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6150 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.