நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.
108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்று என்பது மேலும் பெருமை சேர்க்கிறது. காவிரிக்கரையில் அமைந்துள்ள ஆதிரங்கர்(ஸ்ரீரங்கபட்டினம்), கஸ்தூரி ரங்கர்(ஸ்ரீரங்கம்), அப்பாலரெங்கநாதர் (கோவிலடி), சாரங்கர் (கும்பகோணம்), பரிமள ரெங்க நாதர் (மயிலாடுதுறை) ஆகிய 5 பெருமாள் கோவில்கள் பஞ்சரங்க தலங்களாகும்.
இவற்றுள் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.
ஒரு காலத்தில் இந்த ஊர் பலாச மரங்கள் நிறைந்த புரசமரக் காடாக இருந்தது. இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்டு வந்த உபரி சர்வசு என்ற மன்னன், வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது யானை ஒன்றை அம்பு கொண்டு தாக்கினான். அந்த யானையோ பயத்தில் வேதம் ஓதும் அந்தணர் ஒருவரை மிதித்துக் கொன்றுவிட்டது. அதனால் மன்னனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்திக்காக பெற துர்வாச முனிவரிடம் சென்று வேண்டினான்.
அவரோ, ‘பலாச வனத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று ‘ஓம் பத்மநாபாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து அன்னதானம் செய்தால் தோஷ நிவர்த்தியாகும்’ என்று அருளாசி கூறினார். அதன்படியே மன்னன் இந்த ஊரில் அரண்மனைக் கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான். அப்போது பெருமாள் அசரீரியாக, ‘மன்னா! நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்’
. அதன்படியே மன்னன் இந்த ஊரில் அரண்மனைக் கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான். அப்போது பெருமாள் அசரீரியாக, ‘மன்னா! நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்’ என்றார். உபரிசர்வசுவும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தான்.
அப்போது பெருமாள், வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவுக்கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் மன்னன். உடனடியாக உணவு தயார் செய்து தருவதாக கூறினான்.
ஆனால் அந்தணர் உருவில் இருந்த பெருமாளோ, ‘சமையல் செய்ய அதிக நேரம் ஆகும். எனக்கு பசி அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு’ என்றார்.
மன்னன் பக்தி சிரத்தையுடன் நெய்யினால் வெந்ததும், வெல்லம் கலந்ததும், அதிக ருசியுடன் தயாரித்த அப்பங்களை ஓர் குடம் நிறைய நிரப்பிக் கொண்டு அந்தணரிடம் கொடுத்தான். பேரானந்தம் அடைந்த பெருமாள், அப்பக் குடத்தில் வலது கரம் வைத்து ஆசி கூறிவிட்டு, மன்னனுக்கு திவ்ய தரிசனம் கொடுத்தார். இதையடுத்து மன்னனின் சாபமும் நீங்கியது.
இந்த நிகழ்வின் காரணமாகவே இத்தல பெருமாளுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்ற சிறப்பு பெயரும் வந்தது. இத்தல இறைவனுக்கு அப்பமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பெருமாள் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தம் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் ஸ்ரீகமல வல்லி.
பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். திருக்கடையூரில் சிவபெருமானால் என்றும் 16 வயதுடன் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேயன் இந்த யுகம் முடிந்ததும் மீண்டும் பிறவாமல், மோட்சநிலை அடைய வேண்டி இக்கோவிலுக்கு வந்து தவம் இருந்தார்.
பெருமாள் அவருக்கு மோட்ச நிலையை வழங்கினார். எனவே எமபயம் போக்கும் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் சிறிய பிள்ளையார் சன்னிதி உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை வழிகாட்டி விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.
நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார். இத்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம் பெறலாம்.
இந்த ஆலயத்தில் பங்குனிமாதம் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். மேலும் அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடக்கிறது.
தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து தங்கள் பெயரில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்து 10 அப்பம் வாங்கி அதை நைவேத்திய தானம் செய்தால் உரிய பலன் கிடைக்கும். தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.
குழந்தை வரம் தரும் கோபாலகிருஷ்ணன் :
குழந்தை இல்லாதவர்கள் கோவிலடி கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், பெண்கள் புடவையும் கட்டிக் கொண்டு வர வேண்டும். தேங்காய், பழங்கள், துளசிமாலை வெண்ணைய், கற்கண்டு, விளக்குக்கு நெய் வாங்கி வந்து குருக்களிடம் கொடுத்து, தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். குருக்கள் மந்திரங்கள் சொல்லி கோபாலகிருஷ்ணன் சிலை விக்கிரகத்தை தம்பதியர்கள் கையில் கொடுத்து மந்திரங்களை கூறுகிறார். பின்னர் நைவேத்தியம் செய்த கற்கண்டுகளை 10 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.
நீங்காத செல்வம் தரும் மகாலட்சுமி :
கோவிலடிக்கு திருப்பேர் நகர் என்ற பெயரும் உண்டு. ‘திரு’ என்பதற்கு செல்வம் என்று பொருள். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி இக்கோவிலில் கனகவல்லி தாயார் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். மகாலட்சுமி இத்தலத்தை விட்டு பெயராமல் நிரந்தரமாக தங்கி இருப்பதால், இந்த திருத்தலத்திற்கு ‘திருப்பெயராத நகர்’ என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் இது மருவி ‘திருப்பேர் நகர்’ என்றானது. நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை செய்தால் நீங்காத செல்வமும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைப்பதாக ஐதீகம்.
தஞ்சாவூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவிலடி கிராமம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்லவேண்டும். திருச்சியில் இருந்து 23 கி.மீட்டர் தூரம் பயணித்தால் கல்லணை வழியாக கோவிலடியை சென்றடையலாம்.