எந்த  மனிதன் பண்டிதனாகிறான்?

தர்மங்களை அறிந்து கடைப் பிடிப்பவனே பண்டிதன்”

எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?

நாஸ்திகனே, மூர்க்கன்.

எது டம்பம்?

தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்..

ஒன்றுக் கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம்- ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படிநடக்கும்?

அறமும், மனைவியும் இணைந்து செயல்படும் போது, அந்த இல்லறத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.

எந்த மனிதன்  அழிவற்ற நரகத்தை அடைவான்?

தானம் கொடுப்பதாகக் கூறி விட்டுப் பிறகு இல்லை என்று சொல்பவன். வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன். செல்வம் இருந்தும் பிறருக்குக் கொடாதவன்- ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.
.

பிறப்பு, வேதம், ஓதுதல், தர்ம சரஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் – இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?


பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம் தான் பிராமணத் துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும்  அவன் பாழானவனே! கல்வியும், சாத்திர அறிவும், மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப் படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளவனாக  இந்திரியங்களை அடக்கியவன் எவனோ, அவனே பிராமணன்.

இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?

மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.

ஆலோசித்த  பிறகே காரியத்தைச்  செய்பவன் எதை அடைகிறான்?

வெற்றியை அடைகிறான்.

தர்மத்தில் பற்றுள்ளவனுக்கு என்ன கிட்டுகிறது?

அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.

எவன் சந்தோஷத்தை அடைகிறான்?

கடனில்லாதவனாகவும், பிழைப்பதற்காக  ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும், வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ, அவன் சந்தோஷமடைகிறான்.

எது தினத்தோறும் நடந்து வரும் நிகழ்ச்சி?

உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.

எது ஆச்சரியம்?

உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டே இருப்பதைப் பார்த்தும் கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்துக் கொண்டு, நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே- அது தான் ஆச்சரியம்.

பின்பற்ற வேண்டிய வழி எது?

வேதங்கள், ஸ்மிருதிகளைக் கற்றறிந்து பின்பற்ற வேண்டிய வழியைக் கண்டு கொள்ளலாம் என்றால், அது அவ்வளவு எளிதாக முடிகிற முயற்சி அல்ல. ஆழ்ந்து கவனிக்காமல் மேலோட்டமாக இவற்றை அறிபவனுக்கு, அவை முரண் பட்டவை போலவே தெரியும். ரிஷிகளின் கருத்துப் படி நடக்கலாம் என்று நினைத்தாலோ அவர்கள் பற்பல வகைகளில் இந்தப் பிரச்சனையை அணுகுகிறார்கள். ஆக, தர்மத்தை அறிவது சிக்கலாகவே இருந்து வருகிறது. ஆகையால், நமது பெரியோர்கள் சென்ற வழியே நான் பின்பற்ற வேண்டிய வழி.

எவன் புருஷன்?

விருப்பு- வெறுப்பு, சுகம்- துக்கம், நடந்தது- நடக்க இருப்பது- ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்குச் சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப் படுகிறான்.

எவன் செல்வம் மிகுந்தவன்?

ஆசையற்று, அமைதியான மனமும், தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும், மனிதன் எவனோ அவனே செல்வம் நிறைந்தவன்.

இப்படி தர்ம புத்திரர் கூறிய பதில்களைக்கேட்டு திருப்தியடைந்த யக்ஷன், யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக இருக்கின்றன. அதற்குப் பரிசாக உன் தம்பி மார்களுள் ஒருவனுக்கு நான் உயிரளிக்கிறேன். அவன் யார் என்பது உன் விருப்பத்தைப் பொறுத்தது” என்றான். தர்ம புத்திரர், நகுலன் உயிர் பெற்று எழுந்திருக்க அருள் புரிவாயாக” என்று கேட்டுக் கொண்டார்.

உன் தாயான குந்தி பெற்ற பீமசேனன், அர்ஜுனன் இவர்களை விட்டு, மாற்றாந்தாயின் புதல்வனான நகுலன் பிழைக்க வேண்டும். என்று ஏன் விரும்புகிறாய்? என்று யக்ஷன் கேட்டான்.

