மூலவர் : ரகுநாயகன் (ராமர்)
அம்மன்/தாயார் : சீதை
தீர்த்தம் : சரயு நதி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : சரயு, அயோத்தி
மாவட்டம் : பைசாபாத்
மாநிலம் : உத்திர பிரதேசம்
மங்களாசாசனம் : குலசேகர ஆழ்வார்
சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ
- குலசேகராழ்வார்
திருவிழா
ராமநவமி
தல சிறப்பு
ராமனின் ஜெனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன. இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் சிரமமானது. எனவே அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.இந்தக் கோயிலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சரயு நதியில் தனது சகோதரர்களுடன் சங்கமம் ஆன குப்தா படித்துறை உள்ளது. இங்க நீராடுவது புண்ணியம் தரும். இந்த ஆற்றின் கரையில் உள்ள அனுமன் விஸ்வருப வடிவம் கொண்டவராக இருந்தார். இப்போது தலை மட்டுமே தெரிகிறது. குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோர் அயோத்தி பற்றி பாடியுள்ளார்கள்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம்.
பொது தகவல்
ஒரு பெண் அழுதால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் ஒரு ஆண் அழுதால் அதற்கு காரணம் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் என்பதை தெளிவாக எடுத்துக்கூறும் கதை ராமாயணம். அதனால் தான் ராமாயணத்தை படித்தாலே புண்ணியம். ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலே புண்ணியம் என்கிறோம்.
பிரார்த்தனை
மனைவிக்கு துரோகம் செய்பவன் அழிந்து போவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் பாடம். மனைவியை நேசித்தல் ராமனை தினமும் துதிப்பதற்கு ஒப்பாகும். பெண்களும் கோபப்படாமல் சீதாதேவி போல் பொறுமையாக இருக்க வேண்டும்.
நேர்த்திக்கடன்
ராமனுக்கு மிகவும் பிடித்த துளசிமாலையை அணிவித்து அவரை வழிபடலாம். ஸ்ரீராமஜெயம் எழுதுவதோ, ராம நாமத்தை உச்சரிப்பதோ எவ்வளவு பெரிய பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.
தலபெருமை
ராமன் ஏக பத்தினி விரதன். அனுமான் களங்கமற்ற தூய பிரம்மச்சாரி. இந்த இரண்டையும் நாம் உற்று நோக்க வேண்டும். பிரம்மச்சாரியாக வாழ்பவன் அனுமனைப் போல பிற பெண்களை தாயாக நேசிக்க வேண்டும். சீதாவை அனுமான் தாயாகவே நேசித்தான். இல்லற வாழ்க்கையில் இறங்குபவன் பக்கத்து வீட்டு பெண்ணை நோக்கக்கூடாது. ராவணனுக்கு மண்டோதரி மனைவி ஒருத்தி இருக்கும் போது அவன் அடுத்தவன் மனைவியான சீதா மீது ஆசைப்பட்டான். விளைவு அவன் உயிரே போனது. இதற்கு காரணம் சீதாவும் அல்ல. ராமனின் வீரமும் அல்ல. மண்டோதரியின் மனக்குமுறலே ராவணனை அழித்து விட்டது. நாம் இருக்கும்போது இன்னோருத்தியை தனது கணவர் நாடுகிறாரே என அவள் மனம் எந்த அளவு புண்பட்டிருக்கும். அந்த புண்பட்ட மணம் தன்னை அறியாமல் விட்ட சாபமே ராவணனின் அழிவுக்கு காரணமாயிற்று.
தல வரலாறு
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி. சரயு நதிக்கரையில் ராமனுக்கு கோயில் எழுப்பப் பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு இவ்வூரை கட்டியாதக் சொல்வர். தேவர்களே இந்நகரை கிருஷ்ணனின் ராம அவதாரத்துக்காக எழுப்பினார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பரகீதர் ஆகியோர் இந்த புண்ணிய பூமியை ஆண்டனர். அதன் பிறகு பகீரதரின் பேரனான தசரதர் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்னும் முன்று மனைவிகள். இவர்களில் கோசலைக்கு பிறந்தவரே ராமன். ராமாயணம் மறைமுகமாக சுட்டிக் காட்டும் உண்மை இதில் தான் புதைந்து கிடக்கிறது. தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால் அவள் மூலமாகவே நான்கு புத்திரர்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் மூன்று பெண்களை திருமணம் செய்து நான்கு மக்களைப் பெற்றார். ஆனால் கைகேயியின் சொல்லைக் கேட்டு வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி, புத்திர சோகத்தால் தன் உயிரையே விட்டார். இதே போல ராவணனும் இன்னொரு பெண்ணை விரும்பியதால் இறந்தான். அயோத்தி மாநகர் ஆலயத்தில் இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் ராமரை வழிபட எந்தத் தடையும் இல்லை. இங்கு ராமன், ரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இப்போது சரயு நதிக்கரையில் அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய தலம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ரங்கநாதர் சன்னதியும், ராமர் சன்னதியும் உள்ளன. ராமனின் சன்னதியில் சீதாதேவியும், தம்பிகள் மூவரும், அனுமனும், கருடனும் உள்ளனர். இத்தனை பேரையும் ஒரு சேர வழிபடும் இடம் இதுவே.
அமைவிடம்
அயோத்திக்கு செல்ல விரும்புவோர் உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சென்று அங்கிருந்து காசி செல்லும் வழியில் 130 கி.மீ., தொலைவிலுள்ள அயோத்தியை அடையலாம். இங்குள்ள பைசாபாத் மாவட்டத்தில் ராமர் கோயில் அமைந்துள்ளது. பைசாபாத்திற்கு லக்னோவிலிருந்து ரயில் மற்றும் பஸ் வசதிகள் உள்ளன. பைசாபாத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் அயோத்தி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : பைசாபாத்
அருகிலுள்ள விமான நிலையம் : லக்னோ
தங்கும் வசதி
பைசாபாத்தில் தங்கி அயோத்தி செல்லலாம்.
திறக்கும் நேரம் :
காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு ராமர் கோயில் அயோத்தி - 224 124 பைசாபாத் மாவட்டம் உத்திரபிரதேச மாநிலம்.
போன் : +91-9415039760, +91-9580717014