Sri Tallapaka Annamacharya - ஸ்ரீ அன்னமாச்சாரியார்
தல்லபாக்கம் அன்னமாச்சாரியார் Sri Tallapaka Annamacharya பிறப்பால் சைவரான அன்னமய்யா விசிஷ்டாத்வைத கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, வைணவ நெறியை கடைபிடித்தததாலும், வைணவ கீர்த்தனைகளை இயற்றியதாலும் ஸ்ரீஅன்னமாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார். ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மே 9, 1408ல் பிறந்தவர் இவர். இவரது மனைவி திம்மக்கா. பெண் புலவர். "சுபத்ரா கல்யாணம்" என்ற நூலை எழுதியவர் திம்மக்கா ஆவார். இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சார யாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர். அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, ”தாளபாக மும்மூர்த்திகள்” என்று அழைக்கின்றனர். அன்னமாச்சாரியார் பிறந்த கிராமத்தின் பெயர் தாளபாக்கம். வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ்பெற்றவை. இவருடைய காலத்தில்தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம், போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரை வரிசை செய்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும், தெய்வீகம் பொருந்தியனவாகவும் இருக்கின்றன அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின் வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.
Sri Tallapaka Annamacharya அன்னமாச்சாரியா பாதை –
அன்னமய மார்க்கம் : அன்னமாச்சாரியா தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப்படுகிறது. அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, "மோக்காலு_மிட்டா" என்னும் இடம் இருக்கிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு "முழங்கால் முறிச்சான்" என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை "மோகாலு மிட்டா" என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்த போது அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது. சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் ராமானுஜர் மீதும் (கதுலன்னி கிலமைனா, உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (வாடே வேங்கடேசுனனே வாடே வீரு...) சில பாடல்களை இயற்றியுள்ளார்.
ஏழுமலையான் கோவலில்
ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் "தலப்பாகமரா" எனப்படும் "சங்கீர்த்தன பண்டார" என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். "தலப்பாக" கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு "சங்கீர்த்தன பாதுகாப்பு அறை" என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. "ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை" பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனை ஏழுமலையான் மீது பாடியுள்ளார். 1922ம் ஆண்டில்தான் இவரது கவிதை மீண்டும் வெளிகொணரப்பட்டது. "சங்கீர்த்தன பண்டார" அறையில் இருந்த இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன.
Sri Tallapaka Annamacharya இவரது பாடல்கள்
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். (கூட்டத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்). சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்துவிடுவார்கள். காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு, தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும் அன்னமாச்சாரி பட்டி - தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர் - சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் ப்ரஹ்மம் ஒக்கடே என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்தவர் இவர். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையில், மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.
எழுதிய நூல்கள்
வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. திவிபர்த ராமாயணா’ ‘சிருங்கார மஞ்சரி’ ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம்வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உடையதாக இருந்தது. சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாகமும் மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.