என் தந்தைக்கு என் தாயான குந்தியும், மாற்றாந்தாயான மாத்ரியும் மனைவிகள். என் தந்தையின் இரண்டு மனைவியரும் சந்ததி உள்ளவர்களாக இருக்க வேண்டும்  என்று விரும்புவது தான் என் கடமை, குந்தியின்  புதல்வனாகிய நான்  உயிரோடு இருப்பதால், மாத்ரியின் புதல்வர்களில் ஒருவன் பிழைப்பது தான் நியாயம். தர்மத்தை நாம் கெடுக்க விரும்பினால்  அது நம்மைக் கொன்றுவிடும். தர்மத்தை  நாம் பாதுகாத்தால் அது நம்மை பாதுகாக்கும். மாத்ரியின்  புதல்வர்களில் ஒருவன் உயிர் பெற  நான் விரும்புவதே தர்மம். ஆகையால், நகுலனே பிழைத்து எழுந்திருக்கட்டும்.

இப்படி தர்ம புத்திரர் கேட்டுக் கொண்டதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்த யக்ஷன், தர்ம புத்திரரின் நான்கு சகோதரர்களையுமே உயிர் பெறச் செய்தான். பிறகு, ” நான் உன்  தகப்பனாராகிய தர்ம தேவன்! உன்னுடைய  குண நலனை அறியும்விருப்பத்தோடு தான் இங்கு வந்தேன். குற்றமற்ற நீ, வேண்டும் வரத்தைப் பெறுவாய்” என்று கூறினான் யக்ஷன். காட்டில் பன்னிரண்டு வருடங்களைக் கழித்து விட்ட நிலையில் பதின் மூன்றாவது வருடம் தலை மறைவாக வாழும் போது, தங்களை யாரும்அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க, தர்ம தேவனனின் அருளை வேண்டினார் தர்ம புத்திரர். யக்ஷன் உருவில் வந்த தர்ம தேவன் அப்படியே ஆசீர்வாதம் செய்தான். மேலும் வரங்களைக் கொடுக்க விரும்பிய தர்ம தேவனிடம் யுதிஷ்டிரர், பொறாமை, ஆசை - கோபம்- இவற்றை அடக்கி தர்மம்,  தவம், சத்தியம் - இவற்றிலேயே என் மனம் என்றும் நிலை பெற வேண்டும்” என்ற வரத்தைக்கோரினார். தர்ம தேவன் அந்த வரத்தையும் அளித்து  மறைந்தான்.

(பிரச்னம் என்றால் கேள்வி - யக்ஷப் பிரச்னம்” என்று குறிப்பிடப் படுகிற இந்தப் பகுதியில், இன்னும் நிறைய கேள்விகளும், பதில்களும் இருக்கின்றன. அவற்றில் எளிமையான வற்றைத் தான் இங்கே தொகுத்திருக்கிறேன்.

இது பற்றி பாரதத்தில் ஒரு குறிப்பு வருகிறது. நம்பிக்கை யுடையவர்களுக்காக அந்தக் குறிப்பையும் இங்கே தருகிறேன். தந்தையாகிய தர்ம ராஜனும், மகனாகிய தர்ம புத்திரனும் சந்தித்து, பாண்டவர்கள்  நால்வர் உயிரிழந்து மீண்டும்  பிழைத்தது, தர்ம ராஜனிடம் தர்ம புத்திரர் வரம் பெற்றது- ஆகிய அம்சங்களைக் கொண்ட இந்த  நிகழ்ச்சியைப் படிப்பவர்கள் நல்ல ஆயுள் பெற்று  மக்கட் செல்வமும் பெற்று வாழ்வார்கள். இந்த நிகழ்ச்சியை அறிகிற மனிதர்களுடைய மனம் அதர்மத்திலும், பிறர் பொருளை கவர நினைப்பதிலும் செல்லாது” என்று மஹாபாரம் கூறுகிறது.