“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.

“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது அடியேன்.

“அது சரி, நீ அதிர்ஷ்டம் கொண்டவர். உனக்கு திருச்சி வாழும் பாக்கியம் பெருமாள் அருளி இருக்கார் “

"ஆமாம். நிஜம் தான். காஞ்சிபுரத்தில் பிறந்த அடியேன் படிப்புக்கு பல ஊர்களில் இருந்தும் இந்த அரங்கன் அடியேனை தன் அருகில் தான் வாழும் ஊருக்கு அழைத்து வந்து விட்டான். தவிர ஸ்ரீரங்கத்தில் ஒரு அழகான அபார்ட்மெண்ட் டும் அருளிச் செய்துள்ளான்."

அதனாலே, கடைசி காலத்துலேயாவது அந்த அரங்கன் கால்லே விழுவோமே.“ எங்கும் சுத்தி ரங்கனைச் சேர்” அப்பிடின்னு சொல்வாளே , அதனால ஸ்ரீரங்கத்திலே போய் செட்டில் ஆகலாம்னு இருக்கேன்"

“ஏன் இப்பிடி பிடிவாதம் பிடிக்கறேள்? நமக்குத் தான் மேலூர் ரோட்லே ஆம் இருக்கிறச்சே அத வித்துட்டு சித்திரை வீதிலே போய் வீடு வாங்கனுன்னு சொல்றேளே” இது இன்னொரு ஆத்தில்

“அசடு, பெருமாள் எப்பப் பார்த்தாலும் மேலூர் ரோடுக்கு வருவாரா? சித்திரை வீதின்னா வாசல்லேயே பெருமாள் புறப்பாடு பாக்கலாமில்லியா?” இது
இன்னொரு அகத்தில்.

“அப்பா. உனக்கும் அம்மாவுக்கும் ஸ்ரீரங்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு பதிவு செய்துள்ளேன், சரிதானே", மகன் அமெரிக்காவில் இருந்து அப்பா, அம்மாவை வயசான காலத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க கூறுகிறான்.

இதெல்லாம் தினந்தோறும் பல இடங்களில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி நடக்கும் உரையாடல்கள்தான்.

எல்லோருக்கும் ஆசை, தங்களுடைய வாழ்நாளில் கொஞ்ச நாட்களாவது ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனாதனைத் தரிசிக்க வேண்டும் என்பது.

ஸ்ரீரங்கத்து வீதிகளில், அது சித்திரை வீதியாகட்டும் அல்லது உத்தர வீதியாகட்டும் பல நாட்கள் பிரதக்ஷணம் வர வேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை.

இங்கு ஆசார்யர்கள் பண்ணும் உபன்யாசங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை

நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனைஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை மகான்களை ஈர்த்துள்ளது?

அப்படி என்ன ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறேளா !!??

என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில் !!

ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல். அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டாவது அனுபவிப்போம்.

“வைகுந்தம் அடைவது மண்ணவர் விதியே" என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும் என்பதே.

வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நம் தகுதி நமக்கே தெரியும்) ஸ்ரீரங்கம் "பூலோக வைகுந்தம்" நமக்கு ப்ராப்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புநர்நசாங்கம் யதி சாங்கமேதி !
பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம்
யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம் !!

என்று ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில் ஸ்ரீரங்கத்தில் வாழத் தன் ஆசைதனை வெளிப்படுத்துகிறார்.

ஆசைப்பட்டது அனைத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம். "இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை" என்கிறார் ஆதிசங்கரர்.

ஸ்ரீரங்கம் 108 திவ்விய ஸ்தலங்களில் முதலானது ஆகும். ஆழ்வார்கள் மங்களாசாசனம் (துதித்துப் போற்றிப் பாடி வழிபடுதல்) செய்த வைஷ்ணவ ஆலயங்களை திவ்விய ஸ்தலங்கள் என்பர்.

ஆழ்வார் பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.

"ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்

அம்புயத்தோன் அயோத்தி மன்னற்களித்த கோயில்.

தோலாத தனிவீரன் தொழுத கோயில்,

துணையான வீடணற்குத் துணையா சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்,

செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்,
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்

திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய "அதிகார ஸங்க்ரஹம்" என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.

"ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்"
அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் எட்டு

தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம், ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை.

வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.

பகவான் காடு ரூபமாக எழுந்தருளும் இடம்
நைமிசாரண்யம்

தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில்.

ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.

இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில், ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார்.

மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையிலோ காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக் கோலம்,.

ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும் சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.

“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனை வாழ்த்தினார்கள்.

“இவ்வளவு நேரம் ஆயிடுத்தே, சயனம் கொள்ளுகிற நேரத்திலே எங்க கிளம்பிட்டீர்” என்று அடியவர் திருமாலிருஞ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.

“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகர் மலை அழகன்.

அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,
“எப்போது பொது சேவை முடியும்'
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறாராம்.

“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர். “பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறாராம் பெருமாள் திருவேங்கட முடையான்.விக்கித்து நிற்கிறார் அர்ச்சகர்.

இப்படி எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம்.

நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில், “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்ட கொள்ளு மாகில் நீ கூடிடு கூடலே"

என்று எல்லா திவ்விய தேசத்து எம்பெருமான்களும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று பாசுரத்தில் கூறுகிறார்

எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!! அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்தை எங்கிருந்தாலும் மனதளவில் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டாவது ஸேவிக்கலாம் .

ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாதன் திருப்பாதாரவிந்தங்களே சரணம்